ஆதாரமில்லாத குற்றச்சாட்டு: 2011 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு நற்சான்றிதழ் வழங்கிய ஐசிசி!

2011 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் மேட்ச் ஃபிக்ஸிங் நடைபெற்றதாக எழுந்த புகார் குறித்து ஐசிசி அமைப்பு...
ஆதாரமில்லாத குற்றச்சாட்டு: 2011 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு நற்சான்றிதழ் வழங்கிய ஐசிசி!

2011 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் மேட்ச் ஃபிக்ஸிங் நடைபெற்றதாக எழுந்த புகார் குறித்து ஐசிசி அமைப்பு தன்னுடைய விளக்கத்தை அளித்துள்ளது.

2011 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியை வீழ்த்தி தோனி தலைமையிலான இந்தியா உலக சாம்பியன் ஆனது. எனினும், இந்த ஆட்டத்தில் மேட்ச் பிக்ஸிங் நடந்துள்ளது என இலங்கை முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தநந்தா சமீபத்தில் குற்றம் சாட்டினார். இதனால் கிரிக்கெட் உலகம் அதிர்ச்சியடையவில்லை. ஆனால் இந்த விவகாரத்தில் ஆர்வம் செலுத்தியது.

ஒரு பேட்டியில் மஹிந்தநந்தா கூறியதாவது: 2011 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் மேட்ச் பிக்ஸிங் நடந்துள்ளது. நான் சொல்வதில் உறுதியாக உள்ளேன். நான் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது இது நடைபெற்றது.

நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு விவரங்களை நான் வெளியிட மாட்டேன். இதைப் பொறுப்புணர்வுடன் கூறுகிறேன். இதுகுறித்த விவாதத்துக்கும் நான் தயாராக உள்ளேன். மக்கள் அந்த ஆட்டத்தின் முடிவைப் பற்றி கவலைப்படுகிறார்கள். இதில் கிரிக்கெட் வீரர்களை நான் தொடர்புபடுத்தி பேசமாட்டேன். ஆனால் சிலர் மேட்ச் ஃபிக்ஸிங்கில் கட்டாயமாக ஈடுபட்டுள்ளார்கள் என்றார்.

இலங்கையின் முன்னாள் அமைச்சரே இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டைக் கூறினால் அமைதியாக இருக்க முடியுமா? இது ஓர் அபத்தமான குற்றச்சாட்டு என்று இலங்கை முன்னாள் வீரர்களான சங்கக்காராவும் ஜெயவர்தனேவும் கூறினார்கள்.

மஹிந்தநந்தாவின் குற்றச்சாட்டு குறித்து 2011 உலகக் கோப்பையில் இலங்கை அணியின் கேப்டனாக இருந்த சங்கக்காரா கூறியதாவது: இது ஒரு மோசமான குற்றச்சாட்டு. தன்னிடம் ஆதாரம் இருப்பதாக அவர் கூறுவதால் ஐசிசியின் ஊழல் தடுப்புப் பிரிவுக்குச் சென்று ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். இதன்மூலம் அவர்களும் விசாரணை நடத்தி முன்னாள் அமைச்சர் சொல்வது உண்மையா இல்லையா என்பதைக் கண்டுபிடிப்பார்கள் என்று கூறினார். 

ஆனால் இலங்கை அரசு, மஹிந்தநந்தாவின் குற்றச்சாட்டைத் தீவிரமாகப் பார்க்க ஆரம்பித்தது.

2011 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் மேட்ச் ஃபிக்ஸிங் நடந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளதையடுத்து இதுதொடர்பாக விசாரணை செய்ய சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு உத்தரவிட்டது இலங்கை அரசு. விளையாட்டுத்துறை செயலாளர் ருவாண்சந்திரா கூறியதாவது: மேட்ச் ஃபிக்ஸிங் புகார் தொடர்பாக வெளிப்படையான விசாரணைக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் துல்லாஸ் உத்தரவிட்டுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் சிறப்புப் புலனாய்வுக் குழு இதுகுறித்து விசாரிக்கும் என்றார். 

இதையடுத்து 2011 உலகக் கோப்பையில் இலங்கை அணி தோற்றதற்கான 24 காரணங்கள் கொண்ட அறிக்கையை சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் சமர்ப்பித்துள்ளார் மஹிந்தநந்தா. இதுபற்றி அவர் கூறியதாவது:

2011 அக்டோபர் 30 அன்று ஐசிசியிடம் விளையாட்டுத்துறை அமைச்சராக 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டி குறித்து புகார் அளித்தேன். அதனை இன்று காவல்துறையிடம் சமர்ப்பித்துள்ளேன். இலங்கை அணி ஏன் தோற்றது என 9 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் 24 சந்தேகத்துக்குரிய காரணங்களை வெளிப்படுத்தியுள்ளேன். இவை விசாரணை செய்யப்பட வேண்டும் என்று கூறினார். 

ஆதாரம் எதுவும் கையில் வைத்திராமல் தனது சந்தேகத்தை விசாரிக்க வேண்டும் என்று மஹிந்தநந்தா கூறியபோதே இந்த விசாரணை எங்குச் சென்று முடியும் என்று அனைவருக்கும் புரிந்துவிட்டது.

சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவர் ஜகத் ஃபொன்சேகா ஒரு பேட்டியில் கூறியதாவது:

இதுவரை 2011 உலகக்கோப்பைப் போட்டியில் பங்கேற்ற மூன்று வீரர்களிடம் விசாரணை செய்யப்பட்டது. ஆனால் மஹிந்தநந்தாவின் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. ஐசிசியும் அவருடைய புகாருக்கு எதிர்வினை செய்யவில்லை. எந்த விசாரணையையும் ஐசிசி தொடங்கவில்லை. விசாரணை குறித்த அறிக்கையை விளையாட்டுத்துறை செயலாளருக்குச் சிறப்புப் புலனாய்வுக் குழு அனுப்பும். உயர் அதிகாரிகளிடையே நடைபெற்ற கூட்டத்தில் இந்த விசாரணையைக் கைவிடும்படி யோசனை கூறப்பட்டது என்றார்.

இதையடுத்து 2011 உலகக் கோப்பை மேட்ச் ஃபிக்ஸிங் புகார் குறித்த விசாரணையை இலங்கை அரசு கைவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளது ஐசிசி. அந்த அமைப்பின் ஊழல் தடுப்புப் பிரிவின் பொது மேலாளர் அலெக்ஸ் மார்ஷல் கூறியதாவது:

2011 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் மேட்ச் ஃபிக்ஸிங் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை ஐசிசி கவனத்தில் கொண்டது. நாங்கள் விசாரணையைத் தொடங்குவதற்கான எந்தவொரு ஆதாரமும் எங்களுக்குச் சமர்ப்பிக்கப்படவில்லை. இலங்கை முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர், இதுதொடர்பாக ஐசிசிக்கு எந்தவொரு கடிதம் அனுப்பவில்லை. அப்போது ஐசிசியில் பணியாற்றியவர்களும் இதுதொடர்பான கடிதம் எதையும் பெற்றதாக உறுதி செய்யவில்லை. 2011 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தின் தன்மை குறித்து எங்களுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. வழக்கமாக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை நாங்கள் தீவிரமாக ஆராய்வோம். மேட்ச் ஃபிக்ஸிங் தொடர்பான ஆதாரங்கள் வழங்கப்பட்டால் எங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வோம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com