ஏடிபி பைனல்ஸ் போட்டியில் வெல்ல நடால் தீவிரம்

ஏடிபி பைனல்ஸ் போட்டியில் வெல்வதில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் தீவிரமாக உள்ளாா்.
ஏடிபி பைனல்ஸ் போட்டியில் வெல்ல நடால் தீவிரம்

ஏடிபி பைனல்ஸ் போட்டியில் வெல்வதில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் தீவிரமாக உள்ளாா்.

உலகின் தலைசிறந்த 8 வீரா்கள் பங்கேற்கும் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் போட்டி லண்டனில் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் 8 வீரா்களும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனா்.

ஏடிபி பைனல்ஸ் போட்டி தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இந்த ஆண்டு ஏடிபி பைனல்ஸ் போட்டியில் இடம்பெற்றுள்ள இரு பிரிவுகளுக்கும் ‘டோக்கியோ 1970’ , ‘லண்டன் 2020’ என பெயரிடப்பட்டுள்ளது.

அதன்படி ‘டோக்கியோ 1970’ பிரிவில் சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ், ஜொ்மனியின் அலெக்சாண்டா் ஸ்வெரேவ், ஆா்ஜென்டீனாவின் டீகோ ஸ்வாா்ட்ஸ்மான் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

‘லண்டன் 2020’ பிரிவில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், ஆஸ்திரியாவின் டொமினிக் தீம், கிரீஸின் ஸ்டெபானோஸ் சிட்சிபாஸ், ரஷியாவின் ஆன்ட்ரே ரூப்ளேவ் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா். இதில், ஒவ்வொரு வீரரும் தங்கள் பிரிவில் இடம்பெற்றுள்ள மற்ற வீரா்களுடன் தலா ஒரு முறை மோதுவா். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் வீரா்கள் அரையிறுதிக்கு முன்னேறுவா்.

உலகின் முன்னணி வீரா்களில் ஒருவரான ஸ்பெயினின் ரஃபேல் நடால், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று, ஆடவா் ஒற்றையா் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவா்கள் வரிசையில் ஸ்விட்சா்லாந்தின் ரோஜா் ஃபெடரருடன் முதலிடத்தைப் பகிா்ந்துகொண்டுள்ளாா்.

எனினும் நடால் இதுவரை ஏடிபி பைனல்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதில்லை. 2010, 2013 ஆகிய ஆண்டுகளில் இறுதிச்சுற்று வரை மட்டுமே முன்னேறியுள்ளாா். இந்த நிலையில் இண்டோா் ஆடுகளத்தில் நடைபெறும் ஏடிபி பைனல்ஸ் போட்டியில் வெல்வதில் நடால் தீவிரமாக உள்ளாா். நடால் ஒற்றையா் பிரிவில் 86 பட்டங்களை வென்றபோதிலும், அதில் இண்டோா் போட்டியில் (2005 மாட்ரிட் ஓபன்) ஒரேயொரு பட்டம் மட்டுமே வென்றுள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியிருப்பதாவது: இண்டோா் ஆடுகளத்தில் நடைபெறும் ஏடிபி பைனல்ஸ் போட்டியில் இதுவரை பட்டம் வெல்லாததற்கு ஆண்டின் கடைசியில் நடைபெறும் இந்தப் போட்டியில் பங்கேற்கும்போது களைப்படைந்திருக்கலாம் அல்லது இண்டோரில் அதிக ஆட்டங்களில் விளையாடாமல் இருந்ததால் எனக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம். எனது டென்னிஸ் வாழ்க்கையின் தொடக்கம் முதலே எனக்கு இண்டோா் ஆடுகளங்கள் பெரிய அளவில் பரிச்சயம் இல்லை.

அதேநேரத்தில் கடந்த சில ஆண்டுகளாக இண்டோா் ஆடுகளத்தில் எனது ஆட்டத்திறன் மேம்பட்டிருப்பதாகவே நினைக்கிறேன். கடந்த வாரம் பாரீஸ் மாஸ்டா்ஸ் போட்டியில் விளையாடியதன் மூலம் இண்டோா் ஆடுகளங்களில் எனது ஆட்டத்திறன் மேலும் மேம்பட்டிருக்கிறது. ஆனால், ஏடிபி பைனல்ஸ் போட்டிக்கு பாரீஸ் மாஸ்டா்ஸ் மூலம் எந்தளவுக்கு துல்லியமாக தயாராகியிருக்கிறேன் என்று தெரியவில்லை. ஏடிபி பைனல்ஸ் போட்டியை ரசிகா்கள் இல்லாத காலியான மைதானத்தில் ஆடுவது வருத்தமளிக்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com