சூப்பர் ஓவரில் இரு சிக்ஸர்கள் அடித்த ரோஹித் சர்மா: டி20 தொடரை வென்றது இந்தியா!

யாரும் எதிர்பாராதவிதத்தில் 3-வது டி20 ஆட்டத்தைப் பரபரப்பான முறையில் வென்ற இந்திய அணி...
சூப்பர் ஓவரில் இரு சிக்ஸர்கள் அடித்த ரோஹித் சர்மா: டி20 தொடரை வென்றது இந்தியா!

நியூஸிலாந்து வெற்றி பெற 24 பந்துகளில் 43 ரன்கள் தேவை. இதில் 2 ஓவர்களை பும்ரா வீசவேண்டும்.

எந்த அணி வெல்லும் என நினைப்பீர்கள்?

நியூஸிலாந்து வெற்றி பெற 5 பந்துகளில் 3 ரன்கள் தேவை. ஷமி கடைசி ஓவரை வீசுகிறார். வில்லியம்சன், டெய்லர் களத்தில் உள்ளார்கள்.

எந்த அணி வெல்லும் என நினைப்பீர்கள்?

இன்று, நம்பமுடியாத டி20 ஆட்டத்தைக் காணும் வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைத்தது.

ஹேமில்டனில் இன்று நடைபெற்ற 3-வது டி20 மிகவும் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. கடைசி ஓவரில் ஆட்டம் சமன் ஆனதையடுத்து சூப்பர் ஓவரில் முடிவு எட்டப்பட்டது. சூப்பர் ஓவரில் கடைசி இரு பந்துகளில் சிக்ஸர்கள் அடித்து இந்திய அணிக்கு வெறியைத் தேடித் தந்தார் ரோஹித் சர்மா. இதன்மூலம் டி20 தொடரை இந்திய அணி வென்றுள்ளது. இப்படிக் காட்சிகள் மாறும் என எந்தவொரு இந்திய ரசிகரும் எண்ணியிருக்க முடியாது.

இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 ஆட்டம் ஹேமில்டனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அந்த அணியில் ஒரு மாற்றம். இந்திய அணியில் மாற்றம் எதுவுமில்லை. ஆக்லாந்தில் நடைபெற்ற இரு டி20 ஆட்டங்களையும் வென்று 2-0 என டி20 தொடரில் இந்திய அணி முன்னிலை வகித்ததால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் நியூஸிலாந்து அணிக்கு இருந்தது.

இந்திய அணி ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடியது. 5-வது ஓவரின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது ரோஹித் சர்மா 24 ரன்கள் எடுத்திருந்தார். பவர்பிளேயின் கடைசி ஓவரை பென்னட் வீசினார். முதல் பந்தில் ராகுல் ஒரு ரன் எடுத்தார். கடைசி 5 பந்துகளை எதிர்கொண்ட ரோஹித் சர்மா, முதலில் 2 சிக்ஸர்கள் அடித்தார், அடுத்து இரு பவுண்டரிகள், கடைசிப் பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸர் என அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அந்த ஓவரில் மட்டும் இந்திய அணிக்கு 27 ரன்கள் கிடைத்தன. ரோஹித் சர்மா 23 பந்துகளில் அரை சதமெடுத்தார். 6-ஓவர்களின் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்தது இந்திய அணி.

டி20 ஆட்டத்தின் பவர்பிளேயில் அரை சதம் எடுத்த முதல் இந்திய வீரர் என்கிற பெருமையையும் ரோஹித் பெற்றார். இதற்கு முன்பு அதிகபட்சமாக தவன் 48 ரன்கள் எடுத்திருந்தார். 

மேலும் இந்த ஆட்டத்தின் மூலம் தொடக்க வீரராக 10,000 ரன்கள் எடுத்துள்ளார் ரோஹித் சர்மா. இத்தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 

19 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ராகுல் 9-வது ஓவரின் முடிவில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ரன் குவிக்கும் வேகம் குறைந்து போனது. கோலிக்குப் பதிலாக 3-ம் நிலை வீரராகக் களமிறங்கிய ஷிவம் டுபே, ரன் எடுக்கத் தடுமாறினார். 7 பந்துகளை எதிர்கொண்டு 3 ரன்களை மட்டுமே சேர்த்து பென்னட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவருக்கு முன்பு ரோஹித் சர்மா 40 பந்துகளில் 65 ரன்களுடன் ஆட்டமிழந்ததால் இந்திய அணி சில ஓவர்களுக்குத் தடுமாற ஆரம்பித்தது. அவருடைய விக்கெட்டையும் பென்னட் தான் வீழ்த்தினார். ஒரே ஓவரில் இரு விக்கெட்டுகள் விழுந்ததால் அடுத்து வந்த கோலியும் ஷ்ரேயஸ் ஐயரும் ஆரம்பத்தில் நிதானமாக விளையாடினார்கள். ஏழு ஓவர்களுக்குப் பிறகு 11 ஆக இருந்த ரன்ரேட் 11 ஓவர்களுக்குப் பிறகு 9 ஆகக் குறைந்தது. இரு ஓவர்கள் நிதானமாக விளையாடிய கோலி, ரன் குவிக்கும் வேகத்தை அதிகரித்தார்.

