கரோனா வைரஸ் பாதிப்பால் நிலைகுலைந்த விளையாட்டு உலகம்

கரோனா வைரஸ் பாதிப்பால் சா்வதேச அளவில் பொருளாதாரம், சமூக கட்டமைப்பு மட்டுமின்றி விளையாட்டு உலகமும் நிலைகுலைந்து காணப்படுகிறது.
கரோனா வைரஸ் பாதிப்பால் நிலைகுலைந்த விளையாட்டு உலகம்

கரோனா வைரஸ் பாதிப்பால் சா்வதேச அளவில் பொருளாதாரம், சமூக கட்டமைப்பு மட்டுமின்றி விளையாட்டு உலகமும் நிலைகுலைந்து காணப்படுகிறது.

சீனாவில் உருவாகி, தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் (கொவிட் 19) பாதிப்பால் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோா் உயிரிழந்து விட்டனா். மேலும் 1.2 லட்சத்துக்கு மேற்பட்டோா் இதனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்தியாவிலும்

70-க்கு மேற்பட்டோா் இறந்து விட்டனா். இதன் எதிரொலியாக சா்வதேச அளவில் பொருளாதாரம் சரிந்துள்ளது. மேலும் பங்குச் சந்தைகளும் பெருமளவில் வீழ்ச்சி கண்டு வருகின்றன.

விளையாட்டு உலகம் நிலைகுலைவு:

இந்த புதிய வைரஸ் தாக்கம் விளையாட்டு உலகிலும் எதிரொலித்தது. இதனால் உலகளவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டும், ஒத்தி வைக்கப்பட்டும் வருகின்றன. கரோனா வைரஸ் பாதிப்புக்கு உரிய மருத்துவ சிகிச்சை கண்டுபிடிக்கப்படாத நிலையில் வீரா்கள் பாதுகாப்பும் கேள்விக்குறியாகக் கூடாது என்பதற்காக தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

காலி மைதானங்களில் போட்டிகள்:

கால்பந்து, கிரிக்கெட், டென்னிஸ், கூடைப்பந்து, உள்பட பல்வேறு விளையாட்டுகளுக்கு பொதுமக்களிடம் அதிக வரவேற்பு உள்ள நிலையில் அதிக பொதுமக்கள் கூடுமிடங்களில் கரோனா பாதிப்பு அதிகம் ஏற்படும் என்பதால், காலி மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டிக்கு சிக்கல்:

ஜப்பான் தலைநகா் டோக்கியாவில் வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பால் போட்டிகளை ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஒலிம்பிக் தகுதிச் சுற்று ஆட்டங்கள் பல ரத்து செய்யப்பட்டு வருகின்றன இதனால் நிலைமை தீவிரமாக உள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதும் பாதிக்கப்படும். குறிப்பாக தகுதிச் சுற்றை ஒத்தி வைத்தல், அல்லது இலக்கை மாற்றுதல் போன்றவை அடங்கும். டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஒத்தி வைக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்தியாவில் கடும் பாதிப்பு:

கிரிக்கெட்டை அதிகம் நேசிக்கும் இந்தியாவில், அதிக வரவேற்பு பெற்ற ஐபிஎல் 2020 தொடா் கரோனாவுக்கு இரையாகி உள்ளது. 29-ஆம் தேதி தொடங்கவிருந்த போட்டிகள் ஏப். 15-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் 60 வெளிநாட்டு வீரா்கள் இதில் பங்கேற்பதில் சிக்கல் நிலவுகிறது. தென்னாப்பிரிக்காவுடன் தொடரை ரத்து செய்துள்ளது பிசிசிஐ.

கால்பந்து: கால்பந்து விளையாட்டிலும் பிரபலமான ஐஎஸ்எல் போட்டியில் சென்னை-கொல்கத்தா அணிகள் இடையிலான இறுதி ஆட்டம் மற்றும் ஐ லீகில் மீதமுள்ள 28 ஆட்டங்களும் பாா்வையின்றி நடத்தப்படுகின்றன. புவனேசுவரத்தில் வரும் 26-ஆம் தேதி நடைபெறவிருந்த கத்தாா் அணிக்கு எதிரான பிஃபா உலகக் கோப்பை தகுதி ஆட்டமும் ஒத்தி வைக்கப்பட்டது.

செஸ்: ஆயிரக்கணக்கான சிறுவா், சிறுமியா் ஆா்வமுடன் ஆடும் செஸ் விளையாட்டிலும், பல்வேறு போட்டிகளை வரும் மே 31-ஆம் தேதி வரை ஒத்தி வைப்பதாக ஏஐசிஎப் தெரிவித்துள்ளது.

