ஹார்ட் விருதை வென்ற முதல் இந்தியர்: சானியா மிர்சா மகிழ்ச்சி

இந்த விருதைப் பெறும் முதல் இந்திய வீராங்கனை என்கிற பெருமையை 33 வயது சானியா மிர்சா பெற்றுள்ளார்.
ஹார்ட் விருதை வென்ற முதல் இந்தியர்: சானியா மிர்சா மகிழ்ச்சி

ஆண்களுக்கு டேவிஸ் கோப்பை போல மகளிர் டென்னிஸில் ஃபெட் கோப்பை போட்டி (Fed Cup) நடைபெறும். 1963 முதல் இப்போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் தன்னுடைய நாட்டுக்காகச் சிறப்பாக விளையாடிய வீராங்கனைகளுக்கு சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் (ஐடிஎஃப்) சார்பாக ஹார்ட் விருது வழங்கப்படும். 2009 முதல் இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்த வருடம் ஹார்ட் விருதுக்கான ஆசிய-ஓசியானா மண்டலத்திலிருந்து இந்திய வீராங்கனை சானியா மிர்சா தேர்வாகியுள்ளார். ஒவ்வொரு மண்டலத்திலிருந்து இரு வீராங்கனைகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்படும். இந்த முறை சானியா மிர்சா மற்றும் இந்தோனேசியாவின் 16 வயது வீராங்கனை பிரிஸ்கா ஆகிய இருவரும் பரிந்துரைக்கப்பட்டதில் சானியா மிர்சாவுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

நான்கு வருடங்கள் கழித்து ஃபெட் கோப்பைப் போட்டியில் மீண்டும் விளையாடிய சானியா மிர்சா, இந்திய அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற உதவியுள்ளார், மே 1 முதல் இணையம் வழியாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சானியா மிர்சா இந்த விருதுக்குத் தேர்வாகியுள்ளார்.

ஹார்ட் விருதைப் பெறும் முதல் இந்தியர் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டுக்காக மேலும் பல வெற்றிகளைக் குவிப்பேன் எனக் கூறியுள்ளார் சானியா மிர்சா.

இந்த விருதுக்காக வழங்கப்பட்ட இரண்டாயிரம் டாலர் பரிசுத்தொகையை தெலங்கானா முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com