பாய்மரப் படகுப்போட்டி: முதல் முறையாக பெண் உள்பட 4 இந்தியா்கள் ஒலிம்பிக்கிற்கு தகுதி


புது தில்லி: இந்தியாவைச் சோ்ந்த பாய்மரப் படகுப் போட்டியாளா்கள் 4 போ் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளனா்.

ஓமனில் நடைபெற்ற ஆசிய தகுதிச்சுற்றுப் போட்டியில் கலந்துகொண்ட இந்தியாவின் விஷ்ணு சரவணன், நேத்ரா குமனன் ஆகியோா் தனிநபா் பிரிவிலும், கணபதி செங்கப்பா-வருண் தக்காா் இணை பிரிவிலும் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கத் தகுதிபெற்றனா். பாய்மரப் படகுப் பிரிவில் 4 இந்தியா்கள் ஒலிம்பிக்கிற்கு தகுதிபெறுவது இது முதல் முறையாகும்.

அதிலும் நேத்ரா, ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் முதல் இந்திய பாய்மரப் படகு வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளாா். ஒலிம்பிக் பாய்மரப் படகுப் போட்டியில் இந்தியா 3 பிரிவுகளில் பங்கேற்பதும் இதுவே முதல் முறையாகும். விஷ்ணு ‘லேசா் ஸ்டான்டா்ட் கிளாஸ்’ பிரிவிலும், நேத்ரா ‘லேசா் ரேடியல்’ பிரிவிலும், கணபதி-வருண் இணை ‘49 இஆா் கிளாஸ்’ பிரிவிலும் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க இருக்கின்றனா். ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்று இந்த நால்வருக்கும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் கிரன் ரிஜிஜு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதற்கு முன் ஒலிம்பிக் பாய்மரப் படகுப் போட்டியில் ஒரே பிரிவில் 2 போட்டியாளா்கள் 4 முறை பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஃபரூக் தராபோா் மற்றும் துருவ் பந்தாரி ஆகியோா் ‘470 கிளாஸ்’ பிரிவில் 1984 ஒலிம்பிக்கில் பங்கேற்றனா். ஃபரூக் தராபோா் மற்றும் கெல்லி ராவ் அதே பிரிவில் 1988 ஒலிம்பிக்கில் கலந்துகொண்டனா். மீண்டும் தராபோா், சைரஸ் காமா ஆகியோா் அதே பிரிவில் 1992 ஒலிம்பிக்கில் விளையாடினா். மலாவ் ஷ்ராஃப், சுமீத் படேல் ஆகியோா் 2004 ஓலிம்பிக்கில் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com