டி20 உலகக் கோப்பை, ஆசியக் கோப்பைப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டால் ஐபிஎல் நடைபெறும்!

டி20 உலகக் கோப்பை, ஆசியக் கோப்பைப் போட்டிகள் இந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்டால் அவற்றுக்குப் பதிலாக...
டி20 உலகக் கோப்பை, ஆசியக் கோப்பைப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டால் ஐபிஎல் நடைபெறும்!

டி20 உலகக் கோப்பை, ஆசியக் கோப்பைப் போட்டிகள் இந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்டால் அவற்றுக்குப் பதிலாக செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஐபிஎல் போட்டியை நடத்துவோம் என ஐபிஎல் நிர்வாகக் குழுவின் தலைவர் பிரிஜேஷ் படேல் கூறியுள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் 2020 ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை திட்டமிடப்பட்டுள்ள டி20 உலகக் கோப்பை நடைபெறுமா என்கிற கேள்விக்கு விடை தேடுவதற்காக ஐசிசி கூட்டம் இணையம் வழியாக சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது. ஆனால் அந்தக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. டி20 உலகக் கோப்பை குறித்து முடிவெடுக்க ஜூன் 10 அன்று ஐசிசி கூட்டம் மீண்டும் நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் கரோனா அச்சுறுத்தல் குறைந்துள்ள நிலையில் பொறுத்திருந்து இறுதி முடிவை எடுக்க ஐசிசி திட்டமிட்டுள்ளது. ஆஸ்திரேலிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஒரு பேட்டியில், கரோனா பரவல் குறைந்துவிட்டதால் சர்வதேசப் போட்டிகளை நடத்த ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது. அப்போட்டிகளுக்குப் பார்வையாளர்களை அனுமதிக்கவும் வாய்ப்புள்ளது என்று கூறினார். இதையடுத்து டி20 உலகக் கோப்பை குறித்து தனது இறுதி முடிவை ஒத்திவைத்துள்ளது ஐசிசி.

அதேபோல இந்த வருட செப்டம்பரில் டி20 ஆசிய கோப்பைப் போட்டியை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பைப் போட்டி எங்கு, எப்போது நடைபெறவேண்டும் என்பது குறித்து முடிவெடுப்பதற்காக இணையம் வழியாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் உள்ள டி20 உலகக் கோப்பை பற்றி ஐசிசி தன் நிலைப்பாட்டை அறிவித்த பிறகு ஆசிய கோப்பைப் போட்டி குறித்த இறுதி முடிவை வெளியிடலாம் எனக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பைப் போட்டியை ஐசிசி ஒத்தி வைத்தால், செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஐபிஎல் போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. எனினும் ஐசிசியின் முடிவை வைத்தே பிசிசிஐயின் திட்டங்கள் செயல்வடிவம் பெறும். இதுபற்றி ஐபிஎல் நிர்வாகக் குழுவின் தலைவர் பிரிஜேஷ் படேல் கூறியதாவது:

டி20 உலகக் கோப்பை, டி20 ஆசியக் கோப்பை போட்டிகளைப் பற்றிய இறுதி முடிவு எடுத்த பிறகே ஐபிஎல் பற்றி எங்களால் முடிவெடுக்க முடியும். இந்த இரு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டால் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் இந்தியாவில் காலி மைதானங்களில் ஐபிஎல் போட்டியை நடத்தலாம். இதுவும் கூட சூழலைப் பொறுத்துதான் முடிவெடுக்க முடியும். அரசின் அறிவுறுத்தலின்படியே நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

உலகக் கோப்பையைக் காலி மைதானத்தில் நடத்த முடியாது. ஆனால் லீக் போட்டி என்பதால் ஐபிஎல்-ஐ காலி மைதானத்தில் நடத்தலாம். வீரர்களும் ஒளிபரப்பு நிறுவனமும் இதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளார்கள். இந்தியாவில் கூட மூன்று நான்கு மையங்களில் தான் ஐபிஎல் போட்டியை நடத்த முடியும். இந்தியாவில் ஐபிஎல் போட்டியை நடத்த வாய்ப்பே இல்லை எனும்போதுதான் வெளிநாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த முடிவெடுப்போம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com