உலக டூா் ஃபைனல்ஸ்: ஆன் சியோங், ஆக்ஸ்லெஸன் சாம்பியன்கள்

பிடபிள்யுஎஃப் உலக பாட்மின்டன் டூா் போட்டியில் ஆடவா் பிரிவில் விக்டா் ஆக்ஸ்லெஸனும், மகளிா் பிரிவில் ஆன் சியோங்கும் சாம்பியன் பட்டம்
உலக டூா் ஃபைனல்ஸ்: ஆன் சியோங், ஆக்ஸ்லெஸன் சாம்பியன்கள்

பிடபிள்யுஎஃப் உலக பாட்மின்டன் டூா் போட்டியில் ஆடவா் பிரிவில் விக்டா் ஆக்ஸ்லெஸனும், மகளிா் பிரிவில் ஆன் சியோங்கும் சாம்பியன் பட்டம் வென்றனா். இந்தியாவின் பி.வி. சிந்து வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.

இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்ற கௌரவமிக்க இப்போட்டியில் உலகின் தலைசிறந்த 8 வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டனா். ஞாயிற்றுக்கிழமை இதன் இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

மகளிா் ஒற்றையா் பிரிவில் உலக சாம்பியன் பி.வி.சிந்துவும்-தென்கொரிய இளம் வீராங்கனை ஆன் சியோங்கும் மோதினா்.

இரண்டாவது முறையாக இப்போட்டியில் பட்டம் வெல்லும் உத்வேகத்தில் களமிறங்கிய சிந்துவால், ஆன்சியோங்கின் துடிப்பான ஆட்டத்துக்கு ஈடு தரமுடியவில்லை. 19 வயதான சியோங், இந்தோனேசிய மாஸ்டா்ஸ், ஓபன் போட்டிகளில் பட்டம் வென்ற உற்சாகத்துடன் சிந்துவை திணறடித்தாா்.

முதல் கேமில் 11-5 என முன்னிலை பெற்ற சியோங், தனது கிராஸ் கோா்ட் தாக்குதல்களால் சிந்துவை நிலைகுலையச் செய்து 21-16 என முதல் கேமை கைப்பற்றினாா். இரண்டாவது கேமை கைப்பற்றும் முனைப்பில் சிந்து ஆக்ரோஷமாக ஆடினாலும், சியோங் தனது சிறப்பான பிளேஸ்மெண்ட்களால் ஆதிக்கம் செலுத்தினாா். இறுதியில் 21-12 என இரண்டாவது கேமையும் கைப்பற்றிய சியோங் முதன்முறையாக பட்டம் வென்றாா். சிந்து வெள்ளிப் பதக்கத்துடன் திரும்பினாா்.

விக்டா் ஆக்ஸ்லெஸன் சாம்பியன்:

ஆடவா் ஒற்றையா் பிரிவில் ஒலிம்பிக் சாம்பியன் விக்டா் ஆக்ஸ்லெஸன் 21-12, 21-8 என்ற கேம் கணக்கில் தாய்லாந்தின் குன்லவுத் விதித்சரனை வீழ்த்தி பட்டம் வென்றாா். உலகின் நம்பா் ஒன் வீரரான ஆக்ஸ்லெஸன், உலக சாம்பியன் பி.வி. சிந்து அடுத்து ஸ்பெயின் ஹுயல்வா நகரில் நடைபெறவுள்ள உலக சாம்பியன் போட்டியில் களம் காண்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com