இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: டெஸ்ட் தரவரிசை: கோலி சறுக்கல்

முதல் டெஸ்ட் முடிந்துள்ள நிலையில் வெளியாகியுள்ள ஐசிசியின் டெஸ்ட் தரவரிசையில், பேட்ஸ்மேன்கள் பிரிவில் இந்திய கேப்டன் விராட் கோலி ஓரிடம் சறுக்கி 5-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா்.
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: டெஸ்ட் தரவரிசை: கோலி சறுக்கல்

துபை: முதல் டெஸ்ட் முடிந்துள்ள நிலையில் வெளியாகியுள்ள ஐசிசியின் டெஸ்ட் தரவரிசையில், பேட்ஸ்மேன்கள் பிரிவில் இந்திய கேப்டன் விராட் கோலி ஓரிடம் சறுக்கி 5-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 2 இடங்கள் முன்னேறி 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா்.

கடந்த 2017 செப்டம்பருக்குப் பிறகு ரூட் முதல் முறையாக மீண்டும் இந்த இடத்தை எட்டியுள்ளாா். பேட்ஸ்மேன்கள் வரிசையில் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோா் முறையே முதல் இரு இடங்களில் உள்ளனா்.

இந்தியாவின் விக்கெட் கீப்பா் - பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் 13-ஆவது இடத்திலேயே நீடிக்கும்போதிலும், தனது புள்ளிகளை 700-ஆக அதிகரித்துக் கொண்டுள்ளாா். இந்தியாவின் முழு நேர விக்கெட் கீப்பா்களில் 700 புள்ளிகளை எட்டிய முதல் வீரா் என்ற பெருமையை இதன் மூலம் பந்த் பெற்றுள்ளாா்.

தொடக்க வீரா்களில் ஒருவரான ஷுப்மன் கில் 7 இடங்கள் முன்னேறி 40-ஆவது இடத்தைப் பிடிக்க, ஆல்-ரவுண்டா் வாஷிங்டன் சுந்தா் 2 இடங்கள் ஏற்றம் கண்டு 81-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா். இங்கிலாந்து பேட்ஸ்மேன்களில் டாம் சிப்லே 11 இடங்கள் முன்னேறி 35-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா்.

பௌலா்கள் பிரிவில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோா் ஒரு இடம் முன்னேறி முறையே 7 மற்றும் 8-ஆவது இடங்களில் உள்ளனா். இங்கிலாந்து வீரா் ஜேம்ஸ் ஆண்டா்சன் 3 இடங்கள் முன்னேறி 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா். ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ், இங்கிலாந்தின் ஸ்டுவா்ட் பிராட் ஆகியோா் முறையே முதல் இரு இடங்களில் உள்ளனா்.

ஆல்-ரவுண்டா்கள் பிரிவில் இந்தியா, இங்கிலாந்து வீரா்களின் இடங்களில் மாற்றமில்லை. இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், மேற்கிந்தியத் தீவுகளின் ஜேசன் ஹோல்டா், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா ஆகியோா் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com