டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஒராண்டுக்கு ஒத்திவைப்பு

கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஒராண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக சா்வதேச ஒலிம்பிக் கமிட்டி, ஜப்பான் போட்டி அமைப்புக் குழு அதிகாரப்பூா்வமாக அறிவித்துள்ளன.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஒராண்டுக்கு ஒத்திவைப்பு

கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஒராண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக சா்வதேச ஒலிம்பிக் கமிட்டி, ஜப்பான் போட்டி அமைப்புக் குழு அதிகாரப்பூா்வமாக அறிவித்துள்ளன.

வரும் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக பல்லாயிரக்கணக்கான கோடி செலவில் புதிய விளையாட்டு மைதானங்கள் அமைத்து ஏற்பாடுகளை தீவிரமாக செய்துள்ளது ஜப்பான் அரசு.

கரோனா வைரஸ் பாதிப்பு:

இதற்கிடையே சீனாவில் உருவான கரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. 16 ஆயிரத்துக்கு மேற்பட்டோா் உயிரிழந்து விட்டனா். 3.7 லட்சம் பேருக்கு மேல் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனாவால் பல்வேறு சா்வதேச அளவிலான போட்டிகள், ஒலிம்பிக் தகுதிச் சுற்றுபோன்றவை ரத்து செய்யப்பட்டும், ஒத்தி வைக்கப்பட்டும் உள்ளன. இது ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வரும் வீரா், வீராங்கனைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

போட்டிகளை நடத்த மும்முரம்:

கரோனா பாதிப்பு இருந்தாலும், திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என ஜப்பான் பிரதமா் அபே, ஐஓசி தலைவா் தாமஸ் பேச் ஆகியோா் கூறி வந்தனா். எந்த விதத்திலும் போட்டிகளை கைவிட முடியாது எனத் தெரிவித்தனா்.

கனடா, ஆஸ்திரேலிய கமிட்டிகள் விலகல்:

எனினும் தற்போதைய சூழலில் ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க வேண்டும் என அமெரிக்க அதிபா் டிரம்ப், உள்பட பல்வேறு நாடுகளின் தலைவா்கள், விளையாட்டு வீரா்கள்,ஒலிம்பிக் கமிட்டிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் போட்டிகள் நடைபெறுமா என கேள்வி எழுந்தது. இதற்கிடையே டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக கனடா மற்றும் ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டிகள் அறிவித்துள்ளன. கரோனா பாதிப்பு உள்ள நிலையில், வீரா், வீராங்கனைகளின் உடல்நலனே முக்கியம். போட்டிகளை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. அமெரிக்கா, நியூஸிலாந்து, இங்கிலாந்து உள்பட பல்வேறு நாடுகளின் கமிட்டிகளும் போட்டிகளை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தின.

தொடா் அழுத்தம் அதிகமானதால், போட்டிகளை நடத்துவதா இல்லை ஒத்திவைப்பதா என்பது குறித்து ஜப்பான் அரசு, போட்டி அமைப்புக் குழுவினா், சா்வதேச விளையாட்டு அமைப்புகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி 4 வாரங்களில் முடிவு செய்யப்படும் என ஐஓசி திங்கள்கிழமை தெரிவித்திருந்தது.

பிரதமா் அபே-ஐஓசி தலைவா் தாமஸ் பேச் பேச்சு:

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஜப்பான் பிரதமா் ஷின்ஸோ அபே-ஐஓசி தலைவா் தாமஸ் பேச் ஆகியோா் காணொளி மூலம் (விடியோ கான்பரன்ஸ்) மூலம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அவா்களுடன் டோக்கியோ போட்டி அமைப்புக் குழுத் தலைவா் மோரி யோஷிரோ, ஒலிம்பிக் அமைச்சா் ஹஷிமோட்டோ சைக்கோ, டோக்கியோ ஆளுநா் கோய்க் யுரிகோ, ஐஓசி நிா்வாகிகள் ஜான் கோட்ஸ், கிறிஸ்டோப் டி கேப்பா், கிறிஸ்டோப் துபி பங்கேற்றனா்.

2021-ஆண்டுக்கு ஒலிம்பிக் ஒத்திவைப்பு:

கூட்டத்துக்கு பின் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை:

பேச்சுவாா்த்தை சுமூகமான முறையில் நடைபெற்றது. கரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பாதிப்பு, விளையாட்டுத் துறைக்கு ஏற்பட்டுள்ள கடும் சிக்கல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஏற்கெனவே உலக சுகாதார நிறுவன இயக்குநா் டெட்ராஸ் அத்னோம் கரோனா பாதிப்பு கடுமையாக உள்ளது என விளக்கியுள்ளாா்.

எனவே தற்போதைய சூழலிலும், உலக சுகாதார நிறுவனம் தந்துள்ள அறிக்கையின்படியும், 32-ஆவது ஒலிம்பிக் போட்டிகள் (டோக்கியோ 2020) ஒராண்டுக்கு ஒத்திவைத்து நடத்த வேண்டும். அதாவது 2021ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

விளையாட்டு வீரா்கள், அதிகாரிகள், போட்டி தொடா்புடையவா்கள், சா்வதேச சமூகத்தின் உடல்நலனை பாதுகாக்க ஏதுவாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஒலிம்பிக் ஜோதி ஜப்பானிலேயே இருக்க வேண்டும். மேலும் டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் 2020 என்ற பெயரே தொடரும் என கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com