ஃபகார் ஸமான் 193 ரன்கள் விளாசியும் பாக். தோல்வி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஃபகார் ஸமான் 193 ரன்கள் விளாசியும் அந்த அணி தோல்வியடைந்துள்ளது.
ஃபகார் ஸமான் 193 ரன்கள் விளாசியும் பாக். தோல்வி


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஃபகார் ஸமான் 193 ரன்கள் விளாசியும் அந்த அணி தோல்வியடைந்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2-வது ஒருநாள் ஆட்டம் ஜோகன்னஸ்பர்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதன்படி முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 341 ரன்கள் குவித்தது. குயின்டன் டி காக் 80 ரன்கள், கேப்டன் தெம்பா பவுமா 92 ரன்கள், வான்டெர் டஸன் 60 ரன்கள் மற்றும் டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் விளாசினர்.

பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஹாரிஸ் ரௌஃப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

342 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி பாகிஸ்தான் களமிறங்கியது. அந்த அணியில் எந்தவொரு பேட்ஸ்மேனும் சோபிக்கவில்லை. தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய ஃபகார் ஸமான் மட்டும் அரைசதம் அடித்து, பிறகு சதம் அடித்து ஆறுதல் அளித்து வந்தார்.

ஒருகட்டத்தில் அவர் அதிரடி காட்டி 150 ரன்களையும் கடக்க ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது.

எனினும், மறுமுனையில் அவருக்கு உதவ யாருமில்லாததால் அவர் திணறினார்.

கடைசி ஓவரில் பாகிஸ்தான் வெற்றிக்கு 31 ரன்கள் தேவை என்ற நிலை வரை தாக்குப்பிடித்த ஸமான், 50-வது ஓவரின் முதல் பந்தில் ரன் அவுட் ஆனார்.

இறுதிவரை போராடிய ஸமான் 155 பந்துகளில் 18 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் உள்பட மொத்தம் 193 ரன்கள் விளாசினார். ஒருநாள் கிரிக்கெட்டில் 2-வது பேட்டிங்கில் இதுவே தனிநபர் அதிகபட்ச ஸ்கோர்.

இந்த இன்னிங்ஸில் ஸமானுக்கு அடுத்தபடியான அதிகபட்ச ஸ்கோரே கேப்டன் பாபர் அஸாமின் 31 ரன்கள்தான், ஒருவர்கூட அரைசதம் அடிக்கவில்லை. இதுவே பாகிஸ்தானின் தோல்விக்கு வழிவகுத்தது.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 324 ரன்கள் மட்டுமே குவித்த பாகிஸ்தான் 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

பாகிஸ்தான் தோல்வியடைந்தபோதிலும் ஆட்டநாயகனாக ஃபகார் ஸமானே தேர்வு செய்யப்பட்டார்.

3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com