ஆகஸ்ட் மாத இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி

ஆகஸ்ட் மாத இறுதியில் தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் விளையாடவுள்ளது இந்திய அணி.
ஆகஸ்ட் மாத இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி

இந்திய அரசு அனுமதித்தால் ஆகஸ்ட் மாத இறுதியில் தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் விளையாடவுள்ளது இந்திய அணி.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் 2020 ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஐபிஎல் போட்டி, மார்ச் 29 முதல் மே 24 வரை நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளின் டி20 தொடர் குறித்த விவாதம் கடந்த பிப்ரவரி மாதம் பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் கிரிக்கெட் தென் ஆப்பிரிக்காவின் இயக்குநர் க்ரீம் ஸ்மித் இடையே நடைபெற்றது. இந்நிலையில் நேற்று இணையம் வழியாக மீண்டும் டி20 தொடர் குறித்து விவாதிக்கப்பட்டு, ஒரு முடிவுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, ஆகஸ்ட் மாத இறுதியில் தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது இந்திய அணி.

ஒருவேளை, கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தத் தொடர் ஒத்திவைக்கப்பட்டால் வேறு தேதிகளில் நிச்சயம் நடைபெறும் என கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கான தடை தொடரும் என்று இந்திய அரசு சமீபத்தில் அறிவித்திருப்பது தான் இந்தியாவில் விளையாட்டுப் போட்டிகளை மீண்டும் தொடங்குவதற்கான சிக்கலை உருவாக்கியுள்ளது. விமானப் பயணம் தொடர்பான தளர்வுகள் அறிவிக்கப்பட்டபிறகு, இந்தத் தொடரில் இந்திய அணி பங்கேற்பது குறித்த இறுதி நிலவரம் தெரிவிக்கப்படும்.

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள தேசிய பொது முடக்கம் மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. எனினும், புதிதாகச் சில தளா்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி விளையாட்டு அரங்குகள், மைதானங்களைத் திறக்கலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கும் இரவு நேரத்தில் மக்கள் நடமாட்டத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் போட்டிகளை உடனடியாகத் தொடங்க முடியாது. மேலும் காத்திருந்து அடுத்தக்கட்டத் தளர்வுகளுக்குப் பிறகு விளையாட்டுப் போட்டிகளை மீண்டும் தொடங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com