இந்திய அணிக்குப் பலத்த பின்னடைவு: 2-வது டெஸ்டிலிருந்து இஷாந்த் சர்மா விலகல்?

ரஞ்சி போட்டியின்போது கணுக்காலில் ஏற்பட்ட காயம் மீண்டும் வலியை உண்டாக்குவதால் 2-வது டெஸ்டில் இஷாந்த் சர்மா பங்கேற்பது சந்தேகம் என...
இந்திய அணிக்குப் பலத்த பின்னடைவு: 2-வது டெஸ்டிலிருந்து இஷாந்த் சர்மா விலகல்?

முதல் டெஸ்டில் சிறப்பாக விளையாடிய சில இந்திய வீரர்களில் ஒருவர் இஷாந்த் சர்மா. முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

இந்தியா - நியூஸிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் பிப்ரவரி 21 அன்று தொடங்கியது. முதல் டெஸ்டை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நியூஸிலாந்து அணி. இதனால் டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. 2-வது டெஸ்ட், நாளை தொடங்குகிறது.

இந்நிலையில் ரஞ்சி போட்டியின்போது கணுக்காலில் ஏற்பட்ட காயம் மீண்டும் வலியை உண்டாக்குவதால் 2-வது டெஸ்டில் இஷாந்த் சர்மா பங்கேற்பது சந்தேகம் எனத் தெரிய வருகிறது. இது இந்திய அணிக்குப் பலத்த பின்னடைவாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. 2-வது டெஸ்டில் வென்று தொடரை 1-1 என சமனில் முடிக்க இந்திய அணி முயன்று வரும் நிலையில் இஷாந்த் சர்மா இல்லாமல் 2-வது டெஸ்டில் இந்திய அணி பங்கேற்கும் நிலை ஏற்பட்டால் பந்துவீச்சில் முழு பலத்தை நிரூபிக்க முடியாமல் போகும். எனினும் இஷாந்த் சர்மாவின் காயம் குறித்து பிசிசிஐயிடமிருந்து இதுவரை அறிவிப்பு எதுவும் வரவில்லை.

தில்லியில் நடைபெற்ற விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி ஆட்டத்தில் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்குக் காயம் ஏற்பட்டது. விதர்பாவின் 2-வது இன்னிங்ஸில், 5-வது ஓவரை இஷாந்த் சர்மா வீசினார். அப்போது, கள நடுவரிடம் எல்பிடபிள்யூ கோரியபோது தடுமாறி கீழே விழுந்தார். இதனால் அவருக்குக் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மைதானத்தில் இஷாந்துக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இஷாந்த் சர்மாவின் காயம் கிரேட் 3 என்கிற அளவில் தீவிரமாக உள்ளதால், அவரால் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பது சந்தேகம் என முதலில் கூறப்பட்டது. ஆனால், வெகுவிரைவில் காயத்திலிருந்து குணமாகி, உடற்தகுதித் தகுதித் தேர்வில் தேர்ச்சியடைந்து, இந்திய அணியுடன் இணைந்தார் இஷாந்த் சர்மா. முதல் டெஸ்டின்போது ஜெட்லேக்கினால் அவதிப்பட்டபோதும் சிறப்பாகப் பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

முதல் டெஸ்டில், 2-ம் நாள் ஆட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இஷாந்த் சர்மா கூறியதாவது: கடந்த இரு நாள்களாக  நான் தூங்கவில்லை. இதனால் உடல் அசதியினால் இன்று மிகவும் சிரமப்பட்டேன். நான் விரும்பியதுபோல என்னால் இன்று பந்துவீச முடியவில்லை. என்னை விளையாடச் சொன்னார்கள். விளையாடினேன். அணிக்காக எதையும் செய்யத் தயார். என் பந்துவீச்சில் நான் திருப்தியடையாமல் இல்லை. நேற்றிரவும் என்னால் 40 நிமிடம் கூட தூங்கமுடியவில்லை. அதற்கு முந்தைய நாளில் மூன்று மணி நேரம் தான் தூங்கினேன். எனவே அசதியாக உள்ள என் உடல் மீது எனக்குத் திருப்தியாக இல்லை. ஜெட்லேக்கிலிருந்து எவ்வளவு சீக்கிரம் விடுபடுகிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் மைதானத்தில் உங்கள் உழைப்பைச் செலுத்த முடியும். நல்ல தூக்கத்தை விடவும் சிறந்தது வேறு இல்லை. நன்கு தூங்கினால் உற்சாகத்துடன் மைதானத்தில் பந்துவீசமுடியும். காயம் காரணமாக என்னால் ஆறு வாரங்கள் விளையாட முடியாது என்றார்கள். ஆனால் என்சிஏ-வில் கடுமையாக உழைத்து என்னை மீண்டும் டெஸ்டில் விளையாட வைத்துள்ளார்கள் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com