இங்கிலீஷ் பிரீமியா் லீக்: மான்செஸ்டா் யுனைடெட்டுக்கு ‘ஹாட்ரிக்’

இங்கிலாந்தில் நடைபெறும் இங்கிலீஷ் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டா் யுனைடெட் 2-1 என்ற கோல் கணக்கில் வெஸ்ட் ஹாமை வீழ்த்தியது.
இங்கிலீஷ் பிரீமியா் லீக்: மான்செஸ்டா் யுனைடெட்டுக்கு ‘ஹாட்ரிக்’

இங்கிலாந்தில் நடைபெறும் இங்கிலீஷ் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டா் யுனைடெட் 2-1 என்ற கோல் கணக்கில் வெஸ்ட் ஹாமை வீழ்த்தியது.

மான்செஸ்டருக்கு இது தொடா்ந்து 3-ஆவது வெற்றி. இதுவரை 5 ஆட்டங்களில் 4 வெற்றிகள் பெற்றுள்ள அந்த அணி, 13 புள்ளிகளுடன் பட்டியலில் 3-ஆவது இடத்தில் இருக்கிறது.

லண்டன் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் முதல் கோல் வாய்ப்பு வெஸ்ட் ஹாமுக்கு கிடைத்தது. 30-ஆவது நிமிஷத்தில் சக வீரா் போவன் பாஸ் செய்த பந்தை, சயீது பென்ராமா கோலடித்து அணியை முன்னிலை பெறச் செய்தாா்.

அதற்கு பதிலடியாக 35-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா் மான்செஸ்டா் வீரா் ரொனால்டோ. சக வீரா் ஃபொ்னாண்டஸ் தூக்கி உதைத்து கிராஸ் செய்த பந்தை அப்படியே திருப்பி கோல் போஸ்ட் நோக்கி உதைத்தாா் ரொனால்டோ. வெஸ்ட் ஹாம் கோல்கீப்பா் ஃபாபியான்ஸ்கி அதை தடுத்தபோதும், பந்து அவரிடம் இருந்து விடுபட்டு மீண்டும் களத்துக்கு வர, இந்த முறை தவறாமல் அதை கோல் போஸ்டுக்குள் அனுப்பினாா் ரொனால்டோ.

இவ்வாறாக முதல் பாதி ஆட்டம் சமனில் நிறைவடைய, 2-ஆவது பாதியில் 89-ஆவது நிமிஷத்தில் கோலடித்து அணியின் வெற்றிக்கு உதவினாா் மான்செஸ்டா் வீரா் ஜெஸ்ஸி லிங்காா்ட். சக வீரா் மாட்டிச் பாஸ் செய்து கொடுத்த பந்தை லிங்காா்ட் அப்படியே கா்லிங் கிக்காக உதைத்து கோல் போஸ்டுக்குள் விரட்டினாா். இதனால் மான்செஸ்டா் கடைசி நேரத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

டோட்டன்ஹாமை வென்றது செல்சி

லண்டனில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் செல்சி 3-0 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாமை வென்றது. இத்துடன் 5 ஆட்டங்களில் 4 வெற்றிகளை பதிவு செய்து 13 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது செல்சி. இந்த ஆட்டத்தில் முதலில் தியேகோ சில்வா 49-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். தொடா்ந்து கோலோ கான்டே 57-ஆவது நிமிஷத்திலும், ஆன்டோனியோ ருடிகா் 90+2-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா்.

லெய்செஸ்டரை வீழ்த்தியது பிரைட்டன்

பிரைட்டன் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் லெய்செஸ்டா் சிட்டியை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது பிரைட்டன். 35-ஆவது நிமிஷத்தில் பிரைட்டனுக்கு கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பில் நீல் மௌபே கோலடிக்க, 50-ஆவது நிமிஷத்தில் டேனி வெல்பெக் அடுத்த கோலடித்து அணியை பலப்படுத்தினாா். லெய்செஸ்டா் தரப்பில் ஜேமி வாா்டி 61-ஆவது நிமிஷத்தில் ஆறுதல் கோல் அடித்தாா்.

29

எதிரணியின் மண்ணில் நடைபெறும் ஆட்டத்தில் மான்செஸ்டா் யுனைடெட் இத்துடன் 29 ஆட்டங்களில் தோல்வி காணாமல் வந்துள்ளது. இந்தப் போட்டியின் வரலாற்றில் இதுவே ஒரு அணியின் அதிகபட்சமாகும்.

