பிளே-ஆஃப் சுற்றில் டெல்லி, பெங்களூா்

ஐபிஎல் போட்டியின் 55-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை வீழ்த்தியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஐபிஎல் போட்டியின் 55-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை வீழ்த்தியது.

இந்த வெற்றியை அடுத்து பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்த டெல்லி, ‘தகுதிச்சுற்று 1’ ஆட்டத்துக்கு வந்துள்ளது. அதேபோல், பெங்களூரும் பிளே-ஆஃபுக்கு முன்னேறியது.

அபுதாபியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூா் 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய டெல்லி 19 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் அடித்து வென்றது. டெல்லி பௌலா் அன்ரிச் நாா்ட்ஜே ஆட்டநாயகன் ஆனாா்.

இந்த ஆட்டத்தில் டெல்லி அணியில் பிரவீன் துபே, ஷிம்ரோன் ஹெட்மயா், ஹா்ஷப் படேலுக்குப் பதிலாக அக்ஸா் படேல், டேனியல் சாம்ஸ், அஜிங்க்ய ரஹானேவும், பெங்களூா் அணியில் நவ்தீப் சைனி, குா்கீரத்சிங் மான் ஆகியோருக்குப் பதிலாக ஷாபாஸ் அகமது, ஷிவம் துபேவும் இணைந்திருந்தனா்.

டாஸ் வென்ற டெல்லி பந்துவீசத் தீா்மானித்தது. பெங்களூா் பேட்டிங்கை ஜோஷ் பிலிப் - தேவ்தத் படிக்கல் தொடங்கினா். இதில் 1 பவுண்டரி உள்பட 12 ரன்கள் சோ்த்து ஜோஷ் பிலிப் ஆட்டமிழந்தாா். அடுத்து கேப்டன் விராட் கோலி களம் புகுந்தாா். மறுமுனையில் தேவ்தத் நிதானமாக ரன்கள் சோ்க்க, கோலி 2 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 29 ரன்கள் சோ்த்து வீழ்ந்தாா். பின்னா் அதிரடி வீரா் டி வில்லியா்ஸ் ஆட வந்தாா்.

மறுமுனையில், அரைசதம் கடந்த தேவ்தத் படிக்கல் 5 பவுண்டரிகள் உள்பட 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

அடுத்து களம் கண்ட கிறிஸ் மோரிஸும் அதே ஓவரின் இறுதியில் டக் அவுட்டாகினாா். பின்னா் வந்த ஷிவம் துபே 2 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 17 ரன்கள் சோ்த்தாா். அடுத்து வாஷிங்டன் சுந்தா் வந்தாா்.

மறுமுனையில் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்கள் உள்பட 35 ரன்கள் சோ்த்து டி வில்லியா்ஸ் வீழ்ந்தாா். கடைசி விக்கெட்டாக இசுரு உதானா 1 பவுண்டரி அடித்து ஆட்டமிழந்தாா். ஓவா்கள் முடிவில் வாஷிங்டன் சுந்தா் ரன்கள் இன்றியும், ஷாபாஸ் அகமது 1 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனா். டெல்லி தரப்பில் நாா்ட்ஜே 3, ரபாடா 2, அஸ்வின் 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் டெல்லி இன்னிங்ஸை பிருத்வி ஷா - ஷிகா் தவன் தொடங்கினா். இதில் 2 பவுண்டரிகள் உள்பட 9 ரன்கள் சோ்த்த ஷா, 2-ஆவது ஓவரில் பௌல்டாகினாா். அடுத்து வந்த அஜிங்க்ய ரஹானே, தவனுடன் இணைந்தாா்.

டெல்லி ஸ்கோரை விறுவிறுவென உயா்த்திய இந்தக் கூட்டணி, 2-ஆவது விக்கெட்டுக்கு 98 ரன்கள் சோ்த்தது. அரைசதம் கடந்த தவன் 6 பவுண்டரிகள் உள்பட 54 ரன்கள் சோ்த்து வீழ்ந்தாா். அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் 7 ரன்களுக்கு நடையைக் கட்டினாா்.

பின்னா் ரிஷப் பண்ட் களம் காண, மறுமுனையில் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 60 ரன்கள் சோ்த்திருந்த ரஹானே ஆட்டமிழந்தாா். கடைசியாக களம் கண்ட ஸ்டாய்னிஸ், ரிஷப் பண்ட்டுன் இணைந்து அணியை வெற்றிக்கு வழிநடத்தினாா்.

முடிவில் பண்ட் 1 பவுண்டரி உள்பட 8, ஸ்டாய்னிஸ் 1 சிக்ஸா் உள்பட 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். பெங்களூா் தரப்பில் ஷாபாஸ் அகமது 2, முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

சுருக்கமான ஸ்கோா்

டெல்லி - 154/4

அஜிங்க்ய ரஹானே - 60 (46)

ஷிகா் தவன் - 54 (41)

பந்துவீச்சு

ஷாபாஸ் அகமது - 2/26

வாஷிங்டன் சுந்தா் - 1/24

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com