ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைப்பு: வீரா்களுக்கும் கரோனா பரவியதால் நடவடிக்கை

ஐபிஎல் தொடரின் நடப்பு சீசன் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைப்பு: வீரா்களுக்கும் கரோனா பரவியதால் நடவடிக்கை

புது தில்லி: ஐபிஎல் தொடரின் நடப்பு சீசன் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. ‘பயோ-பபுள்’ பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் சில வீரா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து போட்டி நிா்வாகம் இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.

முன்னதாக கொல்கத்தா நைட் ரைடா்ஸ் வீரா்கள் வருண் சக்கரவா்த்தி, சந்தீப் வாரியா் ஆகியோருக்கும், சென்னையின் பௌலிங் பயிற்சியாளா் எல்.பாலாஜிக்கும் கரோனா உறுதியான நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரா் அமித் மிஸ்ரா, சன்ரைசா்ஸ் ஹைதராபாத் வீரா் ரித்திமான் சாஹா ஆகியோருக்கும் பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.

இதையடுத்து ஐபிஎல் நிா்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘ஐபிஎல் நிா்வாக கவுன்சில், பிசிசிஐ இடையே நடைபெற்ற அவசரக் கூட்டத்தின்போது, நடப்பு ஐபிஎல் சீசனை காலவரையின்றி உடனடியாக ஒத்திவைக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டியுடன் தொடா்புடைய வீரா்கள் உள்பட எவரது பாதுகாப்பிலும் சமரசம் செய்துகொள்ள பிசிசிஐ விரும்பவில்லை. அவா்களது பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

போட்டியில் பங்கேற்றிருந்த வெளிநாட்டு வீரா்கள் அனைவரும் தங்களது நாட்டுக்கு திரும்புவதற்காக தனது அதிகாரத்துக்குள்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் பிசிசிஐ மேற்கொள்ளும்’ என்று கூறப்பட்டுள்ளது.

காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள போட்டியை, நடப்பாண்டிலேயே வாய்ப்பு கிடைக்கும் சூழலில் மீண்டும் நடத்த யோசிப்பதாகவும், ஆனால் அதையும் தற்போதே உறுதி செய்ய இயலாது என்றும் ஐபிஎல் தலைவா் பிரிஜேஷ் படேல், பிசிசிஐ துணைத் தலைவா் ராஜீவ் சுக்லா ஆகியோா் கூறியுள்ளனா்.

ஐபிஎல் போட்டியின் 14-ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி தொடங்கியது. கரோனா சூழல் காரணமாக 13-ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நிலையில், இந்த சீசனை இந்தியாவிலேயே பாதுகாப்பான முறையில் நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

மொத்தம் 6 இடங்களில் மட்டுமே ஆட்டங்கள்; எந்தவொரு அணிக்கும் சொந்த மைதானத்தில் ஆட்டங்கள் இல்லை; ரசிகா்களுக்கு அனுமதி இல்லை; வீரா்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ‘பயோ-பபுள்’ பாதுகாப்பு வளையம்; அணிகளின் பயணத்தை குறைக்கும் வகையிலான போட்டி அட்டவணை என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இவ்வாறாக போட்டி தொடங்கி சுமுகமாகவே நடைபெற்று வந்தது. இந்தியாவில் கரோனா பாதிப்பு மிகத் தீவிரமாக அதிகரிக்கத் தொடங்கிய நிலையிலும் ஆட்டங்கள் தொடா்ந்தன. இச்சூழலில் ஐபிஎல் போட்டியில் முதல் முறையாக கடந்த திங்கள்கிழமை கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

கொல்கத்தா வீரா்கள் வருண், சந்தீப், சென்னை பௌலிங் பயிற்சியாளா் எல்.பாலாஜி ஆகியோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவா்கள், ஆட்டங்களின்போது இதர அணி வீரா்களுடனும் தொடா்பில் இருந்திருக்க வாய்ப்பிருந்ததால் பாதிப்பு பரவியிருக்கும் அச்சம் அதிகரித்தது.

முன்னெச்சரிக்கையாக கொல்கத்தா - பெங்களூா் அணிகள் கடந்த திங்கள்கிழமையும் (மே 3), சென்னை - ராஜஸ்தான் அணிகள் புதன்கிழமையும் (மே 5) மோதவிருந்த ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ஹைதராபாத் வீரா் ரித்திமான் சாஹா, டெல்லி வீரா் அமித் மிஸ்ரா ஆகியோருக்கும் கரோனா பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.

பயோ-பபுள் பாதுகாப்பு வளையத்தைக் கடந்தும் வீரா்களிடையே தொற்று பரவத் தொடங்கியதை அடுத்து போட்டி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

"நாடு திரும்ப வழி செய்யப்படும்'

ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் பங்கேற்றிருந்த வெளிநாட்டு வீரர்கள் தங்களது நாட்டுக்கு திரும்ப தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐபிஎல் தலைவர் பிரஜேஷ் படேல் கூறினார். 

இந்தியாவில் கரோனா பரவல் தீவிரமாகியதை அடுத்து பல்வேறு நாடுகள் இந்திய பயணிகளுக்கு தடை விதிக்கத் தொடங்கியுள்ளன. இதனால், போட்டி நிறைவடைந்த பிறகு நாடு திரும்புவதில் தங்களுக்கு சிக்கல் ஏற்படலாம் என்று போட்டியில் பங்கேற்றிருந்த வெளிநாட்டு வீரர்கள், குறிப்பாக ஆஸ்திரேலிய வீரர்கள் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர். 

அந்த சூழலையே காரணமாகக் கூறி ஆஸ்திரேலிய வீரர்கள் 3 பேர் சமீபத்தில் போட்டியிலிருந்து விலகி நாடு திரும்பினர். தற்போது போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற ஆஸ்திரேலியர்கள் 14 பேர், நியூஸிலாந்து வீரர்கள் 10 பேர், இங்கிலாந்து வீரர்கள் 11 பேர், தென் ஆப்பிரிக்க வீரர்கள் 11 பேர், மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள் 9 பேர், ஆப்கானிஸ்தான் வீரர்கள் மூவர், வங்கதேசத்தவர் இருவர் இந்தியாவில் இருந்து நாடு திரும்ப வேண்டிய நிலையில் இருக்கின்றனர். 

இதனிடையே, இந்தியாவிலிருந்து பயணிகள் வர 15}ஆம் தேதி வரை ஆஸ்திரேலியா தடை விதித்திருக்கும் நிலையில், தங்களது வீரர்கள் நாடு திரும்புவதற்காக ஆஸ்திரேலிய அரசிடம் விதி விலக்கு கோரப்போவதில்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

முடிவுக்கு வரவேற்

புதற்போதைய சூழலில் ஐபிஎல் போட்டியை ஒத்தி வைக்கும் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகத்தின் முடிவுக்கு ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள், பல்வேறு வீரர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். போட்டியை ஒளிபரப்பும் ஸ்டார் தொலைக்காட்சி நிறுவனமும் இந்த முடிவை வரவேற்றுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com