இன்னொரு வீரரின் வாய்ப்பைத் தட்டிப் பறிக்க டி வில்லியர்ஸ் விரும்பவில்லை: தெ. ஆ. பயிற்சியாளர்

இந்த முடிவை எடுப்பதற்கான காரணங்கள் டி வில்லியர்ஸிடம் இருந்தன.
இன்னொரு வீரரின் வாய்ப்பைத் தட்டிப் பறிக்க டி வில்லியர்ஸ் விரும்பவில்லை: தெ. ஆ. பயிற்சியாளர்

இன்னொரு வீரரின் வாய்ப்பைத் தட்டிப் பறிக்க விரும்பாததால் ஓய்வு அறிவிப்பைத் திரும்பப் பெற டி வில்லியர்ஸ் மறுத்துவிட்டார் என தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் மார்க் பெளச்சர் கூறியுள்ளார்.

2018 மே 23 அன்று, சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக டி வில்லியர்ஸ் அறிவித்தார். தன்னுடைய திடீர் ஓய்வு அறிவிப்பை சமூகவலைத்தளம் வழியாக அறிவித்தார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று, டி20 லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் டி வில்லியர்ஸை மீண்டும் தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பெற வைத்து, டி20 உலகக் கோப்பையில் விளையாட வைக்கும் முயற்சிகள்  நடைபெற்று வந்தன.

2019 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பெற டி வில்லியர்ஸ் விருப்பம் தெரிவித்தார். எனினும் அவருடைய விருப்பத்தை தெ.ஆ. தேர்வுக்குழு நிராகரித்தது. 10 நாடுகள் பங்கேற்ற அப்போட்டியில் தெ. ஆ. அணி 7-ம் இடம் பிடித்தது. 

ஐபிஎல் 2020 போட்டியில் 14 ஆட்டங்களில் 454 ரன்கள் குவித்தார் டி வில்லியர்ஸ். இந்த வருட ஐபிஎல் போட்டியில் 7 ஆட்டங்களில் 2 அரை சதங்களுடன் 207 ரன்கள் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் - 164.28.

ஓய்வு அறிவிப்பைத் திரும்பப் பெற டி வில்லியர்ஸ் மறுத்துள்ளதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நேற்று தகவல் தெரிவித்தது. இதனால் அணியில் மீண்டும் அவர் இடம்பெறுவதற்கான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ளதாகவும் கூறியது. இதையடுத்து மேற்கிந்தியத் தீவில் விளையாடவுள்ள டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் டி வில்லியர்ஸ் இடம்பெறவில்லை.  

இந்நிலையில் டி வில்லியர்ஸின் முடிவு பற்றி தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் மார்க் பெளச்சர் கூறியதாவது:

இந்த முடிவை எடுப்பதற்கான காரணங்கள் டி வில்லியர்ஸிடம் இருந்தன. அதை நான் மதிக்கிறேன். டி20 கிரிக்கெட்டில் இப்போதும் அவர்தான் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக உள்ளார். ஆனால் எங்களுடைய அமைப்பில் ஏற்கெனவே உள்ள வீரர்களைப் பின்னுக்குத் தள்ளி அணியில் இடம்பெறுவது பற்றிய தன்னுடைய வேதனையை குறிப்பால் உணர்த்தினார். இதை அவர் ஏற்கவில்லை. அந்த உணர்வுகளை நான் புரிந்துகொண்டேன். எந்த ஒரு சூழலிலும் அவரால் அணிக்கு உற்சாகத்தைத் தர முடியும். ஆனால் அவருடைய காரணங்களை நான் மதிக்கிறேன். இப்போது நாம் அடுத்தக்கட்டத்துக்கு நகரவேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com