கடைசிப் பந்தில் முடிவு: மே.இ. தீவுகள் அணியை வீழ்த்தி அதிர்ச்சியளித்த அயர்லாந்து அணி!

அட்டகாசமான பேட்டிங், பந்துவீச்சினால் அயர்லாந்து அணி மே.இ. தீவுகள் அணியை வீழ்த்தி அதிர்ச்சியளித்துள்ளது.
கடைசிப் பந்தில் முடிவு: மே.இ. தீவுகள் அணியை வீழ்த்தி அதிர்ச்சியளித்த அயர்லாந்து அணி!

அயர்லாந்து அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் பங்கேற்கிறது.

ஒருநாள் தொடரை 3-0 என மே.இ. தீவுகள் அணி வென்ற நிலையில் டி20 தொடரையும் எளிதாக வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அட்டகாசமான பேட்டிங், பந்துவீச்சினால் அயர்லாந்து அணி மே.இ. தீவுகள் அணியை வீழ்த்தி அதிர்ச்சியளித்துள்ளது.

செயிண்ட் ஜார்ஜில் நேற்று நடைபெற்ற டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் பால் ஸ்டிர்லிங் 47 பந்துகளில் 8 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 95 ரன்கள் எடுத்தார். மற்றொரு தொடக்க வீரரான அனுபவம் வாய்ந்த கெவின் ஓ பிரையன் 32 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 12.3 ஓவர்களில் 154 ரன்கள் குவித்து பலமான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். நீண்ட நாளைக்குப் பிறகு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடிய டுவைன் பிராவோ நான்கு ஓவர்கள் வீசி, 28 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

மே.இ. தீவுகள் அணி பேட்டிங் செய்தபோது முதல் ஆறு வீரர்களும் 20 ரன்களுக்கு மேல் எடுத்தாலும் இலக்கை அடைய முடியாமல் போனது. லூயிஸ் 53 ரன்கள் எடுத்தார். மே.இ. தீவுகள் அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்கிற நிலையில் அந்த அணியால் 8 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மே.இ. தீவுகள் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் மட்டுமே எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது அயர்லாந்து அணி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com