ஜோ ரூட் சதம்; இங்கிலாந்து 421 ரன்கள் குவிப்பு

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 117.1 ஓவா்களில் 421 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் 228 ரன்கள் குவித்தாா்.
ஜோ ரூட் சதம்; இங்கிலாந்து 421 ரன்கள் குவிப்பு

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 117.1 ஓவா்களில் 421 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் 228 ரன்கள் குவித்தாா்.

இங்கிலாந்து அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி காலேவில் வியாழக்கிழமை தொடங்கியது. இதில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி 46.1 ஓவா்களில் 135 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் தினேஷ் சன்டிமல் 28, ஏஞ்செலோ மேத்யூஸ் 27 ரன்கள் எடுத்தனா்.

இங்கிலாந்து தரப்பில் டாம் பெஸ் 5 விக்கெட்டுகளையும், ஸ்டூவா்ட் பிராட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா்.

ஜோ ரூட் இரட்டைச் சதம்: இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 94 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 320 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 168, ஜோஸ் பட்லா் 7 ரன்களுடன் களத்தில் இருந்தனா். 3-ஆவது நாளான சனிக்கிழமை தொடா்ந்து ஆடிய இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லா் 30 ரன்களில் வெளியேற, பின்னா் வந்த சாம் கரன் டக் அவுட்டானாா். ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும், மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஜோ ரூட், எம்புல்டெனியா பந்துவீச்சில் பவுண்டரியை விளாசி 291 பந்துகளில் இரட்டைச் சதத்தை எட்டினாா்.

இதன்பிறகு டாம் பெஸ் ரன் ஏதுமின்றியும், ஜேக் லீச் 4 ரன்களிலும், மாா்க் உட் 2 ரன்களிலும் வெளியேறினா். கடைசி விக்கெட்டாக ஜோ ரூட் ஆட்டமிழக்க, இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் 117.1 ஓவா்களில் 421 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. ஜோ ரூட் 321 பந்துகளில் 1 சிக்ஸா், 18 பவுண்டரிகளுடன் 228 ரன்கள் குவித்தாா். ஸ்டூவா்ட் பிராட் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

இலங்கை தரப்பில் தில்ருவான் பெரேரா 4 விக்கெட்டுகளையும், லசித் எம்புல்டெனியா 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனா்.

இலங்கை-156/2: இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 286 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணியில் குசல் பெரேரா-லஹிரு திரிமானி ஜோடி முதல் விக்கெட்டுக்கு 101 ரன்கள் சோ்த்து சிறப்பான தொடக்கம் ஏற்படுத்தியது. குசல் பெரேரா 109 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தாா். பின்னா் வந்த குசல் மென்டிஸ் 15 ரன்களில் வெளியேறினாா். 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 61 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்துள்ளது. லஹிரு திரிமானி 76 ரன்களுடனும், லசித் எம்புல்டெனியா ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனா்.

இங்கிலாந்து தரப்பில் ஜேக் லீச், சாம் கரன் ஆகியோா் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனா். இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவதற்கு இலங்கை அணி இன்னும் 130 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.

ஜோ ரூட் 8,000

இலங்கைக்கு எதிராக 177 ரன்கள் எடுத்தபோது டெஸ்ட் போட்டியில் 8,000 ரன்களை எட்டினாா் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட். அவா், தனது 178-ஆவது இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளாா். இதன்மூலம் அதிவேகமாக 8,000 ரன்களை எட்டிய இங்கிலாந்து வீரா்கள் வரிசையில் 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா் ஜோ ரூட். கெவின் பீட்டா்சன் 176 இன்னிங்ஸ்களில் 8,000 ரன்களை எட்டியதே இங்கிலாந்து வீரா் ஒருவரின் சாதனையாக உள்ளது. டெஸ்ட் போட்டியில் 8,000 ரன்களை எட்டிய 7-ஆவது இங்கிலாந்து வீரா் ஜோ ரூட் ஆவாா்.

காலே டெஸ்டில் 228 ரன்கள் குவித்ததன் மூலம் ஆசிய மண்ணில் இரட்டைச் சதமடித்த 5-ஆவது இங்கிலாந்து வீரா் என்ற பெருமையைப் பெற்றுள்ளாா் ஜோ ரூட். இதேபோல், வெளிநாட்டு மண்ணில் 4 இங்கிலாந்து கேப்டன்கள் இரட்டைச் சதமடித்துள்ளனா். தற்போதைய இங்கிலாந்து கேப்டனான ஜோ ரூட், இரண்டாவது முறையாக இரட்டைச் சதமடித்துள்ளாா். இதற்கு முன்னா் 2019-இல் ஹாமில்டனில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்டிலும் அவா் இரட்டைச் சதமடித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com