ஐபிஎல் ஏலத்துக்கு முன்பு தோனியை விடுவிக்க வேண்டும்: சிஎஸ்கே அணிக்கு ஆகாஷ் சோப்ரா யோசனை

தோனி உங்களுடன் இணைந்து மூன்று வருடங்கள் பயணம் செய்வாரா...
ஐபிஎல் ஏலத்துக்கு முன்பு தோனியை விடுவிக்க வேண்டும்: சிஎஸ்கே அணிக்கு ஆகாஷ் சோப்ரா யோசனை

பெரிய ஐபிஎல் ஏலத்துக்கு முன்பு தோனியை சிஎஸ்கே அணி விடுவிக்க வேண்டும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

மும்முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த வருட ஐபிஎல் போட்டியில் பிளேஆஃப்-புக்குத் தகுதிபெறாமல் வெளியேறியது. கடந்த வருடம் வரை கலந்துகொண்ட அனைத்து ஐபிஎல் போட்டிகளிலும் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்ற சிஎஸ்கே அணி முதல்முறையாக இந்த நிலையை அடைந்துள்ளது. விளையாடிய 14 ஆட்டங்களில் 6-ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 6-ம் இடத்தைப் பிடித்தது.

இந்நிலையில் 2021 ஐபிஎல் போட்டிக்கு முன்பு பெரிய ஏலம் நடைபெறவுள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக ஐந்து வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். ஆனால், ஏலத்துக்கு முன்பு தோனியை விடுவிக்க வேண்டும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா யோசனை கூறியுள்ளார். ஃபேஸ்புக்கில் வெளியிட்ட விடியோவில் அவர் கூறியதாவது:

பெரிய ஐபிஎல் ஏலத்துக்கு முன்பு தோனியை சிஎஸ்கே அணி விடுவிக்க வேண்டும் என எண்ணுகிறேன். பெரிய ஏலம் நடைபெற்றால் அந்த வீரருடன் நீங்கள் மூன்று வருடங்கள் இணைந்திருக்க வேண்டும். ஆனால் தோனி உங்களுடன் இணைந்து மூன்று வருடங்கள் பயணம் செய்வாரா? தோனியைத் தக்கவைக்க வேண்டாம் என நான் சொல்லவில்லை. ஆனால் அவரைத் தக்கவைத்துக்கொண்டால் நீங்கள் ரூ. 15 கோடி தர வேண்டும். 

தோனி உங்களுடன் இணைந்து மூன்று வருடங்கள் பயணிக்காமல், 2021 ஐபிஎல் போட்டியில் மட்டும் விளையாடினால் 2022-ல் உங்களுக்கு ரூ. 15 கோடி திரும்பக் கிடைத்துவிடும். ஆனால் அதன் மதிப்புக்கேற்ற வீரரை எப்படித் தேர்வு செய்யப் போகிறீர்கள்? பெரிய ஏலத்தின் மகிமையே அதுதான். உங்களிடம் அதிகப் பணம் இருந்தால் பெரிய அணியை உருவாக்க முடியும். பெரிய ஏலத்துக்கு முன்பு தோனியை விடுவித்து, பிறகு அவரை ஏலத்தில் ரைட் டு மேட்ச் கார்டில் தேர்வு செய்து கொள்ளலாம். உங்களிடம் போதிய பணம் இருந்தால் சரியான வீரர்களை ஏலத்தில் தேர்வு செய்ய முடியும் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com