சர்வானுக்கு எதிரான பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் கிறிஸ் கெயில்: தண்டனையிலிருந்து தப்பினார்

சிபிஎல் போட்டியில் ஜமைக்கா அணியிலிருந்து தான் நீக்கப்பட்டது தொடர்பாக வெளியிட்ட கருத்துகளுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்
சர்வானுக்கு எதிரான பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் கிறிஸ் கெயில்: தண்டனையிலிருந்து தப்பினார்

சிபிஎல் போட்டியில் ஜமைக்கா அணியிலிருந்து தான் நீக்கப்பட்டது தொடர்பாக வெளியிட்ட கருத்துகளுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் கிறிஸ் கெயில். இதனால் தண்டனையிலிருந்து அவர் தப்பித்துள்ளார்.

சிபிஎல் போட்டியில் ஜமைக்கா அணியிலிருந்து தான் நீக்கப்பட்டதற்கு ராம்நரேஷ் சர்வான் தான் காரணம் என பிரபல வீரர் கிறிஸ் கெயில் குற்றம் சாட்டினார்.

சிபிஎல் டி20 போட்டியில் ஜமைக்கா அணியிலிருந்து செயிண்ட் லுசியா அணிக்கு மாறியுள்ளார் பிரபல வீரர் கிறிஸ் கெயில். இந்த வருட சிபிஎல் போட்டிக்கு கெயிலைத் தக்கவைக்க ஜமைக்கா அணி விரும்பவில்லை. கேபிஎச் டிரீம் கிரிக்கெட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறும் சிபிஎல் டி20 போட்டியின் அணிகளில் ஒன்றான செயிண்ட் லூயிஸை வாங்கியது. ஆண்டி பிளவர் அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக நிர்ணயிக்கப்பட்டார். தற்போது செயிண்ட் லூயிஸ் அணி, ஜமைக்கா அணியிலிருந்து நீக்கப்பட்ட கிறிஸ் கெயிலைத் தேர்வு செய்துள்ளது. சிபிஎல் போட்டியில் முதல் நான்கு சீஸனில் ஜமைக்கா அணிக்காக கெயில் விளையாடினார். அடுத்த இரு வருடங்களுக்கு வேறு அணியில் விளையாடிய கெயில் மீண்டும் ஜமைக்கா அணிக்கு வந்தார். ஆனால் கடந்த சீஸனில் 10 ஆட்டங்களில் 243 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஜமைக்கா அணி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது.

ஜமைக்கா அணியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக கெயில் வெளியிட்ட விடியோவில் கூறியுள்ளதாவது: ராம்நரேஷ் சர்வான், கரோனா வைரஸை விடவும் நீங்கள் தீங்கானவர். ஜமைக்கா அணியிலிருந்து நான் நீக்கப்பட்டதற்கு நீங்கள் முக்கியப் பங்கு வகிக்கிறீர்கள். சர்வான், நீங்கள் ஒரு பாம்பு. பழிவாங்கும் குணம் கொண்டவர், முதிர்ச்சியற்றவர். இன்னமும் ஒருவரின் முதுகின் பின்னால் குத்திக்கொண்டிருக்கிறீர்கள். எப்போது மாறுவதாக உத்தேசம்? மீண்டும் என்னைச் சந்திப்பது குறித்து யோசிக்கவேண்டாம். இப்போதே கூறிவிடுகிறேன் என்று கூறினார்.

