இந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவேன்: ஸ்ரீசாந்த் நம்பிக்கை

ஸ்ரீசாந்துக்கு 37 வயதாகிவிட்டது. தடை அமலில் உள்ளதால் இன்னமும் கேரள அணிக்காகக் கூட அவர் விளையாட ஆரம்பிக்கவில்லை.
இந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவேன்: ஸ்ரீசாந்த் நம்பிக்கை

ஸ்ரீசாந்துக்கு 37 வயதாகிவிட்டது. தடை அமலில் உள்ளதால் இன்னமும் கேரள அணிக்காகக் கூட அவர் விளையாட ஆரம்பிக்கவில்லை. ஆனால், இந்திய அணிக்காக விளையாடும் கனவை மட்டும் ஸ்ரீசாந்த் விடவில்லை.

ஐபிஎல் ஆட்டங்களில் ஸ்பாட் பிக்ஸிங் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய பிசிசிஐ, ஸ்ரீசாந்த் மற்றும் அவரது ராஜஸ்தான ராயல்ஸ் அணி சக வீரர்கள் அஜித் சண்டிலா, அங்கித் சவான் ஆகியோருக்கு ஆயுள் தடை விதித்தது. இதை எதிர்த்து கேரள மற்றும் உச்சநீதிமன்றங்களில் ஸ்ரீசாந்த் முறையிட்டார். பிசிசிஐ ஒழுங்குமுறை குழுவின் ஆணையை நிராகரித்த உச்சநீதிமன்றம், ஸ்ரீசாந்த் தண்டனைக் காலம் குறித்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. இதையடுத்து பிசிசிஐ மத்தியஸ்தர் நீதிபதி டிகே.ஜெயின் (ஓய்வு) இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டார். இதில் ஸ்ரீசாந்தின் ஆயுள் தடையை குறைக்க முடிவு செய்து உத்தரவிட்டார். இதன்படி 13.9.2013 முதல் 7 ஆண்டுகள் ஸ்ரீசாந்த் கிரிக்கெட் ஆட தடை விதித்தார். இதனால் வரும் 2020 செப்டம்பர் மாதத்துடன் அவரது தடைக்காலம் முடிவடைகிறது. அதன் பின் மீண்டும் தனது கிரிக்கெட் வாழ்வை ஸ்ரீசாந்த் தொடரலாம். அவரது கிரிக்கெட் ஆடும் காலம் ஏறக்குறைய முடிந்து விட்ட நிலையில், அவரது தடைக்காலத்தை குறைப்பதே நீதியாக இருக்கும் என ஜெயின்தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பேட்டியில் ஸ்ரீசாந்த் கூறியுள்ளதாவது:

இப்போது பல வீரர்களுடன் பேசி வருகிறேன். ட்விட்டரில் சச்சினுடன் சமீபத்தில் பேசினேன். சேவாக், லக்‌ஷ்மண் மற்றும் சிலரைத் தவிர பல வீரர்கள் என்னுடன் தொடர்பில் இருப்பதைத் தவிர்த்தார்கள். அவர்களின் நிலையைப் புரிந்துகொண்டேன். வழக்கு நீதிமன்றத்தில் இருந்ததால் நானும் அவர்களிடம் பேச முயற்சி எடுக்கவில்லை. கடந்த சில வருடங்களாக நிலைமை மாறிவிட்டது. ஹர்பஜன் சிங்கை விமான நிலையத்தில் சந்தித்தேன். நான் மீண்டும் விளையாட ஆரம்பிக்கும்போது உங்களுடைய பஜ்ஜி ஸ்போர்ட்ஸ் தயாரிக்கும் பேட்களையே பயன்படுத்துவேன் என்றேன்.

என்றாவது ஒருநாள் இந்திய அணிக்காக மீண்டும் விளையாடுவேன் என நம்பிக்கையுடன் உள்ளேன். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி என்னுள் ஆர்வத்தை அதிகமாக்குகிறது. அதில் விளையாட வேண்டும் என்பது என் குறிக்கோள். முதலில் கேரள அணிக்காக விளையாட வேண்டும். அதில் தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும். இந்திய அணியில் மீண்டும் நுழைய என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்வேன் என்றார்.

ஸ்ரீசாந்த் இந்திய அணிக்காக 27 டெஸ்டுகள், 53 ஒருநாள், 10 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடைசியாக 2011-ல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com