நெருக்கடி அளித்த ஆஸி. பந்துவீச்சாளர்கள்: 255 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்திய அணி!

இந்திய அணி 49.1 ஓவர்களில் 255 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
நெருக்கடி அளித்த ஆஸி. பந்துவீச்சாளர்கள்: 255 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்திய அணி!

மும்பையில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 255 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர், மும்பையில் இன்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் டுபே, மணீஷ் பாண்டே, கெதர் ஜாதவ், சஹால், நவ்தீப் சைனி ஆகியோர் விளையாடவில்லை. இந்திய அணியில் ரோஹித், ராகுல், தவன் ஆகிய மூவரும் இடம்பெற்றுள்ளார்கள். இதனால் கெதர் ஜாதவ் அணியில் இடம்பெறவில்லை. ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக அணியில் இடம்பெற்றுள்ளார். 

தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும் ஷிகர் தவனும் களமிறங்கினார்கள். ஆஸ்திரேலிய அணி சிறப்பான பந்துவீச்சைக் கொண்டிருப்பதால் ஆரம்பத்தில் ரோஹித் சர்மாவும் தவனும் கவனமாக விளையாடினார்கள். 15 பந்துகளில் 10 ரன்கள் எடுத்த ரோஹித் சர்மா, 10 ரன்களில் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். வழக்கமாக 3-ம் நிலை வீரராகக் களமிறங்கும் கோலி இன்று அடுத்ததாகக் களமிறங்கத் திட்டமிட்டதால் ராகுல் விளையாட வந்தார். இது ரசிகர்களுக்கும் கிரிக்கெட் நிபுணர்களுக்கும் அதிர்ச்சியை அளித்தது. இந்தப் பரிசோதனை முயற்சி பலன் அளிக்குமா என்கிற கேள்வி எழுந்தது.

தவன் நம்பிக்கையுடன் விளையாடி சில பவுண்டரிகளை அடித்தார். இதனால் இந்திய அணி 10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்தது. 

தன் ஆட்டத்தின் மீது பல சந்தேகங்கள் விழுந்துள்ளதை உணர்ந்த தவன், இன்று இந்திய அணியின் பேட்டிங்கை வழிநடத்தினார். 66 பந்துகளில் அரை சதமெடுத்தார். 20 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்து பாதுகாப்பான நிலையில் இருந்தது இந்திய அணி. 

61 பந்துகளை எதிர்கொண்டு 47 ரன்கள் எடுத்த ராகுல், அகர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கோலி களமிறங்கினார். எனினும் அடுத்த ஓவரில் தவன் 74 ரன்களில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் களத்தில் இரு புதிய பேட்ஸ்மேன்கள் ஆடவேண்டிய நிலைமை உருவானது.

இந்திய அணி 30 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்தது. கடைசி 10 ஓவர்களில் 47 ரன்கள் கொடுத்து இந்திய அணியின் முக்கியமான 2 விக்கெட்டுகளை வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி. எனினும் கோலி இந்திய அணியை 50 ஓவர்கள் வரை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஸாம்பா பந்துவீச்சில் சிக்ஸர் அடித்த கோலி, அடுத்தப் பந்தில் 16 ரன்களில் எதிர்பாராதவிதமாக ஆட்டமிழந்தார். இதனால் ரசிகர்கள் மேலும் அதிர்ச்சியானார்கள். அடுத்த ஓவரில் ஷ்ரேயஸ் ஐயர், 4 ரன்களில் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்ததால் இந்திய அணி மேலும் தடுமாற்றம் அடைந்தது. 

இதன்பிறகு மீதமுள்ள ஓவர்களை முழுவதுமாக விளையாட வேண்டிய பொறுப்பு இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ஏற்பட்டது.

ஜடேஜாவும் ரிஷப் பந்தும் ஓரளவு தாக்குப்பிடித்து ஆளுக்கொரு சிக்ஸர் அடித்தார்கள். எனினும் இருவரும் அடுத்தடுத்த ஓவர்களில் வெளியேறினார்கள். ஜடேஜா 25 ரன்களும் ரிஷப் பந்த் 28 ரன்களும் எடுத்தார்கள். 

கடந்த சில ஆட்டங்களில் அதிரடியாக விளையாடி ரசிகர்களையும் இந்திய அணியையும் மகிழ்வித்த ஷர்துல் தாக்குர் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு குல்தீப் யாதவ் 17 ரன்களிலும் முகமது ஷமி 10 ரன்களிலும் அடுத்தடுத்தப் பந்துகளில் ஆட்டமிழந்தார்கள். 

இந்திய அணி 49.1 ஓவர்களில் 255 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஸ்டார்க் அற்புதமாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளையும் கம்மின்ஸ், ரிச்சர்ட்சன் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com