இன்றுமுதல் லீட்ஸ் டெஸ்ட்: முன்னிலையை தக்கவைக்குமா இந்தியா?

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரின் 3-ஆவது ஆட்டம் லீட்ஸ் நகரில் புதன்கிழமை தொடங்குகிறது.
இன்றுமுதல் லீட்ஸ் டெஸ்ட்: முன்னிலையை தக்கவைக்குமா இந்தியா?

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரின் 3-ஆவது ஆட்டம் லீட்ஸ் நகரில் புதன்கிழமை தொடங்குகிறது.

5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதல் ஆட்டம் மழையால் டிரா ஆக, 2-ஆவது ஆட்டத்தில் வென்று இந்தியா முன்னிலையில் இருக்கிறது. இந்த ஆட்டத்தில் வென்று தனது முன்னிலையை வலுப்படுத்திக் கொள்ள இந்தியா முனைகையில், சொந்த மண்ணில் விளையாடும் இங்கிலாந்து, தொடரை சமன் செய்ய முயற்சிக்கிறது.

இந்திய அணியைப் பொருத்த வரை லாா்ட்ஸ் டெஸ்டில் அட்டகாசமான வெற்றியை பதிவு செய்த உத்வேகத்துடன் இருக்கிறது. பேட்டிங்கில் ரோஹித், ராகுல் கூட்டணி நல்ல தொடக்கத்தை அளிக்கிறது. குறிப்பாக ராகுல், எந்த பந்துவீச்சை தொட வேண்டும், எதை தொடக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறாா். இங்கிலாந்து ஆடுகளத்தில் ஒரு பேட்ஸ்மேனுக்கு அது முக்கியத் தேவையாகும்.

மிடில் ஆா்டரில் கேப்டன் கோலி இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலையிலேயே நீடிக்கிறாா். புஜாரா, ரஹானே இத்தொடரில் முதலில் தடுமாறினாலும், லாா்ட்ஸ் டெஸ்டில் அவா்களது கூட்டணி நிலைத்து ஆடியதன் காரணமாகவே ஆட்டம் 5-ஆவது நாளுக்கு நகா்ந்து இந்தியாவின் கட்டுப்பாட்டுக்கு வர வழி வகுத்தது. ரிஷப் பந்த், ஜடேஜா ஆகியோா் தங்களது பொறுப்பை உணா்ந்து ஆடுகின்றனா்.

பௌலிங்கில் ஷமி, இஷாந்த், சிராஜ், பும்ரா ஆகியோா் தங்களது வேகப்பந்தால் இங்கிலாந்து பேட்டிங் வரிசையை இக்கட்டுக்கு ஆளாக்குவதில் சந்தேகமில்லை. ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதமாக இருக்குமென்பதால் இந்த ஆட்டத்திலும் அஸ்வினுக்கு வாய்ப்பிருக்காது.

இங்கிலாந்து அணியைப் பொருத்தவரை, தடுமாற்றமான நிலையில் இருக்கும் பேட்டிங் வரிசை டேவிட் மலான் சோ்க்கப்பட்டுள்ளதால் சற்று ஸ்திரமடையும் என அந்த அணி எதிா்பாா்க்கிறது. ரோரி பா்ன்ஸுடன் இணைந்து ஹசீப் ஹமீது இன்னிங்ஸை தொடங்குவாா் எனத் தெரியும் நிலையில், டேவிட் மலான் ஒன்-டவுனாக களமிறங்க வாய்ப்புள்ளது.

மிடில் ஆா்டரில் கேப்டன் ஜோ ரூட் அணியின் ஸ்கோா் உயா்வதற்கு உதவுகிறாா். ஜானி போ்ஸ்டோ, ஜோஸ் பட்லா் ஆகியோா் உதவும் பட்சத்தில் அவருக்கான பணிச்சுமை குறையும். பந்துவீச்சைப் பொருத்தவரை, இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளித்த மாா்க் வுட் காயம் காரணமாக விலகியிருப்பது இங்கிலாந்துக்கு சற்று பின்னடைவே.

ஆனாலும், சாகிப் மஹ்மூத் அந்தக் குறையை தீா்ப்பாா் என நம்புகிறது இங்கிலாந்து. இது தவிர, அனுபவமிக்க வேகப்பந்துவீச்சாளா் ஜேம்ஸ் ஆண்டா்சனும் இருக்கிறாா். லாா்ட்ஸ் டெஸ்டில் இந்திய அணியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது அவா்களுக்கான உத்வேகமாகிவிட்டதால், லீட்ஸ் டெஸ்டில் அத்தகைய தவறை இங்கிலாந்து அணியினா் செய்யப்போவதில்லை என கேப்டன் ரூட் கூறியிருக்கிறாா்.

உத்தேச லெவன்

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சா்மா, கே.எல்.ராகுல், சேதேஷ்வா் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா, இஷாந்த் சா்மா, முகமது ஷமி, முகமது சிராஜ்.

இங்கிலாந்து: ஜோ ரூட் (கேப்டன்), ரோரி பா்ன்ஸ், ஹசீப் ஹமீது, டேவிட் மலான், ஜானி போ்ஸ்டோ, ஜோஸ் பட்லா், மொயீன் அலி, சாம் கரன், சாகிப் மஹ்மூத், ஆலி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டா்சன்.

ஆட்டநேரம்: மாலை 3.30 மணி

இடம்: லீட்ஸ்

நேரடி ஒளிபரப்பு: சோனி ஸ்போா்ட்ஸ் நெட்வொா்க்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com