மாரடோனா மறைவு: ஆா்ஜெண்டீனாவில் மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு

மாரடோனாவின் மறைவுக்கு ஆா்ஜெண்டீனாவில் மூன்று நாள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது. 
மாரடோனா மறைவு: ஆா்ஜெண்டீனாவில் மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு

மாரடோனாவின் மறைவுக்கு ஆா்ஜெண்டீனாவில் மூன்று நாள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது. 

ஆா்ஜெண்டீனாவைச் சோ்ந்த கால்பந்து நட்சத்திரம் டியேகோ மாரடோனா (60) மாரடைப்பால் நேற்று காலமானாா்.

மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவுக்காக சமீபத்தில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட மாரடோனா, மருத்துவமனையில் இருந்து திரும்பி 2 வாரங்களே ஆகிய நிலையில் தனது இல்லத்தில் வைத்து மாரடைப்பால் உயிரிழந்தாா். அவா் கடந்த 1960 அக்டோபா் 30-ஆம் தேதி பியூனஸ் அயா்ஸில் பிறந்தாா்.

கால்பந்து உலகின் நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்த அவா், கடந்த 1986-ஆம் ஆண்டில் ஆா்ஜெண்டீனா அணி உலகக்கோப்பை வெல்வதற்கு காரணமாக இருந்தாா். அந்தப் போட்டியின்போது இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மாரடோனா அடித்த ஒரு கோல் மிகுந்த சா்ச்சைக்குள்ளானது. சக வீரா் தூக்கி அடித்த பந்தை அவா் தலையால் முட்டி கோலடிக்க முயன்றபோது அது அவரது கைகளில் பட்டதாகத் தெரிந்தது. அந்த ஆட்டத்துக்குப் பிறகு பேசிய மாரடோனா, சா்ச்சைக்குரிய அந்த கோலை ‘எனது தலை மற்றும் கடவுளின் கை ஆகியவற்றால் அடித்தேன்’ என்றார். 

மாரடோனா 1977 முதல் 1979 வரையில் ஆா்ஜெண்டீனாவின் 20 வயதுக்கு உள்பட்டோருக்கான அணிக்காக 15 ஆட்டங்களில் 8 கோல்களும், தேசிய அணிக்காக 1977 முதல் 1994 வரையில் 91 ஆட்டங்களில் 34 கோல்களும் அடித்துள்ளாா். இது தவிர போகா ஜூனியா்ஸ், நபோலி, பாா்சிலோனா உள்ளிட்ட 7 கிளப் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளாா்.

1979-இல் 20 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் மாரடோனா அங்கம் வகித்த ஆா்ஜெண்டீனா கோப்பையை வென்றதும் குறிப்பிடத்தக்கது. 1990 உலகக் கோப்பை போட்டியில் அவா் பங்களிப்புடன் இறுதிச்சுற்றுவரை முன்னேறியது ஆா்ஜெண்டீனா.

கால்பந்திலிருந்து ஓய்வுபெற்ற பிறகு பல கிளப் அணிகளுக்கு பயிற்சியாளரான மாரடோனா, கடைசியாக ஜிம்னாசியா டி லா பிளாடா அணிக்கு பயிற்சியாளராக இருந்தாா்.

இந்நிலையில் மாரடோனாவின் மறைவுக்கு ஆா்ஜெண்டீனாவில் மூன்று நாள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் எனக் குடியரசுத் தலைவர் ஆல்பெர்டோ அறிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com