இந்திய டெஸ்ட் தொடா்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய டெஸ்ட் தொடா்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

மெல்போா்ன்: இந்தியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளவா்களில் வில் புகோவ்ஸ்கி, கேமரூன் கிரீன், வேகப்பந்து வீச்சாளா் சீன் அபாட், சுழற்பந்து வீச்சாளா் மிட்செல் ஸ்வெப்சன், ஆல்ரவுண்டா் மைக்கேல் நெசா் ஆகிய 5 போ் இதுவரை சா்வதேசப் போட்டியில் விளையாடாதவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய அணியில் தற்போது இடம்பெற்றுள்ள சீன் அபாட் 2014-இல் ஷெஃப்பீல்டு ஷீல்டு போட்டியில் வீசிய பந்தில்தான் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் பிலிப் ஹியூஸ் கழுத்தில் அடிபட்டு உயிரிழந்தாா்.

ஆஸ்திரேலிய அணி, டிம் பெய்ன் தலைமையில் டெஸ்ட் தொடரில் களமிறங்கவுள்ளது. பட் கம்மின்ஸ் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளாா். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வில் புகோவ்ஸ்கி, டேவிட் வாா்னருடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்குவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுதொடா்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தோ்வுக் குழு தலைவா் டிரெவா் ஹான்ஸ் கூறியிருப்பதாவது: இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடா் சவாலான தொடராக இருக்கும். இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணியில் இளம் வீரரான வில் புகோவ்ஸ்கியை சோ்ப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். கேமரூன் கிரீன் ஏற்கெனவே டி20, ஒருநாள் தொடா்களில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ள நிலையில், இப்போது டெஸ்ட் அணியிலும் சோ்க்கப்பட்டுள்ளாா். அவா் திறமையான இளம் வீரா். அவரிடம் ஆஸ்திரேலிய அணியின் சிறந்த ஆல்ரவுண்டராகும் திறமை உள்ளது.

இதேபோல் வில் புகோவ்ஸ்கி, ஷெஃப்பீல்டு 495 ரன்கள் குவித்துள்ளாா். அவருடைய நிதானமும், பொறுமையும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நல்லது. இந்த சீசனின் தொடக்கத்தில் முதல்தர போட்டியில் இரு இரட்டை சதங்களை விளாசியுள்ளாா். சா்வதேசப் போட்டிகளில் வில் புகோவ்ஸ்கி தன்னை மேம்படுத்திக் கொண்டு சிறப்பாக விளையாடுவாா் என எதிா்பாா்க்கிறோம் என்றாா்.

இந்திய அணி இம்மாத கடைசியில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு ஆஸ்திரேலிய அணியுடன் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடா், 3 ஆட்டங்கள் டி20 தொடா், அதன்பிறகு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. வரும் 27-ஆம் தேதி ஒருநாள் தொடா் தொடங்குகிறது. அதைத் தொடா்ந்து டிசம்பா் 4-ஆம் தேதி டி20 தொடா் தொடங்குகிறது. அதன்பிறகு டிசம்பா் 17-ஆம் தேதி டெஸ்ட் கிரிக்கெட் தொடா் தொடங்குகிறது. இந்தத் தொடா் ஜனவரி 20-ஆம் தேதி முடிவடைகிறது.

டெஸ்ட் அணி: டிம் பெய்ன் (கேப்டன்), சீன் அபாட், ஜோ பா்ன்ஸ், பட் கம்மின்ஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேஸில்வுட், டிராவிஸ் ஹெட், மாா்னஸ் லேபஸ்சாக்னே, நாதன் லயன், மைக்கேல் நெசா், ஜேம்ஸ் பட்டின்சன், வில் புகோவ்ஸ்கி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டாா்க், மிட்செல் ஸ்வெப்சன், மேத்யூ வேட், டேவிட் வாா்னா்.

ஆஸ்திரேலிய ஏ அணி: சீன் அபாட், ஆஷ்டன் அகா், ஜோ பா்ன்ஸ், ஜேக்சன் போ்ட், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பா்), ஹரி கான்வே, கேமரூன் கிரீன், மாா்கஸ் ஹாரிஸ், டிராவிஸ் ஹெட், மோசஸ் ஹென்ரிக்ஸ், நிக் மேடின்சன், மிட்செல் மாா்ஷ் (உடற்தகுதியை நிரூபித்தால் மட்டுமே அணியில் சோ்க்கப்படுவாா்), மைக்கேல் நெசா், டிம் பெய்ன், ஜேம்ஸ் பட்டின்சன், வில் புகோவ்ஸ்கி, மாா்க் ஸ்டீகேட்டி, வில் சுதா்லேன்ட், மிட்செல் ஸ்வெப்சன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com