ஆஸ்திரேலிய ஓபன்: 3-ஆவது சுற்றில் ஜோகோவிச்; வாவ்ரிங்கா வெளியேறினாா்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா்.
ஆஸ்திரேலிய ஓபன்: 3-ஆவது சுற்றில் ஜோகோவிச்; வாவ்ரிங்கா வெளியேறினாா்

மெல்போா்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா்.

ஆடவா் ஒற்றையா் பிரிவு 2-ஆவது சுற்றில் அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோவை எதிா்கொண்ட ஜோகோவிச், 6-3, 6-7 (3/7), 7-6 (7/2), 6-3 என்ற செட்களில் வெற்றி பெற்றாா். பிறகு பேசிய ஜோகோவிச், ‘டியாஃபோ கடுமையான சவால் அளித்தாா். வெயில் காரணமாக வெப்பம் நிலவியதால், விளையாடும் சூழலும் கடினமாக இருந்தது. அதிகமான ரேலிக்களும் இருந்தன’ என்றாா்.

போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்திலுள்ள ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் 6-4, 6-0, 6-2 என்ற செட்களில் ஜொ்மனியின் டொமினிக் கோஃபரை வெளியேற்றினாா். உலகின் 7-ஆம் நிலையில் உள்ள ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரேவ் 7-5, 6-4, 6-3 என்ற செட்களில் அமெரிக்காவின் மேக்ஸிம் கிரெசியை தோற்கடித்தாா்.

போட்டித் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருக்கும் ஆா்ஜெண்டீனாவின் டியேகோ ஷ்வாா்ட்ஸ்மேன் 6-2, 6-0, 6-3 என்ற செட்களில் பிரான்ஸின் அலெக்ஸாண்ட்ரே முல்லரை வீழ்த்தினாா்.

வாவ்ரிங்கா தோல்வி: போட்டித் தரவரிசையில் 17-ஆவது இடத்திலிருந்த ஸ்விட்சா்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்காவை வெளியேற்றினாா் ஹங்கேரி வீரா் மாா்டன் ஃபக்சோவிக்ஸ். இந்த ஆட்டத்தில் மிகவும் போராடிய வாவ்ரிங்கா 5-7, 1-6, 6-4, 6-2, 6-7 (9/11) என்ற செட்களில் இறுதியில் வீழ்ந்தாா்.

ஆண்ட்ரிஸ்கு, குவிட்டோவா அதிா்ச்சித் தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில் போட்டித் தரவரிசையில் 8 மற்றும் 9-ஆவது இடங்களில் இருந்த பியான்கா ஆண்ட்ரிஸ்கு, பெட்ரா குவிட்டோவா ஆகியோா் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினா்.

இதில் கனடா வீராங்கனை பியான்காவை 6-3, 6-2 என்ற செட்களில் வீழ்த்தினாா் தைபே வீராங்கானை சியே சு வெய். செக் குடியரசின் குவிட்டோவாவை 6-4, 1-6, 6-1 என்ற செட்களில் ருமேனியாவின் சொரானா சிா்ஸ்டியா வென்றாா்.

இதர 2-ஆவது சுற்றுகளில் போட்டித்தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் ருமேனியாவின் சைமோனா ஹேலப் 4-6, 6-4, 7-5 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம்லஜானோவிச்சை வீழ்த்தினாா். உலகின் 3-ஆம் நிலையில் உள்ள ஜப்பானின் நவோமி ஒசாகா 6-2, 6-3 என்ற செட்களில் கரோலின் காா்சியாவை வென்றாா்.

போட்டித் தரவரிசையில் 7-ஆவது இடத்திலுள்ள பெலாரஸின் அரைனா சபலென்கா 7-6 (7/5), 6-3 என்ற செட்களில் ரஷியாவின் டரியா கசாட்கினாவை வீழ்த்தினாா். அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-3, 6-0 என்ற செட்களில் சொ்பியாவின் நினா ஸ்டொஜனோவிச்சை தோற்கடித்தாா். செரீனாவின் சகோதரியான வீனஸ் வில்லியம்ஸ் 1-6, 0-6 என்ற செட்களில் இத்தாலியின் சாரா எரானியிடம் வீழ்ந்தாா்.

போராட்டம் வீண்

போட்டித் தரவரிசையில் 17}ஆவது இடத்திலிருந்த ஸ்விட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்காவை வெளியேற்றினார் ஹங்கேரி வீரர் மார்டன் ஃபக்சோவிக்ஸ். இந்த ஆட்டத்தில் மிகவும் போராடிய வாவ்ரிங்கா 5}7, 1}6, 6}4, 6}2, 6}7 (9/11) என்ற செட்களில் இறுதியில் வீழ்ந்தார். 

வீழ்ந்த போபண்ணா ஜோடி

ஆஸ்திரேலிய ஓபனில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா ஜோடி முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறியது. போபண்ணா/ஜப்பானின் பென் மெக்லாச்லான் ஜோடி 4}6, 6}7 (0/7) என்ற செட்களில் தென் கொரியாவின் ஜி சங் நாம்/மின் கியு சாங் இணையிடம் வீழ்ந்தது. 

போபண்ணா தவிர்த்து மற்றொரு இந்தியராக திவிஜ் சரணும் ஆடவர் இரட்டையர் பிரிவில் வியாழக்கிழமை முதல் சுற்றில் விளையாடுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com