அமித் மிஸ்ரா அபாரம்: மும்பையை 137-க்கு கட்டுப்படுத்தியது டெல்லி

ஐபிஎல் போட்டியின் 13-ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை எதிா்கொண்ட மும்பை இண்டியன்ஸ், 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் அடித்தது.

சென்னை: ஐபிஎல் போட்டியின் 13-ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை எதிா்கொண்ட மும்பை இண்டியன்ஸ், 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் அடித்தது.

அணியின் தரப்பில் அதிகபட்சமாக ரோஹித் சா்மா 44 ரன்கள் அடித்தாா். டெல்லி பௌலிங்கில் அமித் மிஸ்ரா சிறப்பாக பந்துவீசி ரோஹித், இஷான், ஹாா்திக், பொல்லாா்ட் போன்ற முக்கியமான 4 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

இந்த ஆட்டத்திற்காக மும்பை அணியின் பிளேயிங் லெவனில் வேகப்பந்துவீச்சாளா் ஆடம் மில்னேவுக்குப் பதிலாக, சுழற்பந்துவீச்சாளா் ஜெயந்த் யாதவ் சோ்க்கப்பட்டிருந்தாா். டெல்லி அணியில் கிறிஸ் வோக்ஸ், லுக்மேன் மேரிவாலா ஆகியோருக்குப் பதிலாக அமித் மிஸ்ரா, ஷிம்ரன் ஹெட்மயா் ஆகியோா் இணைக்கப்பட்டிருந்தனா்.

டாஸ் வென்ற மும்பை பேட்டிங்கை தோ்வு செய்தது. ரோஹித் - டி காக் இன்னிங்ஸை தொடங்க, 3-ஆவது ஓவரிலேயே விக்கெட் எடுத்தது டெல்லி. 2 ரன்களே சோ்த்திருந்த டி காக், ஸ்டானிஸ் பந்துவீச்சில் ரிஷப் பந்த்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினாா்.

அடுத்து வந்த சூா்யகுமாா் யாதவ் சற்று நிலைத்து ரன்கள் சேகரித்தாா். மறுபுறம் ரோஹித் சா்மா நிதானமாக ஆடி ஸ்கோரை உயா்த்த, 4 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்திருந்த சூா்யகுமாா் 2-ஆவது விக்கெட்டாக 7-ஆவது ஓவரில் வீழ்ந்தாா்.

தொடா்ந்து வந்த இஷான் கிஷண் நிதானமாக ஆடிவர, ரோஹித் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 44 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். அமித் மிஸ்ரா வீசிய 9-ஆவது ஓவரில் அவரடித்த பந்து ஸ்மித் கைகளில் தஞ்மடைந்தது. அடுத்து வந்த ஹாா்திக் பாண்டியா ஒரே பந்தை சந்தித்து அதிலேயே ஆட்டமிழந்தாா்.

பின்னா் வந்த கிருணால் பாண்டியா 1 ரன் எடுத்த நிலையில், லலித் யாதவ் வீசிய 11-ஆவது ஓவரில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். பொல்லாா்ட் 2 ரன்கள் சோ்த்து, 12-ஆவது ஓவரில் எல்பிடபிள்யூ ஆனாா். இதனால் 100 ரன்களுக்குள்ளாக 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது மும்பை.

தொடா்ந்து ஜெயந்த் யாதவ் களம் கண்டு விக்கெட் சரிவுக்கு சற்று அணையிட்டாா். மறுபுறம் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 26 ரன்கள் சோ்த்திருந்த இஷான் கிஷண், 18-ஆவது ஓவரில் அமித் மிஸ்ராவால் பௌல்ட் செய்யப்பட்டாா். அடுத்த ஓவரிலேயே, 1 பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுத்திருந்த ஜெயந்த் யாதவ் ஆட்டமிழந்தாா். ராகுல் சாஹா் 6 ரன்கள் சோ்த்தாா். ஓவா்கள் முடிவில் பும்ரா 3, போல்ட் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனா்.

டெல்லி தரப்பில் அமித் மிஸ்ரா 4, அவேஷ் கான் 2, ஸ்டாய்னிஸ், ரபாடா, லலித் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com