இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: கேப்டனின் தேவையை புரிந்துகொள்வது முக்கியம்

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் 3-ஆவது ஆட்டம், இந்திய வேகப்பந்துவீச்சாளா் இஷாந்த் சா்மாவின் 100-ஆவது டெஸ்டாகும்.
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: கேப்டனின் தேவையை புரிந்துகொள்வது முக்கியம்

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் 3-ஆவது ஆட்டம், இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவின் 100-ஆவது டெஸ்டாகும். இதுவரை 99 ஆட்டங்களில் 302 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள அவர், கபில் தேவுக்குப் பிறகு 100 டெஸ்டுகளில் விளையாடிய ஒரே இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்றபெருமையை எட்டவிருக்கிறார். கடந்த சுமார் 15 ஆண்டுகளில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே, எம்.எஸ். தோனி, விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே ஆகியோரின் தலைமையின் கீழ் விளையாடியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது தொடர்ச்சி குறித்து இஷாந்த் கூறுவது என்ன?'

"இதுவரை நான் எந்த கேப்டன்களுடன் எல்லாம் பணியாற்றியுள்ளேனோ, அவர்கள் அனைவருமே என்னை நன்றாகப் புரிந்துகொண்டுள்ளனர். ஆனால், ஆட்டத்தைப் பொருத்தவரை அவர்களின் தேவை என்ன என்பதை நான் புரிந்துகொண்டு செயல்படுவதே முக்கியமாகும். அதை சரியாகச் செய்தால் இருவர் இடையேயான புரிதல் மேம்படும். 

ஒருநாள், டி20 தொடர்களில் தேர்வாகாதது குறித்து நான் சிந்திப்பதில்லை. ஏனெனில் அது எனது டெஸ்ட் ஆட்டத்தை பாதிப்பதை நான் விரும்பவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதை எண்ணி திருப்தியுடன் இருக்கிறேன். அதனாலேயே 100-ஆவது டெஸ்டை நெருங்கியுள்ளேன். கபில் தேவின் மைல் கல்லை (131 டெஸ்ட்) எட்டுவதற்கு நீண்ட காலம் வேண்டும். அது குறித்து நான் தற்போது சிந்திக்கவில்லை. 

இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு தேர்வாகி, அதில் விளையாடுவதே எனது தற்போதைய இலக்கு. ஜேம்ஸ் ஆண்டரசன் போல் 38 வயது வரை விளையாடுவது குறித்து இப்போது யோசிக்கவில்லை. வயது அதிகமாகும்போது பயிற்சியுடன், உடல்நலத்தையும் சேர்த்து கவனிக்க வேண்டும். ஒவ்வொரு ஆட்டமாக முன்னேறவே யோசிக்கிறேன். எனக்குப் பிறகு இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு பிரிவுக்கு ஜஸ்பிரீத் பும்ரா தலைமையாக இருப்பார் என நினைக்கிறேன். 

3-ஆவது டெஸ்ட்டைப் பொருத்தவரை, மறுசீரமைப்பு செய்யப்பட்ட ஆடுகளத்தில் விளையாட இருக்கிறோம். எனவே ஆட்டத்தைத் தொடங்கிய பிறகே எந்த மாதிரியான உத்தியைக் கையாள்வது என்பது குறித்து யோசிக்க முடியும். பனிப்பொழிவு உள்பட பல்வேறு காரணங்களின் அடிப்படையிலேயே ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்க இயலும். பிங்க் நிற பந்துகொண்டு விளையாடும்போது ஒவ்வொரு செஷனுக்குமே ஆட்டத்தின் போக்கு மாறுபடலாம். பெளலிங்கில் ஆதிக்கம் செலுத்துவது வேகப்பந்துவீச்சாளர்களா, ஸ்பின்னர்களா என அப்போது தான் தெரியவரும்'


எந்த ஆடுகளத்துக்கும் தயாராக வேண்டும்


"படேல் மைதானத்தின் ஆடுகளத்தில் தற்போது புற்கள் நிறைந்துள்ளன. ஆட்டம் நடைபெறும் நாளில் நிச்சயம் அவ்வாறு இருக்காது என்று தெரியும். ஆகவே எந்த மாதிரியான ஆடுகளமாக அது தயாராகப் போகிறது என்பதை அறிய காத்திருக்கிறோம். வேகப்பந்துவீச்சாளர் என்ற முறையில், எந்த மாதிரியான ஆடுகளத்திலும் பெளலிங் செய்யும் வகையில் நாங்கள் தயாராக இருக்க வேண்டும். 

சென்னை சேப்பாக்கம் மைதான ஆடுகளத்திலிருந்து பெரிதாக வித்தியாசப்படுத்தும் வகையில் இந்த ஆடுகளம் இருக்காது என நினைக்கிறேன். பந்து ஸ்விங் ஆகும் பட்சத்தில் அது சாதகமாக இருக்கும். அவ்வாறு ஆகாத பட்சத்தில் எங்களுக்கான பணி இன்னும் அதிகமாக இருக்கும். எஸ்ஜி பிங்க் நிற டெஸ்ட் பந்தானது, சிகப்பு நிற பந்தைக் காட்டிலும் நன்றாக ஸ்விங் ஆவதாக வலைப் பயிற்சியின்போது உணர்ந்தேன். 

