டெய்லர் சதத்தால் இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து வெற்றி!

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் அட்டகாசமாக பேட்டிங் செய்து வெற்றி பெற்றுள்ளது நியூஸிலாந்து அணி.
டெய்லர் சதத்தால் இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து வெற்றி!

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் அட்டகாசமாக பேட்டிங் செய்து வெற்றி பெற்றுள்ளது நியூஸிலாந்து அணி.

ஹேமில்டனில் இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் ஜாதவ், ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ் இடம்பெற்றார்கள். பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஆகிய இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார்கள்.

புதிய தொடக்க ஜோடியான மயங்க் அகர்வால் - பிரித்வி ஷா ஆகிய இருவரும் துடிப்புடன் விளையாடி பவுண்டரிகள் அடித்தார்கள். பந்துவீச்சுக்குச் சாதகமான சூழல் நிலவியபோதும் விரைவாக ரன்கள் எடுக்க முயன்றார்கள். ஆனால் 3 பவுண்டரிகள் அடித்து 20 ரன்களில் வெளியேறினார் பிரித்வி ஷா. 6 பவுண்டரிகள் அடித்து நம்பிக்கை ஏற்படுத்திய மயங்க் அகர்வால், அடுத்த ஓவரிலேயே 31 ரன்களில் செளதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் 9-வது ஓவரிலேயே பொறுப்புடன் விளையாடி அணியைக் கரை சேர்க்கவேண்டிய பொறுப்பு கோலிக்கும் ஷ்ரேயஸ் ஐயருக்கும் வந்தது. 

சூழல் சவாலாக இருந்தாலும் பந்துகளை வீணடிக்காமல் ரன்கள் சேர்த்தார் கோலி. ஆனால் ஷ்ரேயஸ் ஐயர் ஆரம்பத்தில் மிகவும் தடுமாறினார். நிதானமாகவே ரன்கள் சேர்த்தார். 25-வது ஓவரின் முடிவில் இந்திய அணி, 2 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. 61 பந்துகளில் அரை சதமெடுத்தார் கோலி. நம்பிக்கையுடன் விளையாடி 100 ரன்கள் கூட்டணி அமைத்தார்கள் கோலியும் ஷ்ரேயஸ் ஐயரும்.

சமீபகாலமாக கோலி ஒருநாள் சதங்கள் எடுப்பது குறைந்துவிட்டது. இந்தமுறையும் 51 ரன்களில் சோதியின் அற்புதமான பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார். 5-ம் நிலை வீரராகக் களமிறங்கினார் கே.எல். ராகுல். கோலி 29-வது ஓவரிலேயே கிளம்பிவிட்டதால் அடுத்த 20 ஓவர்களுக்கும் இந்திய அணியின் ஸ்கோர் இவர்களை நம்பியே இருந்தது.

கடினமாகப் போராடி, 66 பந்துகளில் அரை சதமெடுத்தார் ஷ்ரேயஸ் ஐயர். விரைவாக ரன்கள் எடுப்பார் என்கிற நம்பிக்கையில் தான் இந்திய அணி நிர்வாகம் ராகுலை 5-ம் நிலை வீரராகக் களமிறக்குகிறது. அந்த நம்பிக்கையை இந்த முறையும் ராகுல் வீணாக்கவில்லை. 35-வது ஓவரில் சோதி பந்துவீச்சில் அடுத்தடுத்து இரு சிக்ஸர்கள் அடித்தார். பிறகு செளதி வீசிய ஓவரிலும் தொடர்ச்சியாக இரு சிக்ஸர்கள் அடித்தார். செளதி வீசிய 40-வது ஓவரில் 3 பவுண்டரிகள் அடித்தார் ஐயர். 40-வது ஓவரின் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி நிச்சயம் 300 ரன்கள் அடிக்கும் என்கிற நம்பிக்கையுடன் இருந்தார்கள் இந்திய ரசிகர்கள். 