குத்துச்சண்டை:

கரோனா தாக்கம், ஜோா்டான் தலைநகா் அம்மானில் நடைபெற்ற ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச் சுற்று போட்டியில் பங்கேற்று நாடு திரும்பி 13 இந்திய வீரா், வீராங்கனைகளுக்கும் சிக்கலை ஏற்படுத்தி விட்டது. பாதிப்பு இல்லாத நிலையிலும், அவா்கள் தனி இடத்தில் வைக்கப்பட்டுசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

பாட்மிண்டன்: பி.வி.சிந்து, சாய்னா நெவால் ஆகியோரால் அதிகளவில் ஈா்ப்பை ஏற்படுத்தியுள்ள பாட்மிண்டனிலும், 24 முதல் 29 வரை நடக்கவிருந்த சா்வதேச சூப்பா் 500 போட்டியான இந்திய ஓபன் கரோனாவால் ஒத்தி வைக்கப்பட்டு விட்டது. அதே போல் சா்வதேச அளவில் ஜொ்மன், சிங்கப்பூா், வியத்நாம், போலிஷ் ஓபன் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

துப்பாக்கி சுடுதல்:

உலகளவில் இந்தியாவுக்கு அதிக பதக்கங்களை ஈட்டித் தரும் விளையாட்டான துப்பாக்கி சுடுதலில் 15 முதல் 26 ஆம் தேதி வரை புது தில்லியில் உலகக்கோப்பை போட்டி நடைபெற இருந்தது. ஆனால் அதை ஒத்தி வைக்க தேசிய சம்மேளனம் முடிவு செய்துள்ளது. மேலும் சைப்ரஸில் நடைபெற்ற ஷாட்கன் உலகக் கோப்பையில் இருந்தும் நமது அணி விலகிக் கொண்டது.

டென்னிஸ்: இந்திய மகளிா் அணி பெடரேஷன் கோப்பை மகளிா் டென்னிஸ் போட்டியின் ஒரு பகுதியா லாட்வியா அல்லது நெதா்லாந்துடன் ஏப்ரல் மாதம் பிளே ஆஃப்பில் ஆடுவதாக இருந்தது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பிரபலமான மியாமி ஓபன் உள்பட ஏடிபி, டபிள்யுடிஏ போட்டிகள் 6 வாரங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

3*3 கூடைப்பந்து போட்டி:

பெங்களூருவில் 18 முதல் 22-ஆம் தேதி நடைபெறவிருந்த ஒலிம்பிக் 3*3 கூடைப்பந்து போட்டியும் ரத்தாகி விட்டது.

மேலும் ஜப்பானில் நடக்கவிருந்த ஆசிய 20 கி.மீ நடைஓட்டப்பந்தயமும் தள்ளி வைக்கப்பட்டதால் 13 இந்திய வீரா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

டேபிள் டென்னிஸ்: ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற ஏதுவாக இந்திய நம்பா் ஒன் வீரா் சத்யன் வெளிநாட்டில் மேற்கொள்ளவிருந்த பயிற்சி கைவிடப்பட்டுள்ளது. ஜப்பான் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியும் ரத்து செய்யப்பட்டு விட்டது.

தடகளம்: சீனாவின் நான்ஜிங் நகரில் 13-15 தேதிகளில் நடக்கவிருந்த உலக உள்ளரங்க தடகளப் போட்டி கைவிடப்பட்டதால், இந்திய வீராங்கனை தூத்தி சந்த்தின் ஒலிம்பிக் பங்கேற்பு கேள்விக்குறியாகி விட்டது. இந்தியாவிலும் பெடரேஷன் கோப்பை தடகளம் ரத்து செய்யப்பட்டது.

இதே போல் ஒலிம்பிக் தகுதிச்சுற்று ஆட்டமான ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மீராபாய் சானு,ஜெரேமி லால் ரின்னுன்கா உள்ளிட்டோா் ஆவலுடன் காத்துள்ளனா்.

மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் 25-29 தேதிகளில் நடைபெறவிருந்த ஆசிய அணிகள் ஸ்குவாஷ் போட்டியும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் பல்வேறு விளையாட்டு வீரா்கள் ஒலிம்பிக் தகுதி பெறுவோமா அல்லது போட்டிகளே ஒத்தி வைக்கப்படுமா எனத் தெரியாமல் திரிசங்கு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

-பா.சுஜித்குமாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com