சுரேஷ் ரெய்னா இல்லாத சிஎஸ்கே: பலவீனத்தைச் சுட்டிக்காட்டும் டீன் ஜோன்ஸ்
By DIN | Published On : 16th September 2020 01:40 PM | Last Updated : 21st September 2020 03:34 PM | அ+அ அ- |

சுரேஷ் ரெய்னா இல்லாததால் சிஎஸ்கே அணியில் அனைவரும் வலது கை பேட்ஸ்மேன்களாக இருப்பது பலவீனமாக அமையும் என முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் கூறியுள்ளார்.
கரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
பஞ்சாபில் உள்ள பதான்கோட் மாவட்டத்தில் கொள்ளையா்கள் தாக்கியதில் ரெய்னாவின் உறவினா்கள் இருவர் உயிரிழந்துள்ளார்கள். இதையடுத்து, இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா விலகியுள்ளார்.
இந்நிலையில் சென்னை அணியின் பேட்டிங் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் டீன் ஜோன்ஸ் கூறியதாவது:
ரெய்னா அணியில் இல்லாதது சிஎஸ்கே அணிக்குப் பெரிய கவலைக்குரிய விஷயமாகும். ஐபிஎல் போட்டியின் அதிக ரன்கள் எடுத்த முதல் ஐந்து வீரர்களில் அவர் உள்ளார்.
இடக்கை பேட்ஸ்மேனான அவர் சுழற்பந்துவீச்சை நன்கு விளையாடுவார். சிஎஸ்கே அணியில் பெரும்பான்மையாக வலது கை பேட்ஸ்மேன்கள் உள்ளதால் அது அந்த அணிக்குப் பலவீனமாக அமையும். சில இடக்கை பேட்ஸ்மேன்கள் தேவை. இல்லாவிட்டால் லெக் ஸ்பின்னர் பந்துவீசும்போது ரன்கள் எடுக்காமல் தேங்கிவிடுவார்கள். ரெய்னா, ஹர்பஜன் சிங் இல்லாததால் அணியை ஒற்றுமையுடன் நடத்த வேண்டிய பொறுப்பு தோனி மற்றும் பயிற்சியாளர் பிளெமிங்கிடம் உள்ளது என்றார்.