16 பந்துகளில் 17 ரன்கள் எடுத்த ஷ்ரேயஸ் ஐயர், சான்ட்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக விராட் கோலி, 38 ரன்களில் பென்னட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 27 பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடித்தார் கோலி. 

20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 10, மணிஷ் பாண்டே 14 ரன்கள் எடுத்துக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். நியூஸிலாந்துத் தரப்பில் பென்னட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நியூஸிலாந்து அணிக்கு பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் கிடைத்தது. கப்தில் 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். மன்ரோவை 14 ரன்களில் வீழ்த்தினார் ஜடேஜா. இன்று அவர் சிறப்பாகப் பந்துவீசியது இந்திய அணிக்கு மிகவும் உதவியது. விரைவாக ரன்கள் குவிக்கக் களமிறக்கப்பட்ட சான்ட்னர் 11 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து சஹால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பிறகு வந்த கிராண்ட்ஹோம் 12 பந்துகளில் 5 ரன்கள் மட்டும் எடுத்து தாக்குர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

எனினும் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், இந்திய அணி பந்துவீச்சாளர்களுக்குப் பெரும் சவாலாக விளங்கினார். 28 பந்துகளில் அரை சதமெடுத்த வில்லியம்சன், தொடர்ந்து சிக்ஸர்களும் பவுண்டரிகளும் அடித்து இந்திய அணிக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தார். அதிலும் உலகின் சிறந்த பந்துவீச்சாளரான பும்ராவைக் குறி வைத்து ரன்கள் குவித்தார். பும்ரா பந்துவீச்சில் 12 பந்துகளை எதிர்கொண்டு 25 ரன்கள் எடுத்தார் வில்லியம்சன். அதில் 5 பவுண்டரிகள். 

கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை என்கிறபோது ஷமி பந்துவீசினார். முதல் பந்திலேயே டெய்லர் சிக்ஸர் அடித்ததால் இந்திய ரசிகர்கள் நம்பிக்கை இழந்தார்கள். ஆனால், 5 பந்துகளில் 3 ரன்களில் என்கிற எளிதான நிலையிலிருந்து ஆட்டம் மாறியதுதான் அதிசயம். 3-வது பந்தில் 95 ரன்களில் ஆட்டமிழந்தார் வில்லியம்சன். 48 பந்துகளை எதிர்கொண்டு 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடித்தார் வில்லியம்சன். 

அடுத்து வந்த சைஃபர்ட், 2 பந்துகளிலும் தடுமாறினார். கடைசிப் பந்தை எதிர்கொண்டார் டெய்லர். அப்போது ஆட்டம் சமனில் இருந்தது. 1 ரன் எடுத்தால் வெற்றி என்கிற நிலையில் கடைசிப் பந்தில் டெய்லரை 17 ரன்களில் போல்ட் செய்தார் ஷமி. இதனால் ஆட்டம் சமன் ஆகி, சூப்பர் ஓவர் நிலைக்குச் சென்றது. 

சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய நியூஸிலாந்து அணி, பும்ராவின் ஓவரில் விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் எடுத்தது. இந்த முறையும் பும்ராவின் பந்துவீச்சில் 1 ஒரு சிக்ஸரும் 1 பவுண்டரியும் அடித்து அசத்தினார் வில்லியம்சன்.

18 ரன்கள் இலக்கை எதிர்கொண்ட இந்திய அணி, முதல் 2 பந்துகளில் 3 ரன்கள் தான் எடுத்தது. பிறகு ராகுல் ஒரு பவுண்டரி அடித்தார். கடைசி இரு பந்துகளில் 10 ரன்கள் தேவை என்கிற பொறுப்பு ரோஹித் சர்மா வசம் சென்றது.

செளதி வீசிய 5-வது பந்தில் சிக்ஸர் அடித்தார் ரோஹித். கடைசிப் பந்தில் 4 ரன்கள் தேவை என்கிற நிலையில் மற்றுமொரு சிக்ஸர் அடித்து இந்திய அணிக்கு நம்பமுடியாத வெற்றியைத் தேடித் தந்தார் ரோஹித் சர்மா.

யாரும் எதிர்பாராதவிதத்தில் 3-வது டி20 ஆட்டத்தைப் பரபரப்பான முறையில் வென்ற இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரையும் வென்றுள்ளது. இதன்மூலம் நியூஸிலாந்து மண்ணில் முதல்முறையாக டி20 தொடரை வென்றுள்ளது இந்திய அணி. 

மிகச்சிறப்பாக விளையாடி, இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்த ரோஹித் சர்மா, ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com