இஷாந்த் சர்மா: 100 டெஸ்டுகளில் விளையாடும் கடைசி இந்திய வேகப்பந்து வீச்சாளர்!

இஷாந்த் சர்மாவுக்கு அந்த நிலை ஏற்படவில்லை என்றார்... 
இஷாந்த் சர்மா: 100 டெஸ்டுகளில் விளையாடும் கடைசி இந்திய வேகப்பந்து வீச்சாளர்!

100 டெஸ்டுகளில் விளையாடும் கடைசி இந்திய வேகப்பந்து வீச்சாளராக இஷாந்த் சர்மா இருப்பார் என இந்திய முன்னாள் விக்கெட் கீப்பரும் தில்லி முன்னாள் வீரருமான விஜய் தாஹியா கூறியுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணிக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. 2-வது டெஸ்டை 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 3-வது டெஸ்ட், ஆமதாபாத்தில் நாளை முதல் தொடங்கவுள்ளது.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தனது 100-வது டெஸ்டை நாளை விளையாடவுள்ளார். இதுவரை 99 டெஸ்டுகளில் விளையாடியுள்ள 32 வயது இஷாந்த் சர்மா, 302 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 80 ஒருநாள், 14 டி20 ஆட்டங்களிலும் அவர் விளையாடியுள்ளார். 19 வயதில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானதால் அவரால் 32 வயதுக்குள் 100 டெஸ்டுகளில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்திய கிரிக்கெட்டில் கபில் தேவ் மட்டுமே 100 டெஸ்டுகளில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர். அந்தப் பெருமை இஷாந்த் சர்மாவுக்கு நாளை கிடைக்கவுள்ளது. 

எனினும் இதன்பிறகு வேறு எந்த இந்திய வேகப்பந்து வீச்சாளராலும் 100 டெஸ்டுகளில் விளையாடுவது கடினம் என்கிறார் இந்திய முன்னாள் விக்கெட் கீப்பரும் தில்லி முன்னாள் வீரருமான விஜய் தாஹியா. பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

100 டெஸ்டுகளில் விளையாடும் கடைசி இந்திய வேகப்பந்து வீச்சாளராக இஷாந்த் சர்மா இருப்பார் என நினைக்கிறேன். வேறு யாரும் விளையாட வாய்ப்பில்லை. பெரும்பாலான வேகப்பந்து வீச்சாளர்கள் ஐபிஎல் மற்றும் வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாட தங்கள் சக்தியைச் செலவிடுவதால் இந்திய அணிக்காக அவர்கள் 100 டெஸ்டுகளில் விளையாடுவது கடினம். 

தன்னுடைய கேப்டனுக்கு என்ன தேவையோ அதை வழங்கியதால் தான் இஷாந்த் சர்மாவால் இவ்வளவு காலம் விளையாட முடிந்தது. ரன்களைக் கட்டுப்படுத்தும் பந்துவீச்சாளராக இஷாந்த் சர்மாவை தோனி பயன்படுத்தினார். சுழற்பந்து வீச்சாளர்களைப் போல ஒருநாளைக்கு 20 ஓவர்களை வீசுவார். முதல்தர கிரிக்கெட்டை அதிகமாக விளையாடி அவர் சோர்வடையவில்லை. உடனடியாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். மூன்று வருடங்கள் ரஞ்சி போட்டியில் விளையாடும் வேகப்பந்து வீச்சாளர்கள் விரைவில் சோர்வடைந்து விடுவார்கள். வேகத்தில் சமரசம் செய்துகொள்வார்கள். இஷாந்த் சர்மாவுக்கு அந்த நிலை ஏற்படவில்லை என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com