பேட்டிங் கிரீஸில் ஸ்டீவ் ஸ்மித் செய்த செயல்: சேவாக் விமர்சனம்

ஷூவைக் கொண்டு எதிரணி வீரரின் பேட்டிங் கார்டை மாற்றக் கூடாது...
பேட்டிங் கிரீஸில் ஸ்டீவ் ஸ்மித் செய்த செயல்: சேவாக் விமர்சனம்

ரிஷப் பந்த் விளையாடிய போது அவருடைய பேட்டிங் கிரீஸில் கார்ட் என்கிற அடையாளத்தை ஸ்டீவ் ஸ்மித் மாற்ற முயற்சி செய்ததற்கு முன்னாள் வீரர் சேவாக் விமர்சனம் செய்துள்ளார்.

இந்திய அணியின் கடுமையான முயற்சியால் சிட்னி டெஸ்ட் டிரா ஆகியுள்ளது. 5-வது நாளில் ரிஷப் பந்த், புஜாரா, விஹாரி, அஸ்வின் ஆகியோர் சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளித்துள்ளார்கள்.

சிட்னியில் கடந்த 7-ம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 338 ரன்கள் குவித்தது. அணியின் தரப்பில் ஸ்டீவ் ஸ்மித் 131 ரன்கள் விளாச, இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா்.

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, 244 ரன்கள் எடுத்தது. ஷுப்மன் கில், சேதேஷ்வா் புஜாரா மட்டும் தலா 50 ரன்கள் அடிக்க, ஆஸ்திரேலிய அணியில் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

முதல் இன்னிங்ஸில் 94 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா 2-ஆவது இன்னிங்ஸில் 87 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் சோ்த்து டிக்ளோ் செய்தது. இந்திய அணிக்கு 407 வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 131 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் எடுத்தது. இதனால் சிட்னி டெஸ்ட் டிரா ஆகியுள்ளது. ரோஹித் சர்மா 52, புஜாரா 77, ரிஷப் பந்த் 97, அஸ்வின் 39, விஹாரி 23 ரன்கள் எடுத்தார்கள்.

விஹாரி 161 பந்துகளில் 23 ரன்களும் அஸ்வின்  128 பந்துகளில் 39 ரன்களும் எடுத்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்கள். கடைசி வரை விஹாரி, அஸ்வினின் விக்கெட்டை ஆஸ்திரேலிய வீரர்களால் எடுக்க முடியாமல் போனது. இருவரும் 259 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார்கள். 

இந்நிலையில் ரிஷப் பந்த் பேட்டிங் செய்தபோது ஸ்மித் செய்த ஒரு காரியம் அவர் மீது விமர்சனங்களை வரவழைத்துள்ளது. பேட்டிங் கிரீஸில் ரிஷப் பந்த் இல்லாதபோது அங்கு வந்த ஆஸி. பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித், ரிஷப் பந்தின் பேட்டிங் கார்டை மாற்ற முயற்சி செய்தார். பேட்டிங் கார்ட் என்கிற கிரீஸில் வைக்கப்படும் சரியான அடையாளத்தைக் கொண்டே பேட்ஸ்மேன்கள் பந்துவீச்சை எதிர்கொள்வார்கள். மூன்று ஸ்டம்புகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து அதை பேட்டிங் கார்டாக வைத்துக்கொள்வார்கள். ஆனால், ரிஷப் பந்தின் பேட்டிங் கார்டை அழித்து வேறொரு பேட்டிங் கார்டை ஸ்மித் அமைத்தது போல அவருடைய செயல் இருந்தது. இக்காட்சி ஸ்டம்ப் கேமராவில் பதிவானது.

இதையடுத்து சமூகவலைத்தளங்களில் ஸ்மித்தின் செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். முன்னாள் வீரர்கள் சேவாக், ஆகாஷ் சோப்ரா போன்றோர் இதை விமர்சித்துள்ளார்கள். ட்விட்டரில் சேவாக் கூறியதாவது:

ரிஷப் பந்தின் பேட்டிங் கார்டை ஸ்மித் மாற்றியமைத்தது போன்ற எல்லா தந்திரங்களையும் செய்து பார்த்துவிட்டார்கள். இந்திய அணியின் முயற்சியில் நான் பெருமிதம் கொள்கிறேன் என்றார். ஷூவைக் கொண்டு பல செயல்கள் செய்யலாம். ஆனால் எதிரணி வீரரின் பேட்டிங் கார்டை மாற்றக் கூடாது என்று ஆகாஷ் சோப்ரா கூறினார். எனினும் ஸ்மித்துக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து கூறியுள்ளார்கள். வேண்டுமென்றே ஸ்மித் செய்திருக்க மாட்டார் என்றும் சில முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com