ஐபிஎல் ஏலப்பட்டியலில் சச்சின் மகன்: மும்பை இந்தியன்ஸ் அணி தேர்வு செய்யுமா?

மும்பை அணிக்கு அர்ஜுன் விளையாடவே வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகத் தெரிகிறது.
ஐபிஎல் ஏலப்பட்டியலில் சச்சின் மகன்: மும்பை இந்தியன்ஸ் அணி தேர்வு செய்யுமா?

இந்த வருடத்துக்கான ஐபிஎல் ஏலப்பட்டியலில் சச்சின் மகன் அர்ஜுன் இடம்பெற்றுள்ளார். 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரா்கள் ஏலம் வரும் 18-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் வீரா்கள் தங்களின் பெயரை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. வீரா்கள் பெயரை பதிவு செய்வதற்கான கடைசி நாள் கடந்த வியாழக்கிழமையோடு நிறைவடைந்தது.

தற்போதைய நிலையில், 1,097 போ் பெயரை பதிவு செய்துள்ளனா். ஏலப்பட்டியலில் இந்தியாவைச் சோ்ந்த 814 வீரா்கள், 283 சா்வதேச வீரா்கள் இடம்பெற்றுள்ளனா். மேற்கிந்திய தீவுகளில் இருந்து அதிகபட்சமாக 56 பேரும், அதற்கடுத்தபடியாக ஆஸ்திரேலியாவில் இருந்து 42 பேரும், தென் ஆப்பிரிக்காவில் இருந்து 38 பேரும் பங்கேற்கின்றனா். 

ஐபிஎல் ஏலப்பட்டியலில் சச்சின் மகன் அர்ஜுனின் பெயர் முதல்முறையாக இடம்பெற்றுள்ளது. இடது கை வேகப்பந்துவீச்சாளரான அர்ஜுன், இந்திய அணியின் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராகப் பணியாற்றியுள்ளார். இந்திய யு-19 அணிக்காகவும் விளையாடியுள்ளார். 

சமீபத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியில் மும்பை அணியில் அர்ஜுன் இடம்பெற்றார். 21 வயது அர்ஜுன் விளையாடிய இரு ஆட்டங்களிலும் மும்பை அணிக்குத் தோல்வியே கிடைத்தன. ஹரியாணாவுக்கு எதிராக 1/34, புதுச்சேரிக்கு எதிராக 1/33 என சுமாராகவே பந்துவீசியுள்ளார் அர்ஜுன்.

இந்நிலையில் ஐபிஎல் ஏலத்தில் அர்ஜுன் டெண்டுல்கரும் இடம்பெறவுள்ளார். மும்பை அணிக்கு அவர் தேர்வாகவே வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகத் தெரிகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராக சச்சின் உள்ளார். மேலும், ஏலத்தில் பங்கேற்று வாய்ப்பு கிடைக்காவிட்டால் அது அர்ஜுனுக்கு ஏமாற்றத்தை அளிக்கும். இதனால் அர்ஜுனைத் தேர்வு செய்வதாக மும்பை இந்தியன்ஸ் அணி உறுதிமொழி தந்திராமல் ஏலப்பட்டியலில் தனது மகனின் பெயரை சச்சின் சேர்த்திருக்க மாட்டார். இதனால் ஏலத்தில் அர்ஜுனை மும்பை இந்தியன்ஸ் அணி தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அல்லது பிப்ரவரி 18 அன்று நமக்கு ஆச்சர்யம் எதுவும் காத்திருக்கிறதா? 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com