இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்துக்கான பாகிஸ்தான் பேட்டிங் பயிற்சியாளராக யூனிஸ் கான் நியமனம்

பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாக முன்னாள் வீரர் யூனிஸ் கான் தேர்வாகியுள்ளார்.
படம் - ஏபி
படம் - ஏபி

பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாக முன்னாள் வீரர் யூனிஸ் கான் தேர்வாகியுள்ளார்.

2019 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றின் முடிவில் 5-ம் இடம் பிடித்து வெளியேறியது. இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தேர்வுக் குழு தலைவர் பொறுப்பிலிருந்து முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் விலகினார். பிறகு, தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து மிக்கி ஆர்தரை நீக்கியது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். மேலும் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர், பந்துவீச்சுப் பயிற்சியாளர் அஸார் முகமது, டிரெய்னர் கிராண்ட் லுடென் ஆகியோருடைய ஒப்பந்தத்தையும் புதுப்பிக்க மறுத்தது. இதையடுத்து, பாகிஸ்தான்  கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழுத் தலைவராக முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தேர்வானார்.

பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த சர்ஃபராஸ் அகமது, பாகிஸ்தான் அணியின் டெஸ்ட், டி20 அணிகளிலிருந்து கடந்த அக்டோபர் மாதம் நீக்கப்பட்டார். இதன்பிறகு அஸார் அலி டெஸ்ட் கேப்டனாகவும், பாபர் அஸாம் டி20 கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்கள். அஸார் அலி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடிகிற வரைக்கும் கேப்டனாக நீடிப்பார். பாபர் அஸாம், டி20 உலகக் கோப்பை வரை டி20 அணியின் கேப்டனாக நீடிப்பார் என அறிவிக்கப்பட்டது.

பாகிஸ்தான் ஒருநாள் அணியின் கேப்டனாக பாபர் அஸாம் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். 2020-21 சீஸனுக்கான கேப்டனாக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தக் காலக்கட்டத்தில் ஆசியக் கோப்பை, டி20 உலகக் கோப்பைப் போட்டிகளைத் தவிர 9 டெஸ்டுகள், 6 ஒருநாள், 20 டி20 ஆட்டங்களில் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது. 25 வயது பாபர் அஸாம் 26 டெஸ்டுகள், 74 ஒருநாள், 38 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

இந்நிலையில் இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்துக்கான பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் வீரர் யூனிஸ் கானும் சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளராக முஷ்டாக் அகமதுவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

2017-ல் ஓய்வு பெற்ற 42 வயது யூனிஸ் கான், 118 டெஸ்டுகள், 265 ஒருநாள், 25 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

இங்கிலாந்தில் மூன்று டெஸ்டுகள், மூன்று டி20 ஆட்டங்களை ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com