முகப்பு விளையாட்டு செய்திகள்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்
By DIN | Published On : 20th January 2020 07:59 PM | Last Updated : 20th January 2020 07:59 PM | அ+அ அ- |

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவக் ஜோகோவிச் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் பட்டங்களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் இன்று (திங்கள்கிழமை) மெல்போர்னில் தொடங்கியது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஜெர்மன் வீரர் ஜேன் லென்னார்ட் ஸ்ட்ரூஃப்பை எதிர்கொண்டார்.
டென்னிஸ் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள நோவக் ஜோகோவிச்சுக்கு ஸ்ட்ரூஃப் கடுமையான போட்டியாகத் திகழ்ந்தார். இதனால், முதல் செட் டை பிரேக்கரில் முடிந்தது. இதையடுத்து, 7(7)-6(5) என முதல் செட்டை ஜோகோவிச் கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டை 6-2 என ஜோகோவிச் கைப்பற்ற, 3வது செட்டில் ஸ்ட்ரூஃப் மீண்டும் ஆதிக்கம் செலுத்தினார். இதன்மூலம், 3வது செட்டை அவர் 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சியளித்தார்.
இதன்பிறகு, மீண்டும் எழுச்சி கண்ட ஜோகோவிச் அடுத்த செட்டை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதன்மூலம், 7(7)-6(5), 6-2, 2-6, 6-1 என்கிற செட் கணக்கில் வெற்றி பெற்ற ஜோகோவிச் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.