குடியுரிமை சட்டம் குறித்து விராட் கோலி

ஒருவர் ஒன்று சொல்கிறார், இன்னொருவர் இன்னொன்று சொல்கிறார் என்பதற்காக எனக்கு முழு விவரம் தெரியாத ஒன்றை...
குடியுரிமை சட்டம் குறித்து விராட் கோலி

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளிலிருந்து 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன்பு வரை இந்தியாவில் குடியேறிய ஹிந்துக்கள், சீக்கியா்கள், பெளத்தா்கள், சமணா்கள், பாா்சி இனத்தவா்கள், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்றும், இந்த விவகாரத்தில் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் எனவும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சமீபத்தில் தெரிவித்தாா். எனினும், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து நாட்டில் தொடா் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணி கேப்டன் விராட் கோலியிடம் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு விராட் கோலி பதில் அளித்ததாவது:

ஒருவர் ஒன்று சொல்கிறார், இன்னொருவர் இன்னொன்று சொல்கிறார் என்பதற்காக எனக்கு முழு விவரம் தெரியாத ஒன்றைப் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. எனவே குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது. இதுகுறித்து இருவேறு கருத்துகள் உள்ள நிலையில் பொறுப்பற்ற முறையில் பதில் கூற முடியாது. கருத்து சொல்வதற்கு எனக்கு அது குறித்து முழு விவரம் தெரிந்திருக்கவேண்டும் என்றார்.

அஸ்ஸாமில் கடந்த 1971-ஆம் ஆண்டு மார்ச் 24-ஆம் தேதிக்குப் பிறகு சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கண்டறியும் நோக்கில், தேசிய குடிமக்கள் பதிவேட்டைப் புதுப்பிக்கும் பணி (என்ஆர்சி) கடந்த 2015-ஆம் ஆண்டு தொடங்கியது. இதன் இறுதிப் பட்டியல் கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இதில், 19 லட்சம் பேர் விடுபட்டிருந்தனர். இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, அஸ்ஸாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்நிலையில்  இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 ஆட்டம் அஸ்ஸாமில் உள்ள குவாஹாட்டியில் நாளை நடைபெறுகிறது.

நகரம் மிகவும் பாதுகாப்பாக உள்ளது. சாலைகளில் எந்தப் பிரச்னையும் தென்படவில்லை என்று கூறினார் கோலி.

டி20 ஆட்டத்தைப் பார்க்க வரும் ரசிகர்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கைக்குட்டை, துண்டு ஆகியவற்றைக் கூட ரசிகர்கள் கொண்டுவரக்கூடாது என்று கட்டளையிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com