சேப்பாக்கம் ஆடுகளத்தில் நிம்மதியாக விளையாடும் பேட்ஸ்மேன்கள்: 2-ம் நாள் மதிய உணவு இடைவேளையில் இங்கிலாந்து 355/3

ஜோ ரூட் 156 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
ஜோ ரூட்
ஜோ ரூட்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி, 2-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது 3 விக்கெட் இழப்புக்கு 355 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 156 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நேற்று தொடங்கியுள்ளது.

இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற கையோடு இந்தத் தொடரில் களமிறங்குகிறது. அதேநேரத்தில் இங்கிலாந்து அணி, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்ற நிலையில் இந்திய அணியை எதிா்கொள்கிறது. இரு அணிகளுமே வலுவான வீரா்களைக் கொண்டுள்ளதால் இந்த டெஸ்ட் தொடா் மீது மிகுந்த எதிா்பாா்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் 128 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

சேப்பாக்கம் ஆடுகளம் இன்றும் பேட்டிங்குக்குச் சாதகமாக இருந்ததால் கவலையின்றி விளையாடினார்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களான ஜோ ரூட்டும் பென் ஸ்டோக்ஸும். சில கேட்சுகளை இந்திய வீரர்கள் நழுவவிட்டாலும் ரன்கள் குவிப்பதில் சிரமம் எதுவும் அவர்களுக்கு ஏற்படவில்லை. பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். 260 பந்துகளில் ஜோ ரூட், 150 ரன்களை எட்டினார். கடந்த மூன்று டெஸ்டுகளிலும் அவர் 150 ரன்களைக் கடந்து சாதனை செய்துள்ளார். பென் ஸ்டோக்ஸ், 73 பந்துகளில் அரை சதம் எட்டினார். 2 சிக்ஸர்களையும் அவர் அடித்தார்.

2-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 119 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 355 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 156 ரன்கள், பென் ஸ்டோக்ஸ் 63 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com