தன்னை கரோனா வைரஸ் எனக் குற்றம் சாட்டிய 40 வயது கெயிலுக்கு சர்வான் விளக்கம் அளித்தார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

2020 சிபிஎல் போட்டிக்காக கிறிஸ் கெயிலை ஜமைக்கா அணி நீக்கியதில் என் பங்கு எதுவுமில்லை. அந்த விடியோவில் தவறான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி பலருடைய நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியுள்ளார். என்னைத்தான் அதிகம் குறி வைத்துள்ளார். கெயிலின் வசவுகளுக்கு மதிப்பளித்து நான் பதில் அளிப்பதாக எண்ண வேண்டாம். ஆனால் அவர் களங்கம் ஏற்படுத்தியுள்ள பலருடைய வாழ்க்கை மற்றும் குணாதிசயங்களைக் காப்பாற்றவே இந்த விளக்கத்தை அளிக்கிறேன். என் கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்கம் முதல், கெயிலுடன் விளையாடி வருகிறேன். அபரிதமான திறமை கொண்டவராக அவரை மதிக்கிறேன். முக்கியமாக என் நண்பரும் கூட. எனவே அவருடைய குற்றச்சாட்டுகளைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளேன் என்று கூறினார். 39 வயது சர்வான், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 87 டெஸ்டுகள், 181 ஒருநாள், 18 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். மே.இ. தீவுகள் அணிக்காகக் கடைசியாக 2013-ல் விளையாடினார்.

கெயிலின் குற்றச்சாட்டுகளை ஜமைக்கா அணியும் மறுத்துள்ளது. அணி உரிமையாளர்களும் நிர்வாகமும் எடுத்த முடிவின்படி கெயில் நீக்கப்பட்டுள்ளார். இதில் வியாபாரம் மற்றும் கிரிக்கெட் காரணங்கள் மட்டுமே உண்டு. இந்த முடிவை எடுப்பதில் எவ்விதத்திலும் சர்வானுக்குத் தொடர்பில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் தலைவர் ரிக்கி ஸ்கெரிட் கூறியதாவது:

கெயில் மற்றும் சிபிஎல் இடையே இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என நினைக்கிறோம். ஓர் அணியுடன் கெயில் ஒப்பந்தம் செய்துள்ளதால் சிபிஎல் விதிமுறைகளை அவர் பின்பற்றவேண்டும். இந்தப் பிரச்னையால் கெயின் கிரிக்கெட் வாழ்வு முடிந்துவிடக்கூடாது. கெயிலின் நடவடிக்கையால் சிபிஎல் போட்டிக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தண்டனையை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்றார்.

இந்நிலையில் தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் கிறிஸ் கெயில். அவருடைய அறிக்கை சிபிஎல் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஜமைக்கா அணியிலிருந்து நான் நீக்கப்பட்டது தொடர்பாக சில விடியோக்களை வெளியிட்டேன். ஜமைக்கா ரசிகர்களுக்கு உண்மை நிலவரம் புரியவேண்டும் என்பதற்காக மட்டும்தான் என் கருத்துகளை வெளிப்படுத்தினேன். என்னுடைய சிபிஎல் வாழ்க்கையை ஜமைக்காவில், சபைனா பார்க் மைதானத்தில் என்னுடைய ரசிகர்களின் முன்னிலையில் முடித்துக்கொள்ள விரும்பினேன். அந்த அணிக்குத் தலைமை தாங்கி இரு சிபிஎல் பட்டங்களை வென்றுள்ளேன்.

அந்த விடியோவில் நான் பேசியவை எல்லாம் என் மனத்தின் அடியாழத்திலிருந்து வந்தவை. அதில் உறுதியாக உள்ளேன்.

ஆனால் நான் பேசியதில் சில பகுதிகள் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட்டுக்கும் சிபிஎல் போட்டிக்கும் சேதாரம் ஏற்படுத்தியதை அறிகிறேன். சிபிஎல் போட்டிக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல. இந்தப் போட்டியினால் கடந்த 7 ஆண்டுகளாக கரீபியன் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடும் பாக்கியத்தைப் பெற்றேன். இந்த வாய்ப்புக்குப் பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வருடம் மீண்டும் சிபிஎல் போட்டியில் விளையாட ஆர்வமாக உள்ளேன் என்றார்.

தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்ததால் கெய்ல் மீது நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என சிபிஎல் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com