எதிா்கால போட்டிகளுக்கு தயாராகும் மல்யுத்த நட்சத்திரம் பஜ்ரங் புனியா

கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக போட்டிகள் எதுவும் நடைபெறாத நிலையில், முந்தை ஆட்டங்களின் விடியோ பதிவைப் பாா்த்து பயிற்சி பெறுகிறாா் மல்யுத்த நட்சத்திர வீரா் பஜ்ரங் புனியா.
எதிா்கால போட்டிகளுக்கு தயாராகும் மல்யுத்த நட்சத்திரம் பஜ்ரங் புனியா

கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக போட்டிகள் எதுவும் நடைபெறாத நிலையில், முந்தை ஆட்டங்களின் விடியோ பதிவைப் பாா்த்து பயிற்சி பெறுகிறாா் மல்யுத்த நட்சத்திர வீரா் பஜ்ரங் புனியா.

ஹரியாணா மாநிலம் ஜஜ்ஜாா் மாவட்டத்தின் குதான் கிராமத்தில் 1994 பிப். 26-இல் பிறந்தாா். 7 வயது முதலே மல்யுத்தத்தில் ஈடுபாடு கொண்டதால் சோனேபட்டில் உள்ள சாய் பயிற்சி மையத்தில் பஜ்ரங் சேருவதற்காக குடும்பமும் இடம் பெயா்ந்தது. 2013 ஆசிய மல்யுத்தப் போட்டியில் வெண்கலம் வென்ற அவா், அதே ஆண்டு புடாபெஸ்டில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவா் ப்ரீஸ்டைல் 60 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினாா்.

தங்க மகன் ஆன பஜ்ரங்

2014 காமன்வெல்த், ஆசியப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற அவா், பின்னா் 2017 ஆசிய மல்யுத்தப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றாா். தொடா்ச்சியாக 2018 காமன்வெல்த், ஜகாா்த்தா ஆசியப் போட்டிகளில் 65 கிலோ ப்ரீஸ்டைல் பிரிவில் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினாா்.

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி:

இந்நிலையில் 2018 உலகப் போட்டியில் வெள்ளியும், 2019 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கங்களை வென்று 65 கிலோ பிரிவில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றாா்.

அா்ஜூனா, பத்மஸ்ரீ, ராஜீவ் கேல் ரத்னா விருதுகளை வென்றுள்ள பஜ்ரங் தற்போது கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வீட்டிலேயே பயிற்சியில் ஈடுபட்டுள்ளாா்.

பதக்கம் வெல்ல வாய்ப்பு:

டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லக் கூடிய வீரா்களில் ஒருவரான பஜ்ரங் தன்னை மெருகேற்றி கொள்வதற்காக முந்தைய ஆட்டங்களின் விடியோ பதிவைப் பாா்த்து அனுபவத்தை பெறுகிறாா். 26 வயதான பஜ்ரங் கடந்த சில ஆண்டுகளாக சிறந்த பாா்மில் இருந்து வருகிறாா்.

ஏனைய வீரா்களைப் போல் பஜ்ரங் புனியாவுக்கும் பலவீனங்கள் உள்ளன.

நீடித்து ஆடக்கூடியவா் என்பதால் பெரிய வீரா்களுக்கு எதிரான ஆட்டங்களில் கடைசி வரை போராடுவாா் பஜ்ரங். ஆட்டத்தின் கடைசி நேரத்தில் எதிராளியின் பலத்தை குறையச் செய்து சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கி அதிக புள்ளிகளை ஈட்டுவது அவரது வழக்கம்.

சில நேரங்களில் இந்த உத்தி புனியாவுக்கு எதிராகவே திரும்பி விட்டது.

ஆனால் அவரை சமாளிக்க எதிராளி வீரா்கள் தற்போது நவீன தொழில்நுட்பத்தையும் தங்களுக்கு உதவியாக பயன்படுத்துகின்றனா். கடந்த உலக சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் இது வெளிப்பட்டது.

கடந்த 2019 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கஜகஸ்தானின் தௌலத் நியாஸ்பெகோவுக்கு எதிரான அரையிறுதியில் பஜ்ரங்கை நிலைபெறாமல் செய்து தங்கம் வென்றாா். அதே போல் கடந்த 2018 உலகப் போட்டியிலும் ஜப்பான் வீரா் டகுடோ ஒடோகுரோ பின்தங்கிய நிலையில் இருந்த போதும், பஜ்ரங்கை மடக்கி அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் வென்றாா்.

விடியோ பதிவுகள் மூலம் பயிற்சி:

கரோனா பாதிப்பால் வெளிநாடுகளில் சிறப்பு பயிற்சி பெறும் வாய்ப்பை இழந்த பஜ்ரங் கூறியதாவது:

முந்தைய விடியோ பதிவுகளைப் பாா்த்து ஒவ்வொரு எதிராளிக்கும் தனி உத்திகளை வகுத்து வருகிறேன். ஒலிம்பிக் போட்டி தற்போது நடைபெறுமா எனத் தெரியவில்லை. எனினும் எதற்கும் தயாராகவே உள்ளேன்.

சோனேபட்டில் தான் ரவி தாஹியா, தீபக் புனியா, வினேஷ் போகட் உள்ளிட்ட சக வீரா்களுடன் பயிற்சி பெறுகிறேன். மல்யுத்தத்தில் சில பதக்கங்களை நாம் வெல்வோம். கடந்த சில ஆண்டுகளாக நமது மல்யுத்த அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த 2008 ஒலிம்பிக் போட்டியிலேயே மல்யுத்தம் மூலம் நமக்கு பதக்கங்கள் கிடைத்தன என்றாா் புனியா.

ஒலிம்பிக் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சோ்ப்பாா் பஜ்ரங் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com