சுழற்சி முறையில் வீரர்களை பயன்படுத்துவதன் தேவையை புரிந்துகொள்ள வேண்டும். அதிக எண்ணிக்கையிலான ஆட்டங்களில் விளையாடுவதால் வீரர்களை அவ்வாறு பயன்படுத்துவதன் மூலமாகவே அவர்களுக்கு போதிய ஓய்வு கிடைப்பதுடன், அவர்களால் அடுத்தடுத்த ஆட்டங்களுக்கு தயாராகவும் முடியும். 2-ஆவது டெஸ்டில் ஓய்வளிக்கப்பட்டாலும், தற்போது 3-ஆவது டெஸ்ட்டுக்காக உடற்தகுதியுடன் என்னை தயாராக வைத்துள்ளேன்'

இந்திய ஆடுகளங்கள் சவாலானவை


"டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் எந்த மாதிரியான ஆடுகளத்திலும் விளையாடும் வகையில் தயாராக இருக்க வேண்டும். வெளிநாட்டு பேட்ஸ்மேன்களுக்கு கடினமான ஆடுகளங்களைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இங்கு விளையாடி வெற்றிகரமான வீரராக உருவெடுப்பது சவாலானது. இங்கிலாந்து ஆடுகளங்களும் அப்படிப்பட்டவையே. 

இந்த சவால் தான் கிரிக்கெட்டின் ஒரு பகுதியாகும். இதை நாங்கள் விரும்புகிறோம். 2-ஆவது டெஸ்டில் நான் அதிக ஓவர்கள் வீசாதது குறித்து அதிகம் யோசிக்க வேண்டியதில்லை. புற்கள் நிறைந்த ஆடுகளமாக இருந்திருந்தால் நிச்சயம் நான் கூடுதலாக ஓவர்கள் வீசியிருப்பேன். பிங்க் நிற பந்து கொண்டு விளையாடப்படும் 3-ஆவது டெஸ்டில் நான் பெளலிங் செய்ய அதிக வாய்ப்புகள் இருக்கும் என நினைக்கிறேன். 

உலகெங்கிலும் உள்ள ஆடுகளங்களில் பகலிரவு டெஸ்டில் இரவில் பெளலிங் செய்யும்போது பிங்க் பந்து பேட்ஸ்மேன்களுக்கு சற்று சவால் அளிப்பதாக இருக்கும். அப்போது ஆட்டம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக மாறும். எனினும், இந்த புதிய மைதானம் எவ்வாறு இருக்கும் என ஆட்டத்தின்போதே தெரியும்'

அணியில் உமேஷ் யாதவ்


இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரு டெஸ்டுகளுக்கான இந்திய அணியில் உமேஷ் யாதவ் இணைந்துள்ளார். காயத்திலிருந்து மீண்ட அவரது உடற்தகுதி ஞாயிற்றுக்கிழமை சோதிக்கப்பட்ட நிலையில், அதில் தேர்ச்சி பெற்றதை அடுத்து அவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

விஜய் ஹஸாரே கோப்பை போட்டியில் மும்பை அணி சார்பில் விளையாடுவதற்காக ஷர்துல் தாக்குர் டெஸ்ட் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 

பிங்க் பந்து கொண்டு விளையாடப்படும் 3-ஆவது டெஸ்டில் இந்தியா 3 வேகப்பந்துவீச்சாளர்களைக் கொண்டு களம் காணலாம் எனத் தெரிகிறது. 4 ஆட்டங்களைக் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது. 

அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே (துணை கேப்டன்), லோகேஷ் ராகுல், ஹார்திக் பாண்டியா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரித்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், இஷாந்த் சர்மா, ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ், உமேஷ் யாதவ்.

இந்தியாவை கட்டுப்படுத்திவிடுவோம்


"இந்த டெஸ்ட் தொடரை நிச்சயம் வெல்வோம். அந்த வகையில் 3-ஆவது டெஸ்ட் எங்களுக்கு மிகவும் முக்கியம். அதில் வென்றுவிட்டால் கடைசி டெஸ்டை நிச்சயம் டிரா ஆவது செய்து இந்தியாவை கட்டுப்படுத்திவிடுவோம். இந்தியாவின் ஆட்டத்தின் அதன் ஸ்பின்னர்கள் முக்கியப் பங்காற்றுகிறார்கள். 
எப்போதும் வெற்றியை நோக்கி தான் விளையாடுகிறோம். 3-ஆவது டெஸ்ட் எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் என நினைக்கிறோம். உண்மையில் பிங்க் பந்து டெஸ்ட் போட்டியை வழக்கமான ஒன்று போலவே நான் நினைக்கிறேன். அதைக் கொண்டு இருமுறை விளையாடியிருக்கிறேன். 

பகல் நேரத்துடன் ஒப்பிடுகையில் இரவில் விளக்கு வெளிச்சத்தில் விளையாடும்போது, பிங்க் பந்து சற்று பெளலர்களுக்கு சாதகமாக மாறும். 

இரவு வெளிச்சத்தில் ஆடுவதைப் பொருத்தவரை இங்கிலாந்து நேரத்துடன் ஒப்பிடுகையில் இங்கு நேர அளவு சற்று வித்தியாசமாக இருப்பதால் அந்த புதிய சூழலை எதிர்கொண்டு விளையாடப் பழக வேண்டும். இருந்தாலும் பிங்க் பந்துகொண்டு விளையாட ஆர்வமுடன் இருக்கிறேன். 

துணைக் கண்டத்தில் விளையாடும்போது 5 அல்லது 6 விக்கெட்டுகள் வீழ்த்துமாறு வேகப்பந்துவீச்சாளர்களிடம் கேப்டன்கள் எதிர்பார்ப்பதில்லை. சுழற்சி முறையில் வீரர்களை பயன்படுத்துவதில் நன்மை இருப்பதாகவே உணர்கிறேன். 2-ஆவது டெஸ்டில் என்னால் விளையாடியிருக்க முடியும் என்றாலும், அப்போது கிடைத்த ஓய்வால் தற்போது பகலிரவு டெஸ்டுக்கு மிகச் சிறப்பாகத் தயாராகியுள்ளேன்'

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com