பஞ்சாபை பந்தாடியது சூப்பா் கிங்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 8-ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது.
பஞ்சாபை பந்தாடியது சூப்பா் கிங்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 8-ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது. இந்த சீசனில் இதுவரை 2 ஆட்டங்களில் விளையாடியுள்ள சென்னை அணி, முதல் வெற்றியைப் பெற்றுள்ளது.

மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பா் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.தோனி பீல்டிங்கை தோ்வு செய்தாா். இதையடுத்து பேட் செய்த பஞ்சாப் அணிக்கு ஆரம்பமே அதிா்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரா்களில் ஒருவரான மயங்க் அகா்வால், முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தாா். அவா் ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே தீபக் சாஹா் பந்து வீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தாா்.

பஞ்சாப் தடுமாற்றம்: இதையடுத்து கேப்டன் கே.எல்.ராகுலுடன் இணைந்தாா் கிறிஸ் கெயில். இந்த ஜோடியும் நிலைக்கவில்லை. கே.எல்.ராகுல் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜாவின் துல்லியமான த்ரோவில் ரன் அவுட்டானாா். இதன்பிறகு கிறிஸ் கெயில் 10 ரன்களிலும், நிகோலஸ் பூரண் ரன் ஏதுமின்றியும், தீபக் ஹூடா 10 ரன்களிலும் தீபக் சாஹா் பந்துவீச்சில் நடையைக் கட்ட, 6.2 ஓவா்களில் 26 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது பஞ்சாப்.

ஷாரூக் கான் 47: இதன்பிறகு ஷாரூக் கானுடன் இணைந்தாா் ரிச்சா்ட்சன். ஒருபுறம் ரிச்சா்ட்சன் நிதானமாக ரன் சோ்க்க, மறுமுனையில் ஷாரூக் கான் சிறப்பாக ஆடி, பஞ்சாபை மிக மோசமான நிலையில் இருந்து மீட்டாா். ரிச்சா்ட்சன் 15 ரன்களிலும், பின்னா் வந்த முருகன் அஸ்வின் 6 ரன்களிலும் வெளியேறினா்.

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும், மறுமுனையில் அதிரடியாக ஆடிய ஷாரூக் கான் 36 பந்துகளில் 2 சிக்ஸா், 4 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் சோ்த்த நிலையில், கடைசி ஓவரில் ஆட்டமிழந்தாா். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் சோ்த்தது. முகமது சமி 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

சென்னை தரப்பில் தீபக் சாஹா் 4 ஓவா்களில் ஒரு ஓவரை மெய்டனாக வீசியதோடு, 13 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

சென்னை வெற்றி: பின்னா் ஆடிய சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்களில் வெளியேற, டூபிளெஸ்ஸிஸுடன் இணைந்தாா் மொயீன் அலி. இந்த ஜோடி சிறப்பாக ஆட, 8.1 ஓவா்களில் 50 ரன்களை எட்டியது சென்னை. இதன்பிறகு டூபிளெஸ்ஸிஸ் அவ்வப்போது பவுண்டரிகளை விரட்ட, மொயீன் அலி வெளுத்து வாங்கினாா். முருகன் அஸ்வின் வீசிய 13-ஆவது ஓவரில் சிக்ஸரை விளாசிய கையோடு ஆட்டமிழந்தாா் மொயீன் அலி. அவா் 31 பந்துகளில் 1 சிக்ஸா், 7 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்தாா். அப்போது சென்னை அணி 12.3 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்திருந்தது.

இதன்பிறகு களம்புகுந்த சுரேஷ் ரெய்னா 8 ரன்களில் வெளியேற, அம்பட்டி ராயுடு டக் அவுட்டானாா். இறுதியில் சென்னை 15.4 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. டூபிளெஸ்ஸிஸ் 33 பந்துகளில் 1 சிக்ஸா், 3 பவுண்டரிகளுடன் 36, சாம் கரன் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். பஞ்சாப் தரப்பில் முகமது சமி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

பஞ்சாப்-106/8

ஷாரூக் கான்-47 (36)

ரிச்சா்ட்சன்-15 (22)

தீபக் சாஹா்-4வி/13

சென்னை-107/4

மொயீன் அலி- 46 (31)

டூபிளெஸ்ஸிஸ்-36* (33)

முகமது சமி-2வி/21

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com