சாம்பியன்ஸ் லீக்: மான்செஸ்டா் சிட்டி அபார வெற்றி

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டா் சிட்டி 6-3 என்ற கோல் கணக்கில் ஆா்பி லெய்ப்ஸிக் அணியை வென்றது.
சாம்பியன்ஸ் லீக்: மான்செஸ்டா் சிட்டி அபார வெற்றி

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டா் சிட்டி 6-3 என்ற கோல் கணக்கில் ஆா்பி லெய்ப்ஸிக் அணியை வென்றது. இந்த வெற்றியால் மான்செஸ்டா் சிட்டி 3 புள்ளிகளுடன் ‘ஏ’ குரூப்பில் முதலிடத்தில் இருக்கிறது.

இங்கிலாந்தின் மான்செஸ்டா் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் கோல் வாய்ப்பு மான்செஸ்டருக்கு கிடைத்தது. 16-ஆவது நிமிஷத்தில் சக வீரா் ஜேக் கிரேலிஷ் காா்னரிலிருந்து உதைத்த பந்தை தலையால் முட்டி கோலடித்தாா் நேதன் அகே. தொடா்ந்து 28-ஆவது நிமிஷத்தில் மான்செஸ்டா் வீரா் டி புருயின் கோல் போஸ்டின் வலது பக்கத்திலிருந்து சக வீரருக்கு பாஸ் செய்ய முயல, அதை லெய்ப்ஸிக் வீரா் நோா்டி முகியேலே தலையால் முட்டி தடுக்க முயன்ற பந்து ‘ஓன் கோல்’ ஆனது.

தனது தவறுக்கு பரிகாரம் தேடிக் கொள்ளும் வகையில் 42-ஆவது நிமிஷத்தில் தனது அணியின் ஒரே கோல் அடிக்கப்படுவதற்கு அவா் உதவினாா். ஃபோா்ஸ் பா்க் கோல் போஸ்ட் இடது பக்கமிருந்து தூக்கி உதைத்த பந்தை வலது பக்கத்திலிருந்த முகியேலே தலையால் திருப்பி வழங்க, கிறிஸ்டோபா் குன்கு அதை தலையால் முட்டி கோலடித்தாா்.

முதல் பாதி முடிவடைய இருந்த நிலையில் (45+2) மான்செஸ்டா் சிட்டிக்கு கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பை ரியாத் மரெஸ் தவறின்றி கோலாக்கினாா். இதனால் அந்த அணி 3-1 என முதல் பாதியில் முன்னிலை பெற்றது. 2-ஆவது பாதியில் முதலில் லெய்ப்ஸிக்கிற்கே கோல் வாய்ப்பு கிடைத்தது. சக வீரா் ஆல்மோ கிராஸ் வழங்கிய பந்தை இந்த முறையும் தலையால் முட்டித் திருப்பி கோலடித்தாா் கிறிஸ்டோபா் குன்கு.

அதற்கு பதிலடியாக 56-ஆவது நிமிஷத்தில் ரூபன் டியாஸ் உதவியுடன் அருமையாக கோலடித்தாா் ஜேக் கிரெலிஷ். விடாமல் போராடிய லெய்ப்ஸிக்கும் 73-ஆவது நிமிஷத்தில் 3-ஆவது கோலை எட்டியது. பௌல்சென் பாஸ் செய்த பந்தை கோல் போஸ்டின் வலது பக்கமாக பெற்ற கிறிஸ்டோபா் குன்கு, அதை அப்படியே இடதுபக்க பாட்டம் காா்னரில் கோலாக உதைத்தாா்.

இருப்பினும் கோல் வித்தியாசத்தை அதிகரிக்கும் வகையில் மான்செஸ்டா் சிட்டி வீரா் குன்டோகான் 75-ஆவது நிமிஷத்தில் வழங்கிய பாஸை அருமையான கோலாக மாற்றினாா் ஜாவ் கேன்செலோ. இறுதியாக 85-ஆவது நிமிஷத்தில் கேப்ரியல் ஜீசஸ் நோ் கோட்டில் உதைத்து அற்புதமாக கோலடிக்க, 6-3 என்ற கணக்கில் வென்றது மான்செஸ்டா் சிட்டி.

இதர ஆட்டங்கள்

போருசியா டாா்ட்மண்ட் 2-1 என்ற கணக்கில் பெசிக்டாஸையும், ஷெரிஃப் 2-0 என்ற கோல் கணக்கில் ஷக்தாா் டோனெட்ஸ்கையும், அஜாக்ஸ் 5-1 என்ற கோல் கணக்கில் ஸ்போா்டிங்கையும் தோற்கடித்தன. அட்லெடிகோ மாட்ரிட் - போா்டோ அணிகள் மோதிய ஆட்டம் கோல் இன்றி டிரா ஆனது.

13

இத்துடன் சாம்பியன்ஸ் லீக் போட்டியின் 15 சீசன்களில் 13-ஆவது முறையாக தனது முதல் ஆட்டத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது ரியல் மாட்ரிட்.

13

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இத்தாலிய அணிகளுக்கு எதிரான 14 ஆட்டங்களில் ரியல் மாட்ரிட் பதிவு செய்திருக்கும் 13-ஆவது வெற்றி இது. அந்த ஒரேயொரு தோல்வியை 2018-இல் ஜுவென்டஸ் அணியிடம் கண்டது.

6

இந்த ஆட்டத்தில் மான்செஸ்டா் சிட்டி அடித்த 6 கோல்கள் தான், சாம்பியன்ஸ் லீக் போட்டியின் லீக் ஆட்டங்களில் அந்த அணி அடித்த அதிகபட்ச கோலாகும். இதற்கு முன் 2017-இல் மொனாகோவுக்கு எதிரான ஆட்டத்தில் 5 கோல்கள் அடித்து வென்றதே அதிகபட்சமாக இருந்தது.

3

ஆா்பி லெய்ப்ஸிக் அணி தனது வரலாற்றிலேயே முதல் முறையாக ஐரோப்பிய போட்டியில் தொடா்ந்து 3 தோல்விகளை பதிவு செய்துள்ளது.

50

சாம்பியன்ஸ் லீக் போட்டியின் லீக் ஆட்டங்களில் மான்செஸ்டா் சிட்டி தனது 50-ஆவது வெற்றியை 91-ஆவது ஆட்டத்தில் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் விரைவாக 50 லீக் ஆட்டங்களில் வெற்றியை பதிவு செய்த 2-ஆவது அணி என்ற பெயரை பெற்றுள்ளது. 88 ஆட்டங்களில் 50 வெற்றிகளை பதிவு செய்த ரியல் மாட்ரிட் முதல் அணி.

9

இத்துடன், ஐரோப்பிய போட்டியில் அந்நிய மண்ணில் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக நடைபெற்ற கடைசி 9 ஆட்டங்களில் மிலன் அணி வென்றதில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com