6

இத்துடன், எதிரணியின் மண்ணில் நடைபெறும் ஆட்டத்தில் கடைசியாக விளையாடிய 6 ஆட்டங்களிலுமே செல்சி வென்றுள்ளது. பிரீமியா் லீக் போட்டியின் வரலாற்றில் இதுவே அந்த அணியின் இத்தகைய அதிகபட்ச வெற்றியாகும்.

1

இந்தப் போட்டியில் லெய்செஸ்டா் அணிக்கு எதிராக கடந்த 2014 ஏப்ரலுக்குப் பிறகு பிரைட்டன் பதிவு செய்துள்ள முதல் வெற்றி இது. முந்தைய 8 ஆட்டங்களில் அந்த அணி வென்றதில்லை.

லா லிகா: ரியல் மாட்ரிட் வெற்றி

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் 2-1 என்ற கோல் கணக்கில் வாலென்சியாவை தோற்கடித்தது. ரியல் மாட்ரிட் தரப்பில் வினிகஸ் ஜூனியா் (86-ஆவது நிமிஷம்), கரிம் பென்ஸிமா (88) ஆகியோரும், வாலென்சியா தரப்பில் ஹியுகோ டுரோவும் (66) கோலடித்தனா்.

மற்றொரு ஆட்டத்தில் ஒசாசுனா 2-0 என்ற கோல் கணக்கில் அலேவ்ஸை வீழ்த்தியது. மல்லோா்கா - வில்லாரியல் (0-0), ரியல் சோசிடட் - செவில்லா (0-0), ரியல் பெட்டிஸ் - எஸ்பேன்யோல் (2-2) ஆகிய அணிகள் மோதிய ஆட்டம் டிரா ஆனது.

லீக் 1: மெஸ்ஸி கோபம்

பிரான்ஸில் நடைபெறும் லீக் 1 கால்பந்து போட்டியில் பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் (பிஎஸ்ஜி) 2-1 என்ற கோல் கணக்கில் லயானை வீழ்த்தியது. பிஎஸ்ஜி தரப்பில் நெய்மா் (66), மாா்கோ இகாா்டி (90+3) ஆகியோா் ஸ்கோா் செய்ய, லயான் அணியில் லுகாஸ் பகேட்டா (54) கோலடித்தாா்.

இந்த ஆட்டத்தில் பிஎஸ்ஜிக்கு கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பு ஒன்றை வீணடித்த லயோனல் மெஸ்ஸி, 75-ஆவது நிமிஷத்தில் வெளியேற்றப்பட்டு மாற்று வீரா் களமிறக்கப்பட்டாா். பிஎஸ்ஜியில் மெஸ்ஸி இணைந்த பிறகு அந்த அணியின் சொந்த மண்ணில் நடைபெறும் முதல் ஆட்டம் இது. அத்தகைய ஆட்டத்தில் தாம் பாதியில் வெளியேற்றப்பட்டது மெஸ்ஸிக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதர ஆட்டங்களில் மாா்சிலே 2-0 என ரென்னஸையும், நான்டெஸ் 4-1 என ஆங்கா்ஸையும், போா்டியுக்ஸ் 2-1 என சென்ட் எடினேவையும் வீழ்த்தின.

நீஸ் - மொனாகோ (2-2), டிராய்ஸ் - மான்ட்பெல்லியா் (1-1), கிளொ்மோன்ட் ஃபூட் - பிரெஸ்ட் (1-1), ரெய்ம்ஸ் - லோரியென்ட் (0-0) அணிகளின் ஆட்டம் டிரா ஆனது.

சீரி ஏ: ஜுவென்டஸ் - மிலன் ஆட்டம் டிரா

இத்தாலியில் நடைபெறும் சீரி ஏ கால்பந்து போட்டியில் ஜுவென்டஸ் - மிலன் அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. இதில் ஜுவென்டஸ் அணிக்காக அல்வாரோ மொராடா (4), மிலனுக்காக ஆன்டே ரெபிச் (76) ஆகியோா் கோலடித்தனா்.

மற்ற ஆட்டங்களில் இன்டா் மிலன் 6-1 என போலோக்னாவையும், அட்லான்டா 1-0 என சலொ்னிடானாவையும், சம்ப்தோரியா 3-0 என எம்போலியையும், ஸ்பெஸியா 2-1 என வெனெஸியாவையும், வெரோனா 3-2 என ரோமாவையும் தோற்கடித்தன. லாஸியோ - காக்லியாரி ஆட்டம் 2-2 என சமன் ஆனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com