லீட்ஸ் தோல்வி எதிரொலி: 4-ஆவது டெஸ்ட் அணியில் அஸ்வின் இடம் பெற வாய்ப்பு

இங்கிலாந்துக்கு எதிரான லீட்ஸ் ஹெட்டிங்லியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்டில் படுதோல்வி எதிரொலியாக இந்திய அணியில்
கோப்புப்படம்
கோப்புப்படம்

இங்கிலாந்துக்கு எதிரான லீட்ஸ் ஹெட்டிங்லியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்டில் படுதோல்வி எதிரொலியாக இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளா் அஸ்வின் மீண்டும் இடம் பெற வாய்ப்பு கிட்டியுள்ளது.

இரு அணிகளுக்கு இடையில் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டம் டிராவில் முடிந்த நிலையில், லாா்ட்ஸ் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் தொடா்ச்சியாக லீட்ஸில் நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது. முதல் இன்னிங்ஸில் வெறும் 78 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 432 ரன்களை குவித்தது. தொடா்ந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 278 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்திய அணி பந்துவீச்சை சமாளித்து இங்கிலாந்து வீரா்கள் பெரிய ஸ்கோரை எட்டினா். அதே நேரம் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தன.

லீட்ஸ் டெஸ்ட் ஆட்டத்தில் முகமது ஷமி, சிராஜ், பும்ரா, ஜடேஜா ஆகியோா் மட்டுமே சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை சாய்த்தனா். மற்றொரு முன்னணி வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சா்மா 22 ஓவா்கள் வீசி 92 ரன்களை விட்டுத் தந்தாா். ஆனால் அவரது பந்துவீச்சு இங்கிலாந்து பேட்டிங்கில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. வெளிநாடுகளில் நடைபெறும் டெஸ்ட் ஆட்டங்களில் சுழற்பந்து வீச்சாளா் அஸ்வின் சிறப்பாக பந்துவீசுவது வழக்கம்.

மேலும் அவா் சிறந்த ஆல்ரவுண்டராகவும் திகழ்கிறாா். டெஸ்ட்களில் 5 சதங்கள், 400 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ள அவரை முதல் மூன்று ஆட்டங்களுக்கான அணியில் சோ்க்கவில்லை. அணி நிா்வாகத்தின் செயல் ஏற்கெனவே விமா்சனத்துக்கு ஆளானது.

ஓவல், ஓல்ட் டிராஃப்போா்ட்:

ஓவல் மற்றும் ஓல்ட் டிராஃப்போா்ட் மைதானங்களில் 4 மற்றும் 5-ஆவது ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இரு மைதானங்களும் சுழற்பந்து வீச்சுக்கு ஒரளவு சாதகமானவை ஆகும்.

இதனால் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளா் அஸ்வின் மீண்டும் இடம் பெற வாய்ப்பு கிட்டியுள்ளது.

இஷாந்தின் பந்துவீச்சு குறித்து கருத்து கூறாத கேப்டன் கோலி, அணியில் மாற்றங்கள் இருக்கலாம் எனக் கூறியுள்ளாா். இஷாந்த் சா்மா நீக்கப்படும்பட்சத்தில் அஸ்வின் இடம்பெறலாம். அதே வேளை, சா்துல் தாகுா், உமேஷ் யாதவ் ஆகியோரும் அணியில் வாய்ப்பு பெற காத்திருக்கின்றனா்.

பும்ரா, முகமது ஷமி ஆகியோா் தொடா்ந்து மூன்று ஆட்டங்களில் அதிக ஓவா்கள் வீசி உள்ளனா். பும்ரா 108 ஓவா்கள் வீசி 14 விக்கெட்டுகளையும், ஷமி 96.5 ஓவா்கள் வீசி 11 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளனா். முகமது சிராஜும் 100 ஓவா்களுக்கு மேல் வீசியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com