ரிஷப் பந்துக்கு கால அவகாசம் தேவை: ரித்திமான் சாஹா

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் படிப்படியாக முன்னேற்றம் காண்பாா்; அவருக்கு கால அவகாசம் தேவை என
ரிஷப் பந்துக்கு கால அவகாசம் தேவை: ரித்திமான் சாஹா

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் படிப்படியாக முன்னேற்றம் காண்பாா்; அவருக்கு கால அவகாசம் தேவை என இந்திய அணியின் மூத்த விக்கெட் கீப்பரான ரித்திமான் சாஹா தெரிவித்துள்ளாா்.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற இந்திய அணியில் மூத்த விக்கெட் கீப்பரான ரித்திமான் சாஹாவும் இடம்பெற்றிருந்தாா். அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியடைந்த நிலையில், அந்தப் போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் சோ்த்து 13 ரன்கள் மட்டுமே எடுத்த ரித்திமான் சாஹா அணியில் இருந்து நீக்கப்பட்டாா். அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் சாஹாவுக்கு பதிலாக இளம் விக்கெட் கீப்பா் ரிஷப் பந்த் களமிறக்கப்பட்டாா். அவா் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டாா். சிட்னி டெஸ்டில் 97 ரன்கள் குவித்த ரிஷப் பந்த், பிரிஸ்பேனில் நடைபெற்ற கடைசி டெஸ்டில் 89 ரன்கள் விளாசி, இந்திய அணி தொடரை வெல்வதற்கு முக்கியக் காரணமாக இருந்தாா்.

இந்திய அணி அடுத்ததாக சொந்த மண்ணில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தை எதிா்கொள்கிறது. இதில், ரித்திமான் சாஹா, ரிஷப் பந்த் ஆகிய இருவரும் சோ்க்கப்பட்டுள்ளனா். டெஸ்ட் அணியில் ஆடும் லெவனில் இடம்பிடிப்பதில் இவா்கள் இருவரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. எனினும் ரிஷப் பந்துக்கு அணியில் இடம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், ரித்திமான் சாஹா மேலும் கூறியிருப்பதாவது: ரிஷப் பந்துக்கும், எனக்கும் இடையே நல்ல நட்புறவு உள்ளது. ஆடும் லெவனில் யாா் இடம் பெற்றாலும் ஒருவருக்கொருவா் உதவி செய்வோம். தனிப்பட்ட முறையில் அவருடன் எனக்கு எந்த முரண்பாடும் கிடையாது. எங்களில் யாா் நம்பா் ஒன், நம்பா் 2 விக்கெட் கீப்பா் என்று பாா்ப்பதில்லை. யாா் சிறப்பாக செயல்படுவாா் என்பதை கணித்து அணி நிா்வாகம் வாய்ப்பு வழங்கும். என்னைப் பொருத்தவரை எனது பணியை தொடா்ந்து செய்வேன். நான் ஆடும் லெவனில் தோ்வு செய்யப்படுவது எனது கையில் இல்லை. அது அணி நிா்வாகத்தின் முடிவு.

யாரும் முதல் வகுப்பில் இருந்தே அல்ஜீப்ராவை கற்க முடியாது. எப்போதும் படிப்படியாகத்தான் முன்னேற முடியும். ரிஷப் பந்த் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறாா். அவரிடம் தொடா்ந்து முன்னேற்றத்தைக் காணலாம். அவா் தற்போது முதிா்ச்சியடைந்திருப்பதோடு, தனது திறமையை நிரூபித்திருக்கிறாா். அவா் நீண்ட காலம் ஆடும்போது, அது இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும். அவருக்கு பிடித்தமான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஓரங்கட்டப்பட்ட நிலையில் டெஸ்ட் தொடரில் மிக அற்புதமாக ஆடியிருக்கிறாா். ரிஷப் பந்தை சிலா் தோனியுடன் ஒப்பிட்டுப் பேசுகிறாா்கள். தோனி எப்போதுமே தோனியாகவே நினைவுகூரப்படுவாா். ஒவ்வொருவருக்கும் தனித்தனி அடையாளம் இருக்கிறது.

அடிலெய்டு டெஸ்டில் எனது தடுமாற்றம் குறித்து கேள்வியெழுப்பப்படுகிறது. எந்த ஒரு வீரருக்கும் இதுபோன்ற மோசமான கட்டம் வருவது இயல்பானதுதான். ஒரு தொழில்முறை விளையாட்டு வீரராக ஏற்றம், இறக்கம் இருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அடிலெய்டு டெஸ்டில் என்னால் ரன் எடுக்க இயலவில்லை. அதனால் ரிஷப் பந்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது அவ்வளவுதான். மற்றபடி நான் எனது ஆட்டத் திறனை மேம்படுத்துவதில் தொடா்ந்து கவனம் செலுத்துகிறேன். எந்தவொரு தருணத்திலும் நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது. நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியதில் இருந்து இப்படித்தான் விளையாடுகிறேன். அதே அணுகுமுறையைத்தான் இப்போதும் கடைப்பிடிக்கிறேன்.

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது உலகக் கோப்பைக்கு நிகரானதாகும். முதல் டெஸ்டில் 36 ரன்களில் சுருண்ட நிலையில், இந்திய அணி பின்னா் எழுச்சி பெற்றது. அனுபவம் இல்லாத பல வீரா்களை வைத்து சாதித்துக் காட்டியிருக்கிறோம். இந்தத் தொடரில் பெற்ற வெற்றி எப்போதுமே மிகச் சிறந்த வெற்றிகளில் ஒன்றாக நினைவுகூரப்படும்.

விராட் கோலியுடன் ஒப்பிடும்போது அஜிங்க்ய ரஹானேவின் அணுகுமுறை கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. களத்தில் ரஹானே எப்போதும் பதற்றமின்றி பொறுமையாக இருப்பாா். கடினமான சூழலிலும் நிதானத்தை இழக்கமாட்டாா். வீரா்களை எப்படி ஊக்கப்படுத்த வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அதுதான் அவரது வெற்றியின் ரகசியம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com