உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியல்: இந்திய அணிக்கு நெருக்கடியை உருவாக்கியுள்ள நியூசிலாந்து

அதிகப் புள்ளிகள், அதிக சதவீதத்தைக் கொண்ட முதல் 5 அணிகள்...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியல்: இந்திய அணிக்கு நெருக்கடியை உருவாக்கியுள்ள நியூசிலாந்து

பாகிஸ்தானுக்கு எதிராக 2-0 என டெஸ்ட் தொடரை வென்றுள்ள நியூசிலாந்து அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணிக்குக் கடும் சவாலை அளித்துள்ளது. 

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றியை அடைந்துள்ளது நியூசிலாந்து அணி. இதன்மூலம் முதல்முறையாக நெ.1 டெஸ்ட் அணியாக உயர்ந்துள்ள நியூசி. அணி டெஸ்ட் தொடரை 2-0 என வெற்றி அடைந்துள்ளது.

கிறைஸ்ட்சா்ச் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் முதல் நாளிலேயே 297 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அணியின் தரப்பில் அஸாா் அலி மட்டும் அதிகபட்சமாக 97 ரன்கள் அடிக்க, நியூஸிலாந்து தரப்பில் கைல் ஜேமிசன் 5 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா்.

நேற்று, வில்லியம்சன் இரட்டைச் சதத்தையும் நிகோல்ஸ் சதத்தையும் பூர்த்தி செய்தார்கள். வில்லியம்சன் 238 ரன்களிலும் நிகோல்ஸ் 157 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார்கள். டேரில் மிட்செல் 102 ரன்கள் எடுத்தார். 

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 158.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 659 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் முதல் இன்னிங்ஸில் அந்த அணி 362 ரன்கள் முன்னிலை பெற்றது.  

2-வது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 186 ரன்களுக்குச் சுருண்டு இன்னிங்ஸ் தோல்வியை அடைந்துள்ளது. கைல் ஜேமிசன் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒரு இன்னிங்ஸ் மற்றும் 176 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ள நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை 2-0 என வென்று நெ.1 டெஸ்ட் அணியாக உயர்ந்துள்ளது. கைல் ஜேமிசன் ஆட்ட நாயகன் விருதையும் கேன் வில்லியம்சன் தொடர் நாயகன் விருதையும் பெற்றுள்ளார்கள்.

டெஸ்ட் தொடரை 2-0 என வென்றுள்ள நியூசிலாந்து அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 420 புள்ளிகளுடன் 0.70 சதவீதப் புள்ளியுடன் உள்ளது. இதனால் 390 புள்ளிகளுடன் 0.722 சதவீதம் கொண்டுள்ள இந்திய அணிக்குக் கடும் சவாலை அளித்துள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் அதிக வெற்றிகளைக் குவிக்க வேண்டிய நிலைமை இந்திய அணிக்குத் தற்போது ஏற்பட்டுள்ளது. 

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: அதிகப் புள்ளிகள், அதிக சதவீதத்தைக் கொண்ட முதல் 5 அணிகள்

ஆஸ்திரேலியா - 0.767 சதவீதப் புள்ளிகள் - 322 புள்ளிகள்
இந்தியா - 0. 722 - 390 புள்ளிகள்
நியூசிலாந்து - 0.70 - 420 புள்ளிகள்
இங்கிலாந்து - 0.608 - 292 புள்ளிகள்
தென் ஆப்பிரிக்கா - 0.40 - 144 புள்ளிகள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com