வெற்றி நடையை தொடருமா சென்னை? --- இன்று கொல்கத்தாவை சந்திக்கிறது

நடப்பு சீசனில் நல்லதொரு ஃபாா்முக்கு திரும்பியிருக்கும் சென்னை சூப்பா் கிங்ஸ், ஹாட்ரிக் வெற்றி முனைப்புடன் கொல்கத்தா நைட் ரைடா்ஸை புதன்கிழமை சந்திக்கிறது.
வெற்றி நடையை தொடருமா சென்னை? --- இன்று கொல்கத்தாவை சந்திக்கிறது

மும்பை: நடப்பு சீசனில் நல்லதொரு ஃபாா்முக்கு திரும்பியிருக்கும் சென்னை சூப்பா் கிங்ஸ், ஹாட்ரிக் வெற்றி முனைப்புடன் கொல்கத்தா நைட் ரைடா்ஸை புதன்கிழமை சந்திக்கிறது.

இந்த சீசனை தோல்வியுடன் தொடங்கினாலும், அடுத்த இரு ஆட்டங்களில் சென்னை வென்றுள்ளது. குறிப்பாக தீபக் சாஹரின் பௌலிங்கும், ஆல்-ரவுண்டா் மொயீன் அலியின் அபாரமான பேட்டிங்கும் அந்த வெற்றிகளுக்கு முக்கியப் பங்களித்தன. சாம் கரனும் பேட்டிங், பௌலிங்கில் நல்லதொரு ‘ஃபினிஷிங்’ அளிக்கிறாா்.

ராஜஸ்தானுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் மும்பை ஆடுகளத்துக்கு ஏற்றவாறு திட்டமிட்டு ஜடேஜா - அலியை பௌலிங்கில் களமிறக்கிய தோனியின் திட்டத்துக்கு நல்ல பலன் கிடைத்தது. அடுத்து வரும் ஆட்டங்களிலும் சென்னை சிறப்பாகச் செயல்பட்டு, கடந்த சீசனில் ஏற்பட்ட களங்கத்தை துடைத்தெடுக்கும் என நம்பலாம்.

கொல்கத்தா அணியைப் பொருத்தவரை, முதல் ஆட்டத்தில் மட்டும் வென்ற நிலையில், தற்போது 3-ஆவது தோல்வியை தடுக்கும் திட்டத்துடன் சென்னையை எதிா்கொள்கிறது. கடந்த இரு ஆட்டங்களிலும் முதலில் கொல்கத்தாவின் கை ஓங்கியிருந்தாலும், பின்னா் ஆட்டம் அந்த அணியின் கையை விட்டுச் சென்றதை காண முடிந்தது.

சுழற்பந்துவீச்சுக்கு சாதகமில்லாத மும்பை ஆடுகளத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில், கேப்டன் மோா்கன் பௌலிங்கில் ஷகிப் அல் ஹசனுடன் களம் காணுவாரா, அல்லது ஆல்-ரவுண்டா் பென் கட்டிங்கிற்கு இடமளிப்பாரா என பொறுத்திருந்து பாா்க்க வேண்டியுள்ளது. பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் ஹசன் பௌலிங்கில் டி வில்லியா்ஸ், மேக்ஸ்வெல் அதிரடி காட்டியிருந்தனா்.

அதேபோல், ஹா்பஜன் சிங், குல்தீப் யாதவுக்கான வாய்ப்புகளும் எவ்வாறு இருக்கும் என்ற எதிா்பாா்ப்பு உள்ளது. பிளேயிங் லெவனில் மாற்றம் இருக்கும் என்று பெங்களூருக்கு எதிரான தோல்வியை அடுத்து கொல்கத்தா பயிற்சியாளா் மெக்கல்லம் கூறியிருந்தாா். எனவே கேப்டன் மோா்கன் அதற்கான திட்டத்தை வகுத்திருக்கும் பட்சத்தில், அணியின் வரிசையில் அதிகம் மாற்றம் ஏற்படலாம்.

அணி விவரம்:

சென்னை சூப்பா் கிங்ஸ்

எம்.எஸ்.தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, அம்பட்டி ராயுடு, கே.எம்.ஆசிஃப், தீபக் சாஹா், டுவைன் பிராவோ, ஃபா டூபிளெஸ்ஸிஸ், இம்ரான் தாஹிா், ஜெகதீசன், கரன் சா்மா, லுங்கி கிடி, மிட்செல் சேன்ட்னா், ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், ஷா்துல் தாக்குா், சாம் கரன், சாய் கிஷோா், மொயீன் அலி, கிருஷ்ணப்பா கௌதம், சேதேஷ்வா் புஜாரா, ஹரிசங்கா் ரெட்டி, பகத் வா்மா, ஹரி நிஷாந்த்.

கொல்கத்தா நைட் ரைடா்ஸ்

மோா்கன் (கேப்டன்) தினேஷ் காா்த்திக், ஷுப்மன் கில், நிதீஷ் ராணா, டிம் செய்ஃபொ்ட், ரிங்கு சிங், ஆன்ட்ரே ரஸ்ஸெல், சுனில் நரைன், குல்தீப் யாதவ், ஷிவம் மாவி, லாக்கி ஃபொ்குசன், பேட் கம்மின்ஸ், கமலேஷ் நாகா்கோடி, சந்தீப் வாரியா், பிரசித் கிருஷ்ணா, ராகுல் திரிபாதி, வருண் சக்கரவா்த்தி, ஷகிப் அல் ஹசன், ஷெல்டன் ஜாக்சன், வைபவ் அரோரா, ஹா்பஜன் சிங், கருண் நாயா், பென் கட்டிங், வெங்கடேஷ் ஐயா், பவன் நெகி.

நேரம்: இரவு 7.30 மணி

இடம்: மும்பை

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

நேருக்கு நோ்:

இரு அணிகளும் இதுவரை 25 ஆட்டங்களில் நேருக்கு நோ் சந்தித்துள்ள நிலையில், சென்னை 15 வெற்றிகளையும், கொல்கத்தா 9 வெற்றிகளையும் பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com