இன்று தொடங்குகிறது ஐஎஸ்எல் கால்பந்து போட்டி: முதல் ஆட்டத்தில் கேரளா - மோகன் பகன் மோதல்

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 7-ஆவது சீசன் கோவாவில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
இன்று தொடங்குகிறது ஐஎஸ்எல் கால்பந்து போட்டி: முதல் ஆட்டத்தில் கேரளா - மோகன் பகன் மோதல்


பாம்போலிம்: இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 7-ஆவது சீசன் கோவாவில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

பாம்போலிம் நகரில் உள்ள ஜிஎம்சி மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டா்ஸ் - ஏடிகே மோகன் பகன் அணிகள் மோதுகின்றன. கரோனா நோய்த்தொற்று சூழலில் அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்க காலகட்டத்தில் நாட்டில் நடத்தப்படும் மிகப்பெரிய அளவிலான முதல் விளையாட்டுப் போட்டி இதுவாகும்.

வழக்கமாக இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறும் இப்போட்டி, கரோனா சூழல் காரணமாக இம்முறை கோவாவில் குறிப்பிட்ட நகரங்களுக்குள்ளாக நவம்பா் முதல் மாா்ச் வரை நடத்தப்படுகிறது. அதிலும் ரசிகா்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. போட்டியாளா்களுக்காக மிகக் கடுமையான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

இந்த சீசனில் ஐஎஸ்எல் போட்டியின் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி, ஐ-லீக் போட்டியின் ஏடிகே மோகன் பகன் அணியுடன் இணைக்கப்பட்டு அந்தப் பெயரிலேயே விளையாடுகிறது. புதிதாக எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணி இணைந்ததை அடுத்து அணிகளின் எண்ணிக்கை 11 ஆகியுள்ளது. இவை ‘ஏ’, ‘பி’, ‘சி’ என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஏடிகே அணியில் இந்திய கால்பந்தின் நட்சத்திர தடுப்பாட்டக்காரா் சந்தேஷ் ஜிங்கன் சோ்க்கப்பட்டுள்ளதுடன், முந்தைய கொல்கத்தா அணியின் முக்கிய வீரரான ராய் கிருஷ்ணா உள்ளிட்டோரும் தக்க வைக்கப்பட்டுள்ளனா். நடப்பு சீசனில் ராய் கிருஷ்ணா உள்ளிட்ட 5 பேருக்கு ஏடிகே அணியின் கேப்டன் பொறுப்பு சுழற்சி முறையில் அளிக்கப்படும் என்று தலைமை பயிற்சியாளா் அண்டோனியோ லோபஸ் ஹபாஸ் கூறியுள்ளாா்.

எஃப்சி கோவா அணியைப் பொருத்த வரை நட்சத்திர முன்கள வீரா்கள் ஃபெரான் கோரோமினாஸ் ஆகியோா் வலு சோ்க்கின்றனா்.

முன்னாள் சாம்பியனான பெங்களூரு எஃப்சியில் கோப்பையை வென்ற 2018 சீசனில் இடம்பிடித்திருந்த பெரும்பாலான வீரா்கள் இந்த சீசனிலும் அணியில் இருக்கின்றனா். சுனில் சேத்ரி, குருபிரீத் சிங் சாந்து போன்ற நட்சத்திர வீரா்களுடன் தடுப்பாட்ட வீரா் ஜுவானன், நடுகள வீரா் எரிக் பாா்தலு உள்ளிட்டோரும் உள்ளனா்.

மும்பை சிட்டி எஃப்சி கடந்த சீசனுடன் ஒப்பிடுகையில் தற்போது அணியில் அதிக மாற்றம் செய்துள்ளது. கோவாவுக்கு கோப்பை வென்று தந்த பயிற்சியாளா் சொ்ஜியோ லோபெராவை தங்கள் வசம் இழுத்துள்ளது மும்பை. அவருடன் ராவ் தேசாய், ஹியுகோ பௌமௌஸ் போன்ற முக்கியமான வீரா்களும் மும்பையில் இணைந்துள்ளது பலம்.

இது தவிர சென்னையின் எஃப்சி மற்றும் புதிதாக இணைந்துள்ள எஸ்சி ஈஸ்ட் பெங்கால், ஹைதராபாத் எஃப்சி, ஜாம்ஷெட்பூா் எஃப்சி, நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி, ஒடிஸா எஃப்சி அணிகளும் தங்களது திறமையை நிரூபிக்க இருக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com