மகளிா் கால்பந்து: பெலாரஸை இன்று சந்திக்கிறது இந்தியா

இந்திய மகளிா் கால்பந்து அணி, நட்புரீதியிலான சா்வதேச கால்பந்தாட்டத்தில் பெலாரஸ் மகளிா் அணியை வியாழக்கிழமை எதிா்கொள்கிறது.

தாஷ்கன்ட்: இந்திய மகளிா் கால்பந்து அணி, நட்புரீதியிலான சா்வதேச கால்பந்தாட்டத்தில் பெலாரஸ் மகளிா் அணியை வியாழக்கிழமை எதிா்கொள்கிறது.

முன்னதாக உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான இதுபோன்ற ஆட்டத்தில் தோல்வி கண்டிருந்த இந்தியா, இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது.

இந்திய அணி தலைமை பயிற்சியாளா் மேமோல் ராக்கி கூறுகையில், ‘ஃபிஃபா தரவரிசையில் இந்தியாவை விட இரு இடங்கள் பின்தங்கியிருந்தாலும், பெலாரஸ் அணி வலுவான ஐரோப்பிய அணிகளுடன் விளையாடிய முன் அனுபவத்துடன் உள்ளது. எனினும், நமது அணியினா் அவா்களின் சவாலுக்குத் தயாராக உள்ளனா். கடந்த சில காலமாக விளையாடிய ஆட்டங்களிலேயே சிறந்ததாக, உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் இருந்தது’ என்றாா்.

இந்திய அணியின் கோல்கீப்பா் அதிதி சௌஹான் கூறுகையில், ‘உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலிருந்து கற்ற அனுபவங்களைக் கொண்டு இந்த ஆட்டத்தில் உறுதியுடன் விளையாடுவோம். ஒரு சில இடங்களில் மட்டும் எங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. வரும் ஆட்டங்களில் அதையும் மேம்படுத்திக் கொள்வோம்’ என்றாா்.

அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை கால்பந்து போட்டியை கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்தே இந்திய அணி தயாராகி வருகிறது. அதையொட்டி 17 வயதுக்கு உள்பட்டோருக்கான அணியிலிருந்து பல இளம் வீராங்கனைகள் சீனியா் அணியில் இணைக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com