இந்திய மகளிர் அணி பயிற்சியாளர்: ரமேஷ் பவாரின் பெயர் பரிந்துரை!

மகளிர் அணி பயிற்சியாளர் நியமனம் குறித்த விவரங்களை பிசிசிஐ விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இந்திய மகளிர் அணி பயிற்சியாளர்: ரமேஷ் பவாரின் பெயர் பரிந்துரை!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரமேஷ் பவாரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

2018 மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியின் போது பயிற்சியாளர் ரமேஷ் பவார் மற்றும் மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் இடையே மோதல் ஏற்பட்டது. போட்டி முடிவடைந்த பிறகு ரமேஷ் பவாரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படவில்லை. எனினும்,  மகளிர் அணி வீராங்கனைகள் இரு பிரிவாக பிரிந்து ஒரு தரப்பு ரமேஷ் பவார் நீடிக்க வேண்டும் எனவும், மற்றொரு தரப்பு புதிய பயிற்சியாளரை நியமிக்கவும் வலியுறுத்தியது. புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமனத்துக்கு விண்ணப்பங்களை பிசிசிஐ கோரியது. கபில்தேவ், அன்ஷுமன் கெய்க்வாட். மூத்த வீராங்கனை சாந்தா ரங்கசாமி ஆகியோர் கொண்ட மூவர் தேர்வுக்குழு, 2018 டிசம்பரில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் வீரர் டபிள்யூ.வி. ராமனைத் தேர்வு செய்தது. 

டபிள்யூ.வி. ராமன் பயிற்சியாளராக இருந்த காலக்கட்டத்தில் இந்திய மகளிர் அணி, 2020 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. எனினும் கடந்த மார்ச்சில் இந்தியாவில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள், டி20 தொடர்களில் இந்திய அணி தோல்வியடைந்தது. 

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 13 அன்று இந்திய மகளிர் அணிக்கான புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமனத்துக்கு விண்ணப்பங்களை பிசிசிஐ கோரியது. இதன்படி, மதன் லால் தலைமையிலான தேர்வுக்குழு, முன்னாள் பயிற்சியாளர் ரமேஷ் பவாரை மீண்டும் இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராகப் பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து மகளிர் அணி பயிற்சியாளர் நியமனம் குறித்த விவரங்களை பிசிசிஐ விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com