தோனி வழக்கமாக அமரும் பேருந்து இருக்கையில் யாரும் அமர்வதில்லை: விடியோவில் நெகிழும் சஹால்!

இந்திய அணி பயணம் செல்லும் பேருந்தில் தோனி வழக்கமாக அமரும் இருக்கையில் தற்போது யாரும் அமர்வதில்லை என்று...
தோனி வழக்கமாக அமரும் பேருந்து இருக்கையில் யாரும் அமர்வதில்லை: விடியோவில் நெகிழும் சஹால்!

இந்திய அணி பயணம் செல்லும் பேருந்தில் தோனி வழக்கமாக அமரும் இருக்கையில் தற்போது யாரும் அமர்வதில்லை என்று சுழற்பந்துவீச்சாளர் சஹால் கூறியுள்ளார். 

மூத்த வீரரான தோனி கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அரையிறுதியில் இருந்து எந்த ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை. டெஸ்ட்டில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்ட அவா், ஒருநாள், டி20 ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு முடிவை அறிவிப்பாரா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. வரும் ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக ஆடினால், டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது என பயிற்சியாளா் சாஸ்திரி கூறியிருந்தாா். இந்நிலையில் 2019-20 ஆண்டுக்கான 27 வீரா்கள் பெயா்கள் கொண்ட ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் தோனியின் பெயா் நீக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டியில் நன்றாக விளையாடிய பிறகு இந்திய அணிக்குத் தோனி தேர்வாக வாய்ப்புண்டா என்கிற கேள்வி ரசிகர்களிடம் உள்ளது. ஒரு பேட்டியில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியதாவது: ஐபிஎல் போட்டியில் விளையாட ஆர்வமாக இருந்தால் அவர் அதற்குத் தயாராக இருப்பார். ஐபிஎல் போட்டியில் விளையாட ஆரம்பிப்பார். தனக்கு ஐபிஎல் போட்டி சரியாக அமையவில்லையென்றால் நன்றி கூறி விடைபெற்று விடுவார் என்று பேட்டியளித்துள்ளார். 

இந்த நிலையில் இந்திய அணியில் தோனி இல்லாதது குறித்து உணர்வுபூர்வமான கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார் சுழற்பந்துவீச்சாளர் சஹால். இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் தற்போது சுற்றுப்பயணம் செய்துவருகிறது. ஆக்லாந்தில் இருந்து ஹேமில்டன் செல்லும் வழியில் அணியின் பேருந்தில் இருந்து விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சஹால். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இந்த இருக்கையில் தான் எம்.எஸ். தோனி எப்போதும் அமர்வார். இப்போது அந்த இருக்கையில் யாரும் அமர்வதில்லை. அவர் எங்களுடன் இல்லாதது வருத்தம் அளிக்கிறது என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து சிஎஸ்கே அணியின் பேருந்தில் கடைசி இருக்கையில் தோனி அமர்ந்து செல்லும் விடியோ ஒன்றை சிஎஸ்கே ட்விட்டர் கணக்கு வெளியிட்டுள்ளது.

இந்தியா - நியூஸிலாந்து இடையிலான 3-வது டி20 ஆட்டம் நாளை ஹேமில்டனில் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com