ஐயரும் ராகுலும் பிரமாதமாக விளையாடியதால் இன்னொரு 100 ரன்கள் கூட்டணி இந்திய அணிக்குக் கிடைத்தது. 2015-க்குப் பிறகு முதல்முறையாக 3-வது மற்றும் 4-வது விக்கெட்டுகளுக்கு இந்திய அணி 100 ரன்களுக்குக் கூட்டணி அமைத்துள்ளது. இதனால் இந்திய ஒருநாள் கிரிக்கெட்டுக்கு 4-ம், 5-ம் நிலைகளில் களமிறங்கும் ஸ்ரேயஸ் ஐயரும் ராகுலும் புத்துணர்ச்சி அளித்து வருகிறார்கள் என்றே சொல்லலாம். 4 சிக்ஸர்களுடன் 41 பந்துகளில் அரை சதமெடுத்தார் ராகுல். அதே ஓவரில் 101 பந்துகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார் ஷ்ரேயஸ் ஐயர். எனினும் கூடுதலாகப் பெரிய அளவில் ரன்கள் சேர்க்காமல் 103 ரன்களில் செளதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மணிஷ் பாண்டேவுக்குப் பதிலாக இந்திய அணியில் இடம்பிடித்த ஜாதவ், செளதியின் கடைசி ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடித்தார். ராகுல் மேலும் ஒரு பவுண்டரி அடிக்க, செளதியின் கடைசி ஓவரில் 20 ரன்கள் சேர்த்தார்கள் இந்திய வீரர்கள். ராகுலும் ஜாதவும் கடைசி 5 ஓவர்களில் அதிரடியாக விளையாடி, 56 ரன்கள் சேர்த்தார்கள்.

இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் எடுத்தது. ராகுல் 64 பந்துகளில் 6 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 88 ரன்களும் ஜாதவ் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 26 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 

இந்திய அணிக்கு எதிராக நியூஸிலாந்து அணி 280 ரன்களுக்கு மேல் இலக்கை விரட்டியதில்லை. இதனால் இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெல்லும் என்கிற நம்பிக்கை இந்திய ரசிகர்களுக்கு ஏற்பட்டது.

பெரிய ஸ்கோர் என்பதால் இந்திய அணி எப்படியும் வென்றுவிடும் என்று நம்பிய ரசிகர்களுக்கு இன்று அதிர்ச்சி காத்திருந்தது. 15 ஓவர்கள் வரை தொடக்க வீரர்களை இந்தியப் பந்துவீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை. கப்தில், தாக்குர் பந்துவீச்சில் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். ப்ளண்டல், 9 ரன்களில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் வெளியேறினார். இதனால் ஆட்டம் இந்திய அணியின் வசம் உள்ளதாகக் கருதப்பட்டது. ஆனால் பிறகு களமிறங்கிய டெய்லர், ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். 

82 பந்துகளில் 78 ரன்கள் எடுத்த நிகோல்ஸை கோலி ரன் அவுட் செய்தார். இதன்பிறகு நியூஸிலாந்துக்கு அற்புதமான கூட்டணி அமைந்தது. 45 பந்துகளில் அரை சதமெடுத்தார் டெய்லர். டாம் லதமும் விரைவாக ரன்கள் சேர்த்து டெய்லருக்கு நல்ல இணையாக விளங்கினார். குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்குர் ஆகிய இருவருடைய ஓவர்களையும் குறிவைத்துத் தாக்கினார்கள் நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள். தாக்குர் வீசிய 40-வது ஓவரில் டெய்லரும் லதமும் 22 ரன்கள் எடுத்தார்கள். 48 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 69 ரன்களில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் லதம். 

பிறகு 73 பந்துகளில் சதமடித்தார் டெய்லர். இன்று அவருடைய பேட்டிங் மிக அற்புதமாக அமைந்து நியூஸிலாந்து ரசிகர்களுக்கு மிகவும் ஆறுதல் அளித்தது. ஆனால் ஷமி வீசிய 46-வது ஓவரில் நீஷம் 9 ரன்களிலும் கிராண்ட்ஹோம் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தார்கள். இதனால் டி20 ஆட்டங்களில் ஏற்பட்டதுபோல நியூஸிலாந்து அணி மீண்டும் தடம் புரளுமா என்கிற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் டெய்லர் கடைசிவரைக் களத்தில் இருந்து அணியைப் பத்திரமாகக் கரை சேர்த்தார்.

கடைசி ஓவர் வரை இழுக்காமல் 48.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 348 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது நியூஸிலாந்து அணி. டெய்லர் 109, சான்ட்னர் 12 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். ஷர்துல் தாக்குர் 9 ஓவர்களில் 1 விக்கெட் எடுத்து 80 ரன்கள் கொடுத்தார். குல்தீப் யாதவ், 10 ஓவர்களில் 2 விக்கெட் எடுத்து 84 ரன்கள் கொடுத்தார். 

3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது நியூஸிலாந்து அணி. 2-வது ஒருநாள் ஆட்டம் பிப்ரவரி 8 அன்று நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com