ஸ்ரீசாந்தின் கனவு நிறைவேறவுள்ளது: கேரள ரஞ்சி அணிக்குத் திரும்புகிறார்!

ஸ்ரீசாந்தை கேரள அணியில் சேர்த்துக்கொள்ள கேரள கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்துள்ளது...
ஸ்ரீசாந்தின் கனவு நிறைவேறவுள்ளது: கேரள ரஞ்சி அணிக்குத் திரும்புகிறார்!

கேரள ரஞ்சி அணியில் இடம்பெற்று இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்கவேண்டும் என்கிற தனது கனவை அடைவதற்கான முதல் கட்டத்தை எட்டியுள்ளார் ஸ்ரீசாந்த்.

ஐபிஎல் ஆட்டங்களில் ஸ்பாட் பிக்ஸிங் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய பிசிசிஐ, ஸ்ரீசாந்த் மற்றும் அவரது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சக வீரர்கள் அஜித் சண்டிலா, அங்கித் சவான் ஆகியோருக்கு ஆயுள் தடை விதித்தது. இதை எதிர்த்து கேரள மற்றும் உச்சநீதிமன்றங்களில் ஸ்ரீசாந்த் முறையிட்டார். பிசிசிஐ ஒழுங்குமுறை குழுவின் ஆணையை நிராகரித்த உச்சநீதிமன்றம், ஸ்ரீசாந்த் தண்டனைக் காலம் குறித்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. 

இதையடுத்து பிசிசிஐ மத்தியஸ்தர் நீதிபதி டிகே.ஜெயின் (ஓய்வு) இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டார். இதில் ஸ்ரீசாந்தின் ஆயுள் தடையை குறைக்க முடிவு செய்து உத்தரவிட்டார். இதன்படி 13.9.2013 முதல் 7 ஆண்டுகள் ஸ்ரீசாந்த் கிரிக்கெட் ஆட தடை விதித்தார். இதனால் வரும் 2020 செப்டம்பர் மாதத்துடன் அவரது தடைக்காலம் முடிவடைகிறது. அதன் பின் மீண்டும் தனது கிரிக்கெட் வாழ்வை ஸ்ரீசாந்த் தொடரலாம். அவரது கிரிக்கெட் ஆடும் காலம் ஏறக்குறைய முடிந்து விட்ட நிலையில், அவரது தடைக்காலத்தை குறைப்பதே நீதியாக இருக்கும் என ஜெயின் தனது உத்தரவில் குறிப்பிட்டார். 

இந்நிலையில் ஸ்ரீசாந்தின் தடைக்காலம் செப்டம்பரில் முடிந்தபிறகு அவரை கேரள ரஞ்சி அணியில் சேர்த்துக்கொள்ளத் தயாராக இருப்பதாக கேரள கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. இதுபற்றி கேரள அணியின் புதிய பயிற்சியாளர் டினு யோஹண்ணன் கூறியதாவது:

செப்டம்பரில் தடைக்காலம் முடிந்தபிறகு ஸ்ரீசாந்தை கேரள அணியில் சேர்த்துக்கொள்ள கேரள கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்துள்ளது. அவருடைய உடற்தகுதியைக் கருத்தில் கொண்டு தான் அவரை அணியில் தேர்வு செய்ய முடியும். தனது உடற்தகுதியை அவர் நிரூபிக்க வேண்டும். ஊரடங்குச் சமயத்தில் மைதானத்துக்குச் சென்று யாராலும் பயிற்சி பெற முடியாத நிலையில் அவருடைய உடற்தகுதி பற்றி தற்போது எதுவும் கூறமுடியாது. 

கேரள அணிக்காக ஸ்ரீசாந்த் மீண்டும் விளையாட வேண்டும் என அனைவரும் விரும்புகிறோம். அவரை வரவேற்கிறோம். அவருடைய திறமையை ஏற்கெனவே உலகுக்கு நிரூபித்துவிட்டார். அதனால் இப்போது புதிதாக எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் அவருக்குக் கிடையாது. அவருக்கான அனைத்து ஆதரவையும் அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.

கேரள அணியில் மீண்டும் இடம்பிடிப்பதற்காகத் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com